பள்ளி வாகனங்களுக்கு முன்புறம், பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக, மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
சென்னை நகர போக்குவரத்து கழகம், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பேருந்துகளுக்கும் தேசிய பொது பயன்பாட்டு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை/ பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை ரூ.70 கோடி செலவில் KfW ஜெர்மனி மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.
பயண கட்டண சலுகை அனுமதி சீட்டினை வலைத்தளம் வாயிலாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரம் அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கி தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.70.73 லட்சம் செலவிடப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச் சீட்டு வழங்கப்படுகிறது.
பள்ளி வாகனங்களுக்கு முன்புறம், பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்துவதற்கு ஏதுவாக, மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
No comments:
Post a Comment