திருமணப் பந்தியில் அமர்ந்திருந்தேன். கொலைப் பசி.
முதல் பந்தியே இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதற்குள், ஹாலில் ரங்கநாதன் தெரு மாதிரி கூட்டம்.
நாங்கள் இன்னும் இலையில் கையை வைத்த பாடில்லை. அடுத்த பந்தியில் இடம் பிடிக்க ஆட்கள் சேர ஆரம்பித்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த பந்தியிலும் எனக்குப் பின்னால் ஒரு வரிசை.
"வெறும் எலைய எம்மா நேரம்பா உத்து உத்து பாத்துக்கினு இருக்கறது?சோத்த போடுங்கப்பா சீக்கிரம்."
என் வரிசையில் ஒரு பெரிசு ஆரம்பித்து வைத்தது.
குலாப் ஜாமூன்,
ஜாங்கிரி,
வெங்காயப் பச்சடி
உருளை சிப்ஸ்....
வைத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.
என்னுடைய வரிசையில் ஒவ்வொரு இலையாக கடைசிவரை வைத்துவிட்டுத் திரும்பியவர், வெங்காயப் பச்சடியை நான் காலி செய்ததைக் கவனித்து விட்டார். அவர் முகத்தில் ஆச்சரியம் கூடிய ஏளனம்!
அடுத்து ஒவ்வொரு கட்டமாக வந்துகொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
"எப்பதான் சோறு போடுவீங்களோ ? "
மறுபடி பெருசு உறுமியது.
"சார்.... தோசையும் சப்பாத்தியும் வந்துக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம் சோறு".
"அது வரைக்கும் அப்பளம் சாப்டுங்க சார்"
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த அப்பளக்காரர் ஆலோசனை கூறினார்!
இது நக்கலா அல்லது பரிதாபமா என்பது தெரியவில்லை. இந்த ஆராய்ச்சியில் இறங்க மனமில்லை. அவ்வளவு பசி.
இதோ வருகிறது, அதோ வருகிறது என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது கொஞ்ச நேரத்துக்கப்புறம்.
ஆஹா.... சாப்பிட ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் போதே......
என் இலைக்கு வரும்போது தோசை தீர்ந்துவிட்டது. ஒரு சப்பாத்தி மட்டும் வைத்தார் அவர்.
"தம்பி தோசை வரல".
நான் கம்ப்ளைண்டு கொடுத்தேன்.
"நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார்"
"தெரியுதுப்பா.... அவர்கிட்ட சொல்ல முடியாதா?"
"உள்ள இருப்பான் சார் ..
போனதும் சொல்றேன் .."
அவர்மேல் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
அதற்குள் சோறும் வந்து விட்டது.
"பாஸ்.... ஒரே ஒரு கரண்டி வைங்க. சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் ".
(எனக்கு இலையில் டிராஃபிக் ஜாம் பிடிக்காது)
"தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது... இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க. அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது".
பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.
அவர் கூறியபடியே சோறு வைத்து விட்டுப் போனார் அவர்.
மொத்த சாதத்தையும் சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர் என நான்கு பாகங்களாகப் பிரித்து வைத்தேன்.
எனக்குப் பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர், என்னருகில் இருந்தவரிடம் எதோ சொல்லிச் சிரித்தார். அது என்னைப் பற்றித்தான் இருந்திருக்க வேண்டும். அருகிலிருந்தவர் என் இலையை ஒரப் பார்வை விட்டார்.
ட்ரோன் காமிரா ஒன்று உயரத்தில் உலா வந்து கொண்டிருந்தது. என் இலையில் நான் கட்டி வைத்திருந்த நான்கு மலைச் சிகரங்களைப் படம் பிடித்திருக்கும். அதை எவ்வளவு பேர் பார்ப்பார்களோ! அதைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ!
சாம்பார் வந்தது. பின்னாலயே ரசம்.
"இப்படி எல்லாம் ஒண்ணா வந்தா எப்படி? வந்தா.... இப்பிடி வர்றீங்க ..... இல்லீன்னா .... ஆளே காணாம போயிடுறீங்க" .... நொந்து கொண்டது பெரிசு.
"சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள எப்படிப்பா ரசம் சாப்பிடறது?"
இது எதிர் வரிசையில் இருந்து வந்த குரல்.
"சாப்பிடலாம், சாப்பிடலாம்"....
யாரோ குரல் கொடுத்தார்கள்.
"ஆமா..... உங்க அனுமதிக்குத் தான் இவ்ளோ நேரம் காத்துக்கிட்டிருந்தோம் பாரு..."
மனதில் நினைத்தேன், சொல்லவில்லை.
"தம்பி! புரியாத ஆளா இருக்கீங்களே! ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க"
அருகாமை அனுபவஸ்தர் வலியுறுத்தினார்.
ரசத்துக்கான சோற்றுக் குவியலில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.
"வத்தக் குழம்பு இல்லையா?"
"வரும் சார்" என்றார் அவர்.
"ஏன்யா பறக்குறே?" என்று கேட்டது போல் எனக்குத் தோன்றியது.
"தம்பி.... உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க" அருகில் இருந்தவர் சிரித்தபடிதான் கூறினார்.
அடடா.... இது ஒரு எமர்ஜென்ஸி ஸிச்சுவேஷன்! சிரிக்கும் நேரமல்ல.
உடனடியாக action-ல் இறங்கிக வேண்டும்....
மோர்சாதத்திற்கான சோற்றுக் குன்றிலிருந்து, கொத்தாகச் சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தில் வைத்துச் சுவர் கட்டினேன். ரசம் வழிந்தோடுவது நின்றது. அவருக்குப் பரம திருப்தி!
எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது. அவசர அவசரமாக, சாம்பார் நிறைந்திருந்த சோற்றுக் குன்றை வாயில் போட்டு உள்ளே தள்ளினேன்.
சாப்பிடும் போது உணவை நன்கு கடித்துச் சாப்பிட வேண்டும். பள்ளியில் எங்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்தது.
என்னது, கடிச்சுச் சாப்பிடணுமா? அதுக்கு எங்கே நேரம்? எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர், நான் எப்படா எந்திருப்பேன் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.
கடிச்சு சாப்பிடணுமாம்... கடிச்சு!
"மெதுவா சாப்டுங்க.... கேட்டு வாங்கி சாப்டுங்க....." ன்னு ஒரு லேடி சொல்லிக் கொண்டே கடந்தார்.
இப்படி ஒரு உபசாரம் வேற!
எனக்குச் சிரிப்பு தான் வந்தது.
இரு விரல்களால் பிடிக்க முடியாத அளவு சிறிய பேப்பர் கப் இரண்டு வந்தது. ஒரு கப்பில் சேமியா பாயசம். இன்னொரு கப்பில் இளநீர் பாயசம். ஒவ்வொரு கப்பிலும் இரண்டு ஸ்பூன் அளவு "நிறைய்ய்ய" பாயசம் விழுந்தது!
ரசம் சாப்பிட்டுகொண்டே, நடு நடுவே பாசத்தையும் ஒரு வாய் குடித்தேன். குடித்தேன் என்று சொல்வது தவறு.
உதட்டில் வைத்து ருசித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவுதானே இருந்தது அதன் அளவு?
"மோர்....மோர்...."
"இந்த ஆள் இப்போதைக்கு முடிக்க மாட்டான் போலிருக்கே?" (பின்னால் இருந்தவர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்). பாவம், அவருக்கும் பசிக்குமே?
"டேய்...வாடா .... அந்த லைன் காலியாயிருச்சு.... அங்க போவோம் .."
ஒரு வெயிட்டிங் லிஸ்ட் ஆசாமி அடுத்த வரிசைக்கு ஓடினார்.
மோர் ஊற்ற வந்தவர் என்னை ஒரு மாதிரி லுக் விட்டார். மோரைச் சோற்றுடன் பிசைந்த படியே அக்கம் பக்கம் பார்த்தேன். எல்லோரும் எழுந்து போய் விட்டிருந்தார்கள். எல்லா வெயிட் லிஸ்டும் க்ளியராயிடுச்சு! அனைவரும் இரண்டாவது பந்தியில் சாப்பிட உட்கார்ந்தாச்சு! நானும் என்னைப்போல் ஓர் இருவரும் எங்கள் வரிசையில் இன்னும் பாக்கி.
இதுக்குத்தானா என்னை அப்படி லுக்ஸ் விட்டார் அந்த மோர்க் காரர்! எனக்கு என்னமோ போல் இருந்தது.
இறுதியாக....மோர் சாதத்தில் பாதி சாப்பிட்டிருக்கும் தறுவாயில் எனக்கு மிகவும் பிடித்த அந்த வத்தக் குழம்பு....
"என்னை மட்டும் விட்டுட்டியே?" என்று கெஞ்சுவது போல் இருந்தது.
எல்லாவற்றையுமே சமமாகப் பார்ப்பதே நமது தர்மம். சாம்பார், மோர்க் குழம்பு, பாயசம், ரசம், வத்த குழம்பு, மோர் என்று பாகுபாடில்லாமல் எல்லாவற்றையும் கௌரவப் படுத்த வேண்டும்.
மோர் சாதத்தை அப்படியே நிறுத்தி, வத்தக் குழம்புச் சாதத்தை உள்ளே தள்ளினேன்.
கப்பில் ஒரு சொட்டுப் பாயசம் பாக்கி இருந்தது. இடது கையில் கப்பை எடுத்து வலது கை விரலால் அந்த ஒரு சொட்டுப் பாயசத்தைச் சுழற்றி எடுத்து நாக்கில் தடவிக் கொண்டேன்.
என் அருகில் உட்கார்ந்திருந்த புது முகங்களில் ஒரே கவலை. இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ கடவுளே, இந்த ஆள் எழுந்திருக்க?
எதிர் வரிசையில் பேப்பர் ரோலைச் சுருட்டிக் கொண்டே வந்த பெண்மணி என் வரிசைக்கும் வந்து விட்டார். "வந்ததுடா டேஞ்சர்" என்று சொன்னது என் மனது.
அடடா!...... என் வரிசையிலும் பேப்பரில் சுருட்ட ஆரம்பித்து விட்டார். இப்பொழுது நான் என்ன செய்வது?
என் அருகில் வந்த அந்தப் பெண்மணி மிகுந்த வாஞ்சையுடன்
"பரவாயில்லை சார்... நிதானமா சாப்டுங்க. நான் நிக்கிறேன்" என்று கருணை கூர்ந்தார் .
பரீட்சை ஹாலில் தேர்வு நேரம் முடிந்தவுடன் கறாராகப் பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியர் ஞாபகத்திற்கு வந்தார்!
வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் கண்களில் ஏக்கப் பார்வை! இன்னும் எவ்வளவு நேரம் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும்? பொறுமையை இழந்து கொண்டிருப்பது தெரிந்தது.
ஏசி ஹாலில் எனக்கு வியர்த்துக் கொட்டியது. உணவருந்தியதாலா அல்லது இவர்களின் ஏளனப் பார்வையினாலா?
மீதமிருக்கும் மோர் சாதத்தை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக் கொண்டேன். இலையை மடிக்காமல் அப்படியே எழுந்து விட்டேன்.
"சார் சார்..... வாழைப்பழம் இருக்கு சார். ஜிலேபியையும் அப்படியே விட்டுட்டீங்களே?"
சாப்பிடக் காத்திருக்கும் ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் குரலில் கிண்டல் த்வனி இருக்கவில்லை. ஆனால் கிண்டல் தான் செய்கிறார் என்றது உள்மனம்.
வாழைப் பழத்தை ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
ஜாங்கிரியை டிஷ்யூ பேப்பரில் அவசரமாகப் பொதிந்து கொண்டேன்.
கை கழுவப் புறப்பட்டபோது...
"சார் .. இங்க யாருக்கோ தோச வரலயாமே .. உங்களுக்கா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார் ஒரு சிப்பந்தி!
"பாவிகளா! ஏன்யா இப்படி உசுப்பேத்துறீங்க?" ( மனதில் நினைத்துக் கொண்டேன்).
தோசை மேல் ஆசை வந்தது. மறுபடியும் இலைக்கு முன் உட்கார்ந்தால் அடித்து விடுவார்களோ என்ற பயம்.
"நான் இல்லப்பா. என்னோடது ஆயிடுச்சு.." என்று கூறிக் கொண்டே விலகினேன். பேப்பரைச் சுருட்டும் பெண்மணி என்னை பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிப்பது போல் தோன்றியது எனக்கு.
வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் மிகப்பெரிய பெருமூச்சு விட்டிருப்பார்கள்!
No comments:
Post a Comment