நம் அண்டை நாடான இலங்கை, அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, ஏப்., 9 முதல் பிரதமர் அலுவலகம் அருகே பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் மீது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இலங்கையில் கலவரம் மூண்டது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே தலைமறைவானார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில்விக்ரமசிங்கே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.'நாட்டை வழிநடத்தும் பொறுப்பை இளைஞர்கள் ஏற்க வேண்டும்.
நாட்டின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அதிபர் கோத்தபயவுக்கு எதிரான போராட்டம் தொடர வேண்டும்' என, அவர் தெரிவித்தார்.இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று கூறியதாவது:நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இந்த தருணத்தில், மக்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நம் முதன்மையான இலக்கில் இருந்து விலகிவிடாமல், அதை அடைவதில் நம் முழு கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த தினமான, மே 18ல், இலங்கையில் மிகப் பெரிய தாக்குதலை நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இலங்கை அரசை, இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை உறுதி செய்த இலங்கை ராணுவத் துறை, இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment