திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார். ஒரு நாள் காலையில், வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதையோ படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் ஓடி வந்து,
“ஐயா, ஐயா, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்ததே அணை. அதை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது! உடனே வந்து கவனிக்க ஏற்பாடு செய்ய வேணும்” என்று வேண்டினர்.
இதைக் கேட்டதும் தாசில்தார் ஒரு சேவகனை அழைத்து, “நீ உடனே போய்,அலுவலகத்தில் யாராவது குமாஸ்தா இருந்தால் கையோடு கூட்டிக் கொண்டு வா. உம். சீக்கிரம்” என்று உத்தரவிட்டார்.
“இல்லை. அதனால் என்ன? நான் வருகிறேன். வா. போகலாம்” என்று கூறித் துணிச்சலோடு தாசில்தாரிடம் வந்தான் முத்துசாமி.
தாசில்தார் முத்துசாமியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பிறகு, சேவகனை நோக்கி,
“என்னடா இது, இந்தப் பொடியனை அழைத்து வந்திருக்கிறாயே! வேறு யாரும் இல்லையா?...” என்று சலிப்போடு கூறிவிட்டு, முத்துசாமியைப் பார்த்து, “சரி. சரி. ஏனப்பா,உனக்கு அந்த உடைப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
“நீங்கள் உத்தரவு கொடுத்தால், உடனேயே நான் அங்கே போய், விவரம் அறிந்து வருகிறேன்” என்றான் முத்துசாமி.
“சரி, போய் வா” என்று அரை மனத்துடன் அவனை அனுப்பி வைத்தார் தாசில்தார்.
முத்துசாமி உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் கையில் ஒரு தாள் இருந்தது. அதைத் தாசில்தாரிடம் கொடுத்தான். அதை அவர் உற்றுப் பார்த்தார்
அதில், எவ்வளவு தூரம் அணை உடைந்திருக்கிறது. அணையைத் திரும்பக் கட்டுவதற்கு என்னென்ன சாமான்கள் வேண்டும். அந்தச் சாமான்கள் எங்கெங்கே கிடைக்கும். எவ்வளவு நாட்களாகும், எவ்வளவு ரூபாய் செலவாகும் என்ற விவரங்களெல்லாம் இருந்தன.
தாசில்தார் அதைப் பார்த்து வியப்படைந்தார். ஆனாலும், உடனே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமைக் குமாஸ்தாவிடம் அந்தத் தாளைக் கொடுத்து, “இந்தப்பையன் என்னென்னவோ இதில் எழுதிக் கொடுத்திருக்கிறான். நேராகப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். உடனே நீர் புறப்பட்டுச் சென்று, விவரம் அறிந்து வாரும்”என்றார்.
தலைமைக் குமாஸ்தா உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்றார். நிலைமையை நேரில்அறிந்தார். சிறுவன் முத்துசாமி எழுதிய விவரங்கள் நூற்றுக்கு நூறு சரி என்பதைஉணர்ந்தார். அப்படியே தாசில்தாரிடம் போய்ச் சொன்னார். அதைக் கேட்டு தாசில்தார் ஆச்சர்யம் அடைந்தார். முத்துசாமியை மிகவும் பாராட்டினார்.
அதே முத்துசாமி தாசில்தாரை மற்றொரு முறை வியப்பிலே ஆழ்த்தினான்.
ஒருநாள், பெரிய மிராசுதார் ஒருவர் தாசில்தாரிடம் வந்தார். “என்னுடைய நிலங்களுக்கு நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? தொகையைச் சொன்னால், உடனே கட்டிவிடுகிறேன்” என்றார்.
அந்த மிராசுதாருக்கு அந்தத் தாலுகாவில் பல இடங்களில் நிலம் இருந்தது. சுமார் இருபது கிராமங்களில் அவருக்கு நிலம் இருந்ததால் கணக்குகளைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.
குமாஸ்தாக்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கணக்கைப் பார்க்கச் சொல்லலாம் என்று தாசில்தார் நினைத்தார். அப்போது, அருகிலே சிறுவன் முத்துசாமி நின்று கொண்டிருந்தான்.
அவனிடம், அந்த மிராசுதாரின் பெயரைச் சொல்லி, “இவருடைய வரிப் பாக்கி எவ்வளவு என்று கேட்டுவா” என்றார் தாசில்தார்.
ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவுமில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவுமில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, ‘இவர் இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார்,
“என்னடா இது! வாயில் வந்த ஒரு தொகையைச் சொல்கிறாயே! சம்பந்தப்பட்ட கணக்குப் பிள்ளைகளைக் கூப்பிடு. கணக்கைச் சரியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
தாசில்தார் விருப்பப்படியே கணக்குப் பிள்ளைகளை அழைத்து வந்தான் முத்துசாமி.அவர்கள் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ஒரு காகிதத்தில் தொகையைக் குறித்துக் கொண்டார்கள்.
பிறகு எல்லாவற்றையும் கூட்டிப் போட்டு, மொத்தத் தொகையைச் சொன்னார்கள். அவர்கள்சொன்ன தொகையும், முத்துசாமி சொன்ன தொகையும், ஒன்றாகவே இருந்தன. தம்படிகூடவித்தியாசமில்லை! இதைக் கண்டு தாசில்தார் மிகுந்த வியப்படைந்தார். அவர் மட்டும் தானா? மிராசுதாரர், கணக்குப் பிள்ளைகள் எல்லாருமே அளவில்லாத
ஆச்சரியமடைந்தார்கள்.
முத்துசாமியிடம் இப்படிப்பட்ட திறமையும், ஞாபக சக்தியும் இருப்பதைக் கண்ட தாசில்தார் வியப்படைந்ததோடு நிற்கவில்லை. அன்றே முத்துசாமியை அழைத்து,
“முத்துசாமி, இன்று முதல் உன் சம்பளத்தை மூன்று மடங்கு ஆக்கி விட்டேன்” என்று கூறினார்.
மூன்று மடங்கு! என்றால் பிரமித்துப் போய் விடாதீரிகள் அந்த மூன்று மடங்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.மூன்று ரூபாய்தான் .
ஆம் அப்படியானால் அவர் வாங்கிக் கொண்டிருந்த மாத சம்பளம் ஒரு ரூபாய்.
அன்று ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவி ஆளாக இருந்த அந்த ஒரு ரூபாய் ஊழியர்...
பிற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே வகித்து வந்தநீதிபதிபதவியை பெற்றமுதல் இந்தியர்சர். டி. முத்துசாமி அய்யர்தான் அந்த ஒரு ரூபாய் ஊழியர்.
1877 இல் சென்னை உயர்நீதிமன்ற
முதல் இந்திய நீதிபதி பதவியை வகித்தவர்.
1893 இல் சென்னைஉயர்நீதிமன்ற
தலைமை நீதிபதியாகவும் இருந்தவர்..
No comments:
Post a Comment