Sunday, May 15, 2022

குடை அனுபவம்...

 நான் வளர்ந்து வந்த (1980-களில்) மழையில் வெளியில் செல்ல வேண்டுமானால் ரெயின் கோட் எல்லாம் கிடையாது. அரிசி சாக்கு தான் (கணிப்பை) அல்லது யூரியா புதின். தலையையும் முதுகினையும் மறைக்கும் கவசமாக அணிந்து கொண்டு வெளியே செல்வது, பாலிதின் கவரை தலையில் அணிந்து செல்வது.

வீட்டில் குடை வைத்திருப்பதை சமூக அந்தஸ்தாய்ப் பார்த்த காலகட்டம். குடையுடன் மழையில் வெளியில் செல்வது நாகரிகத்தின் அடையாளம். வெயிலில் குடை பிடிப்போரை விட மழையில் பயன்படுத்துவோர் தான் அதிகம்.
குடை ரிப்பேர் செய்பவர் எனும் தொழில் செய்வோரே பிரதானமாய் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது மடக்கு குடை வராத காலம். நீண்ட கம்பியுடன் எங்கள் வீட்டில் மான் மார்க் குடை இருந்தது. அதை விரித்து மலர வைப்பதும் ஒரு சாமர்த்தியமான செயல். முழங்கை வரை மேலே நீட்டி மேலே உள்ள பொத்தானை அழுத்தி மேல் உயர்த்தினால் கம்பிக்கு மேல் குடை நிற்கும். உள்ளே உள்ள ஃபோக்ஸ் கம்பிகளை ராட்சச இயந்திரத்தின் உதிரி பாகம் போலப் பார்ப்பேன்.
இப்போதுள்ள வண்ணக் குடைகளோ நைலான் துணிகளோ அப்போது இல்லை. வெறும் கருப்புத் துணியால் மட்டும் ஆனது.
பூப்போட்ட வண்ணத்தில் மடக்குக் குடை... பெரும்பாலும் அப்போதைய ஆசிரியைகளின் வழியே தான் அறிமுகம். பட்டன் குடையில் அழுத்தி குடையை மலர வைப்பது ஒரு மேஜிக் செய்வது போல் அப்போது இருக்கும். மழை பெய்வது போல் இருந்தாலே... இப்போது பவர் பேங்க் எடுத்துச் செல்வது போல் குடையை எடுத்துச் செல்வர்.
பழைய திரைப்படங்களில் குடையைப் பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பதை இன்றும் பார்க்கலாம். இன்று காரில், பைக்கில் லிப்ட் கொடுப்பதைப் போலத்தான் அன்று குடையில் லிஃப்ட் கொடுப்பதும். குடும்பத்தோடு போகும் போது குடும்பத்தலைவர் தான் அனைவரையும் உள்ளே விட்டு அவர் நனையாமல் வருவார்.
அடைமழை காலத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் அன்புடன் வரவேற்கும் அடையாளமாய் குடை இருக்கும்.
நாகரிகத்தின் அடையாளங்களைத் தொலைத்தவற்றில் குடையும் ஒன்று. ஒரு ரெயின் கோட் தான் மழைக்கான இரங்கற்பாவை எழுதி விட்டது. கோவர்த்தன மலையின் கீழ் நின்ற பசுவைப் போல் அன்று குடைக்குள் இருந்த மழலைகள் "குடைக்குள் சென்றால் எந்த மழையும் தாக்காது' என நம்பினர். மின்னலைப் பார்க்காது கண்களைக் காத்தது.
இன்று குடை எடுத்துச் செல்வது வீண் சுமையாகக் கருதப்படுகிறது. அன்று அதிகம் நடந்து சென்றதால் தேவைப்பட்டது. இன்று கார், பைக் வந்தவுடன் பரண் மீது ஏறி விட்டது குடை மழையை தரிசிக்கமாலேயே.
குடை பிடித்த அனுபவமே இன்றையக் குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விட்டது. நாகரிக சமூகத்தில் குடையும் இப்போது பார்ப்பது குறைந்து விட்டது. மூட்டு வலி வந்தால் தான் முட்டி நினைவிருப்பது போல்... மழையின் போது தான் குடை நினைவு கூரப்படுகிறது.
May be an image of body of water

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...