நீண்டகாலமாக மதத்தின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் விசுவாசம் காட்டி கேள்வி ஏதும் கேட்காமல் குருட்டு பக்தர்களாக இருப்பது ஜனநாயகத்திற்கும், நல்வாழ்விற்கும் எதிரானது என்பது, தற்போது தான் இலங்கை மக்களுக்கு புரிந்துள்ளது. ஏய்த்துப் பிழைத்த ராஜபட்சே குடும்பத்திற்கு மரணபயத்தை காட்டியுள்ளனர்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, May 15, 2022
ஒரு சர்வாதிகாரியின் எழுச்சியும், வீழ்ச்சியும் தரும் பாடங்கள்!
வரலாறு காணாத உணவுத் தட்டுப்பாட்டில் தவித்துக்கொண்டிரிக்கும் இலங்கை மக்கள் ராஜ பக்சே குடும்ப ஆட்சிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர். கடந்த ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக் மே 7ந்தேதி அதிபர் கொத்தபயா ராஜ பக்சேவால் மீண்டும் அவசர நிலை பிரகடனம் (Emergency) அறிவிக்கப்பட்டது, அளப்பரிய அதிகாரம் ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் வழங்கப்பட்டது. ஆனால், நிலைமை மேலும் தீவிரமடைந்து மாணவர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் களத்தில் இறங்கியுள்ளனர் .
காலி முகத்திடலில் (Galle Face) தன்னெழுச்சியாக தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களாலும் , ‘’கொத்தா கோ கமா’’ – கொத்தபயா வீட்டுக்கு போ- என்று பெயரிடப்பட்ட போராட்ட மையத்திலும் பெருகிவரும் மக்களின் ஆதரவும் பங்களிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருப்பதால் வேறுவழியின்று மகிந்தா ராஜ பக்சே திங்கட்கிழமை ராஜினாமாவை அறிவித்தார் .
அதேவேளையில் தனது இல்லத்தில் ‘நிலைமையை சமாளிக்க ‘ நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவில் நடந்த விஷயங்கள் போராட்ட பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது எனலாம். மகிந்தா ராஜபக்சே நடத்திய ஆலோசனைக்குப்பின் வெளிவந்த அவரது ஆதரவாளர்கள போராட்டகாரர்களை கண்மூடித்தனமாக தாக்கி அவர்களது போராட்ட கள கூடாரங்களை அடித்து நொறுக்கியதோடு தீ வைத்து எரித்தனர்!, அங்கு குழுமியிருந்தவர்களின் மண்டைகள உடைந்தன.
இத்தகைய அகங்காரமான தாக்குதலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், அரசின் அடிவருடி ஆதரவாளர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக திரண்டழுந்தனர்.
ராஜபக்சேவின் வீட்டிற்குள்ளிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ( ராஜ பக்சே ஆதரவு) அமரகீர்த்தி அதுக்கொராலா துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல்கள் கசியத்தொடங்கின. கொதிப்படைந்த மக்களின் கோபத்தீயின் விளைவாக அமரகீர்த்தி பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மகிந்தா ராஜ பக்சே ஓடி ஒளிந்து பதுங்கத்தொடங்கினார். எவி. சரத் குமாரா என்ற இமதுவா பிரதேசிய சபா தலைவரும் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார் . சனத் நிஷந்தா என்ற முன்னாள் அமைச்சரின் வீடும் தாக்கப்பட்டன. இவையெல்லாம் அரசுக்கெதிராக போராடும் மக்களை ராஜபக்சே ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய பின்னர்- மகிந்தாவின் ராஜினாமா நாடகத்திற்குப்பின் ஏற்பட்ட எழுச்சியின் எதிரொலி ஆகும்.
தொடர்ந்து நடைபெற்ற எழுச்சியில் வன்முறை வெடித்ததினால் சாவு எண்ணிக்கை எட்டாகியது. இருநூற்றுக்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவ மனை அறிவித்துள்ளது.
கடைசியாக வந்த தகவலின்படி மகிந்தா ராஜ பக்சேவும் அவரது குடும்பமும் திரிகோணமலையில் உள்ள கடற்படைத்தளத்தில் பதுங்கி உள்ளதாக தெரிகிறது. வெளியில் தலை காட்ட முடியாமல் ஓடி ஒளிந்து எலிகாப்டர் மூலம் திரிகோணமலைக்கு விரைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ராணுவ ஆட்சிக்கு நாட்டை கொண்டு செல்லும் கோத்தபயவாலும் இன்னும் நீண்ட காலம் அதிபராகத் தொடர முடியாது.
போராட்டக்காரர்கள் மேல் ஏவிவிடப்பட்ட தாக்குதலுக்கு முழுப்பொறுப்பு கோத்தபயா மற்றும் மகிந்தா ராஜபக்சே ஆவார்கள் . இக் கொடுஞ்செயலுக்கான பயங்கரவாத செயலுக்கான தண்டனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் சாஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.
ராஜபக்சே குடும்பம் பதவி விலகவேண்டும் என்பதும் அவர்கள் மீது தீவிர புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கொள்ளை அடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் இலங்கை மக்கள் ஏகோபித்த குரலை இன்று எழுப்பியுள்ளனர்
ஒரு காலத்தில் ‘அப்பச்சி’ என்று வாஞ்சையாக அழைக்கப்பட்ட மகிந்தா ராஜபக்சே யின் அரசியல் எழுச்சியும் வீழ்ச்சியும் அதி பயங்கரமானது! ஊழல் மிகுந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் செல்வாக்கு என்றும் நிரந்தரமல்ல என்பது போன்ற பல பாடங்களை இது அரசியல்வாதிகளுக்கு கற்றுக்கொடுக்கும் என்று கூறும் இலங்கை பத்திரிக்கையாளர் திரு. தில்ருக்ஷி ஹந்துநெட்டி இது இலங்கை மக்களுக்கும் இது ஒரு பாடத்தை சொல்கிறது என்கிறார்!
1970ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயகாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மகிந்தா ராஜ பக்சே. இருபத்து நான்கே வயது மகிந்தா நாடாளுமன்ற தேர்தலுக்கு சிறிலங்கா விடுதலைக்கட்சியின வேட்பாளராக (SLFP Candidate) ரணில் விக்கிரமசிங்கே விற்கெதிராக களத்தில் இறக்கப்பட்டார். தந்தையின் (டி.ஏ. ராஜ பக்சே)மறைவிற்குப்பின் அவரிடத்தை மகன் மகிந்தாவிற்கு வழங்கி அழகு பார்த்தார் அன்றைய பிரதமர் பண்டாரநாயகா அம்மையார்.
சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் மகிந்தா ராஜபக்சே நுழைந்தாலும், அவருடன் தேர்தல் தில்லுமுல்லுகள், கொலைமிரட்டல், தாக்குதல் போன்ற பயங்கர கிரிமினல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து பயணித்தன. அரசியலில் வேகமும், ஆதரவாளர்களை திரட்டுவதில் வல்லமையும், செயல்துணிவும் ஒருங்கே அமையப் பெற்ற மகிந்தாவிற்கு கட்சிக்குள்ளும் வெளியிலும் தனி செல்வாக்கு உருவானது.
காலம் கனிந்த போது தன்னை 2005 ல் நடந்த அதிபர் தேர்தலில் முன்னிறுத்தி, வெற்றியும் அடைந்தார் . பல ‘கனவுகளுடன்’ ஆட்சிக்கு வந்த ராஜபக்சே முதற் கனவான குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த முனைந்தார் . அமெரிக்க குடிமகனான தனது சகோதரர் கொத்தபயா ராஜபக்சேவை இலங்கை வரவழைத்து அவரை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலராக பதவியிலமர்தினார்.
அதுமட்டுமின்றி மற்றொரு சகோதரரான பாசில் ராஜபக்சேவை நாடாளுமன்றத்திற்கு அரசு சார்பில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச்செய்து மகிழ்ந்தார்.
இலங்கையில் சிங்களர் தமிழர் இடையே தீர்க்கப்படாமலிருந்த அதிகாரப் பரவல் மற்றும் உரிமை பிரச்சினைகள் பூதாகரமாக மாறி இன மோதலுக்கும் உள் நாட்டு போரை நோக்கியும் நகரத்தொடங்கிய காலமது. மிதவாதிகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளும், சுமூகமான முயற்சியும் சிங்களர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் எடுபடாத நேரத்தில் பேரினவாதம் பேசி பெரும்பான்மையினரான சிங்களரின ஆளுமை வரவேண்டும் என்று பேசிய மகிந்த ராஜபக்சே சிங்கள மக்களின் பாதுகாவலராக ஏற்றம் பெற்றார் .
தமிழீழப் பிரச்சினையை ராணுவ வெற்றி மூலமே தீர்க்க முடியும் என்ற ராஜ பக்சேவின் அரசியல், சிங்களர் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் நடந்த செயல்களும், எதிர்வினைகளும் போரை நோக்கி இலங்கையை தள்ளியது.
ஏறத்தாழ லட்சம் உயிர்களுக்கு மேல் காவு வாங்கிய இந்த யுத்தம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களையும் காவு வாங்கியது. மகிந்தா ராஜபக்சே கொடுத்த வாக்குறுதியை நம்பி நோ பயரிங் ஜோன் சென்று தஞ்சமடைந்த அப்பாவி தமிழர்கள்- பெண்களும்,குழந்தைகளும் முதியவர்களும் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்னர். இக் கொடுஞ்செயல் -போர்குற்றச்செயல்- மகிந்தா ராஜ பக்சேவின் நேரடி கண்காணிப்பில் நடந்தது. இதைக் கண்டு உலகமே துடித்தது, போர்குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு ஐ. நா சபை வரை சென்றது.
தமிழர்களை அழித்தொழிக்கும் போரில் கிடைத்த வெற்றி அவருக்கு அதிபர் பதவியை இரண்டாவது முறையும் கொடுத்தது. சிங்களர்களின் தனிப் பெருந் தலைவராகவலம் வந்த ராஜபக்சே போருக்குப் பின் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வும், சமாதான புனரமைப்பும் அளிக்கப்படும் என்ற தன் உறுதி மொழியை காற்றில் பறக்க விட்டார்.
மக்களிடையே உள்ள வேறுபாடுகளை பெரிதுபடுத்தி பிரித்தாள்வதன் மூலம் தன்னை சிங்களர்களின் பாது காவலனாக காட்டிக் கொண்ட ராஜபட்சே இன்று அதே சிங்களர்களால் காரி உமிழ்ந்து விரட்டியடிக்கும் நிலைக்கு வரக் காரணமென்ன?
இரண்டாவது முறை அதிபராக பதவியேற்ற பின் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு எட்டப்படவில்லை. ஏன், அதற்கான முயற்சியே எதுவும் இல்லை, சிங்களரின் வாழ்வும் மேம்படவில்லை. மாறாக இலங்கை நாட்டின் அனைத்து நிதி ஆதாரங்களையும் தன் பிடிக்குள் கொண்டுவருவதையும், குடும்ப ஆட்சியை விரிவாக்குவதிலுமே அவரது கவனம் சென்றது. அதிகாரக் குவியலும், அகங்காரமும் பெருகின! சுதந்திரமான அமைப்புகள் முடக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் பார்வையின் கீழ் வந்தன.
இலங்கை அரசியல் வரலாற்றில் பண்ட நாயகா குடும்பத்திற்கு உள்ள மரியாதையை விஞ்சி ராஜபக்சே கடும்பம் பெற வேண்டும் என்ற தணியாத ஆவல் – மறைக்கப்படாத ஆவல் – மகிந்தா ராஜபக்சேக்கு உண்டு.
இதையெல்லாம் எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என குற்றஞ்சாட்டி சிறையிலடைத்து மகிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி. சிங்கள மக்களுக்கு இத்தகைய அத்துமீறல்களும், அதிகார போதையும் அலங்கோல ஆட்சிமுறையும் பெரிய குற்றமாக படவில்லை. பெரும்பாலான சிங்களவர்கள் ராஜ்பட்சேவை சிங்களர்களின் முடிசூடா மன்னராகவே பார்த்தனர்.
ஒருமுறை ராஜபட்சேஅல் ஜசீரா என்ற வளைகுடா நாட்டின் பிரபல ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில் ,”சிங்கள மக்கள் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினரையே தேர்தலில் வெற்றி பெறச்செய்கின்றனர். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அது அவர்களது விருப்பம். மக்கள் ராஜபக்சே குடும்பத்தினரை பார்க்க விரும்பாத நிலை வரும்பொழுது அவர்களே எங்களை விரட்டியடிப்பார்கள்.” என்று கூறியுள்ளதை நினைவு கூர்ந்தால், அவர் தெரிந்தே தான் அனைத்துக் குற்றங்களையும் செய்துள்ளார் என அறியலாம்!
2015 தேர்தலில். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே கட்சியான SLPP அதிக இடங்களில் வென்றதால் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.அரசியல் குழப்பமும், பொருளாதார மந்த நிலையும் நிலவிய சூழலில் போரினவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம் பேசிய ராஜபக்சே சிங்களர்கள் மத்தியில் கதாநாயகனாக காட்சியளித்தார் . இத்தகைய குருட்டு பார்வையில் மக்களுக்கு ராஜபக்சேவின் ஊழலும், ஊதாரித்தனமும், அதிகார வெறியும், ஆணவமும், குடும்ப ஆட்சியும் பெரிய குற்றமாக தெரியவில்லை!!
ஆனால் ஆணவமிக்க அதேநேரத்தில் அறிவிற்கு பொருந்தாத பொருளாதார நடவடிக்கைகள் இலங்கை பொருளாதாரத்தை சீரழித்ததை கொஞ்சங் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்கிய இலங்கை மக்கள் இன்று விழித்தெழுந்துள்ளனர்.உணவுக்கும், பெட்ரோலுக்கும், காஸுக்கும், மருந்துக்கும் பயங்கர தட்டுப்பாடு வந்த நிலையில் தங்களின் முந்தைய முட்டாள்தனமான முடிவுகளையும், விருப்பங்களையும் நினைத்து வெதும்பினர் . அதனால் இன்று வெகுண்டெழுந்துள்ளனர்.
எந்த சிங்கள மக்கள் அவரை தூக்கி பிடித்தனரோ, அவர்கள் இன்று தாங்கள் படும் இன்னல்களின் மூலகாரணகர்த்தா ராஜபக்சேவின் குடும்ப ஆட்சியே என்ற தெளிவு பெற்றுவிட்டனர்! நாட்டை சூறையாடி, மக்களை பட்டினிச் சாவிற்கு தள்ளிய ராஜபட்சேக்களை விரட்டியடிக்கவும், கொல்லவும் துடிக்கின்றனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment