'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவ மொழி..
சிரிப்பும், மகிச்சியும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும் என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.
நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கி விடும்' என்பது சிறப்பு.
நகைச்சுவை உணர்வானது,மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார்.
காமராஜரிடம் கிராம மக்கள் வந்து “ஐயா, எங்களுக்குச் சுடுகாட்டுப் பாதை சரியாயில்லை. நாங்கள் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாய் ஒரு பாதை வேண்டும்,” என்றனர்.
அதற்கு அவர், “சரி தான், நீங்க வாழறதுக்குப் பாதை போட நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, செத்தவனுக்குப் பாதை போடச் சொல்றீங்க” என்றார் நகைச்சுவையாக.
ஜவஹர்லால் நேருவின் காரை வழி மறித்து, அவரை இறங்க வைத்து, “சுதந்திரம் சுதந்திரம் என்று பேசுகிறீர்களே, சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டார் ஒருவர்.
நேரு அவருடைய தோளைத் தட்டித் கொடுத்து, “உனக்கு என்ன கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய்? ஒரு நாட்டின் பிரதம மந்திரியை வழி மறித்து உன் கருத்தை நீ சொல்ல முடிகிறதே, அது தானப்பா சுதந்திரம்” என்றார் நகைச்சுவை இழையோட.
ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறதாம். ஆனால் பெரியவர்களோ, 15 முறை தான் சிரிக்கிறார்களாம்.
தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பது போல,தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம்.
சிரித்துப் பாருங்கள்.. அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு நல்ல மனநிலையைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment