வாரிசுசான்றிதழ் வழங்க ரூ. 2000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியரை விடிய விடிய விசாரணை செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சாயமலையைச் சேர்ந்தவர் அழகுராஜ். இவரது தாயார் ராஜம்மாள் காலமானதை தொடர்ந்து வாரிசுச் சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் செ.மைதீன் பட்டாணி ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அழகுராஜ் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை கண்காணிப்பாளர் மதியழகனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் எட்டு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை அழகுராஜிடம் கொடுத்து அனுப்பினார்.
வட்டாட்சியர் மைதின்பட்டாணி பணத்தை பெறவும் கையும் களவுமாக ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை சுமார் 15 மணி நேரம் விடிய விடிய வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுவதும் நடந்த விசாரணையில் இறுதியில் வட்டாட்சியரை கைது செய்து மேல் நடவடிக்கைக்காக அழைத்து சென்றனர்.
மேலும் வட்டாட்சியர் பணிக்காக சுமார் 86 ஆயிரம் ரூபாய் அரசிடம் சம்பளம் பெறும் வட்டாட்சியரே பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று வழக்கில் சிக்குவது அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
No comments:
Post a Comment