Tuesday, July 11, 2023

*அரசியல் வந்திங்கு புகல் என்ன நீதி?*

  *தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இப்போது ஜாதி உணர்வு தலைவிரித்து ஆடுகிறது.

பொதுமேடைகளில் ஜாதியைக் குறிப்பிட்டுத் தாக்கும் போக்கு பரவலாகத் தோன்றத் தொடங்கி விட்டது.
இவ்விதம் பேசுவது பற்றிய கூச்ச உணர்வைப் பேச்சாளர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களை ஜாதி வாயிலாகப் பிளவுபடுத்தும் இந்த அநாகரிகம் நாளுக்கு நாள் செழித்து வளர்வதைப் பார்த்தால் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என மனத்தில் கவலை எழுகிறது.
முன்பு பிள்ளை, கவுண்டர், நாயக்கர், செட்டியார், தேவர், ஐயர், ஐயங்கார் என்றெல்லாம் பெயருக்குப் பின்னால் ஜாதியைச் சேர்த்துப் போட்டுக் கொள்ளும் மரபு இருந்தது.
உ.வே. சாமிநாத ஐயர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர், அவினாசிலிங்கம் செட்டியார் என்றெல்லாம் பல சான்றோர்கள் அழைக்கப்பட்டார்கள்.
இவர்களை மரியாதை நிமித்தம் பெயரையே சொல்லாமல் ஜாதியை மட்டுமே சொல்லி ஐயர், பிள்ளை, தேவர், செட்டியார் என அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.
ஆனால் அவர்களெல்லாம் ஜாதி உணர்வில்லாத உண்மையான சான்றோர்களாக இருந்தார்கள்.
அவர்கள் செய்த உயரிய பணிகளால் எல்லா ஜாதியினரும் பயன்பெற்றார்கள். மொத்த சமுதாயமும் அவர்களால் தழைத்தது.
அவர்களிடம் `பெயரளவில்` தான் ஜாதி இருந்தது. மற்றபடி அவர்கள் மனத்தில் ஜாதித் துவேஷம் என்ற விஷம் கடுகளவும் இருக்கவில்லை.
இன்று நிலைமை என்ன? பெயரில் யாரும் ஜாதியைப் போட்டுக் கொள்வதில்லை. அந்த மரபு முற்றிலுமாக நீங்கி விட்டது. ஆனால் பலரது மனம் முழுவதிலும் ஜாதித் துவேஷம் களையாய் மண்டிக் கிடக்கிறது.
ஜாதிச் சண்டைகளும் ஜாதிச் சச்சரவுகளும் நாளுக்குநாள் வளர்கின்றன.
சில குறிப்பிட்ட ஜாதிகளைக் குறிவைத்துத் தாக்கும் போக்கைச் சில அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். இந்த அநாகரிகத்தை எங்குபோய்ச் சொல்ல?
தெருக்களிலிருந்து நாம் ஜாதியை முழுவதுமாக நீக்கி விட்டோம்.
நல்லதம்பிச் செட்டித் தெரு நல்லதம்பித் தெருவாக நல்ல மாற்றத்தைப் பெற்றுவிட்டது. சுந்தரம் பிள்ளை தெரு சுந்தரம் தெருவாக அழகு பெற்று விட்டது. ரத்தினம் செட்டியார் தெரு ரத்தினம் தெரு என ரத்தினச் சுருக்கமாக மாறிவிட்டது.
ஆனால் என்ன ஆச்சரியம்! தெருக்கள் உதறிய ஜாதி, தெருக்களில் வாழும் மனிதர்களின் மனத்திற்குள் போய்ப் புகுந்துகொண்டு விட்டது.
ஜாதியை ஒருவர் மறக்க நினைத்தாலும் அரசியல் அவரை அவ்விதம் மறக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
எல்லா ஜாதியினரும் அமைதியுடன் வாழ நமது ஜனநாயகம் வழி வகுத்திருக்கிறது. எல்லா ஜாதியினரும் சம உரிமை பெற்ற இந்தியரே எனச் சட்டம் சொல்கிறது.
அப்படியிருக்க ஜாதியைச் சொல்லித் தாக்குவது என்பது எந்த வகையில் நியாயம்?
ஒருவன் எந்த ஜாதியில் பிறக்கிறான் என்பது அவனுடைய தேர்வல்ல. அது எதேச்சையாக நேர்கிறது. அவ்வளவே.
ஏதோ முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியில் ஒருவன் பிறந்ததுபோல் அவனை அவன் ஜாதியைச் சொல்லி மாய்ந்து மாய்ந்து தாக்குவது அருவருப்பான செயலல்லவா?
ஒரு குறிப்பிட்ட ஜாதியில், என்றைக்கோ சிலர் செய்ததாகச் சொல்லப்படும் செயல்களுக்கு அதே ஜாதியில் இன்று பிறந்தவர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?
இன்று அந்த ஜாதியினரை ஜாதிப்பெயரைச் சொல்லித் தாக்குவது என்பது எப்படிப் பகுத்தறிவாக இருக்கமுடியும்?
உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் முழுவதும் கெட்டவர்கள், அயோக்கியர்கள் என்றிருந்தால், அந்த ஜாதியினரை ஒழித்துக் கட்டிவிட்டு மற்றவர்கள் எல்லோரும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தலாம். ஆனால் நிதரிசனம் அப்படி இல்லையே?
நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா ஜாதியிலும் அல்லவா சரிசமமாகக் கலந்திருக்கிறார்கள்?
ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் ஒருபோதும் லஞ்சமே வாங்க மாட்டார்கள் என்று இன்று எந்த ஜாதியினரைப் பற்றியாவது சொல்ல முடியுமா?
லஞ்சம் என்ற குணம் எல்லா ஜாதியினரிடமும் தானே பரவிக் கிடக்கிறது?
நாம் எல்லோருமே ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான். ஜாதி நம் தேர்வல்ல என்றாலும் பிறப்பு நம்மை ஒரு ஜாதிக்குள் அடைத்து விடுகிறது என்பது உண்மைதான்.
நம் குடும்பங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட மிகச் சிலரைத் தவிர மற்ற உறவினர்கள் அனைவரும் ஒரே ஜாதிக்காரர்கள் தான்.
இந்த ஒரே ஜாதிக்காரர்களான நம் உறவினர்கள் அனைவருமே நல்லவர்களாகவா இருக்கிறார்கள்?
இவர்களில் நம் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள் எத்தனைபேர்? நம்மைப் பற்றித் தரக்குறைவாக வம்புச் செய்திகளைப் பரப்புபவர்கள் எத்தனைபேர்?
நம் பொருளாதார நிலையை மட்டுமே அளவுகோலாக வைத்து நம்மை மதிப்பது அல்லது மதிக்காமல் இருப்பது என்று பாகுபாடு காட்டுபவர்கள் எத்தனைபேர்?
நாம் பொருளாதாரத்தில் சிறிது வீழ்ந்தாலும், நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பவர்கள் எத்தனைபேர்?
நம் உறவினர்களில் விவாகரத்து ஆனவர்கள், வயதாகியும் திருமணப்பேறு, மகப்பேறு போன்றவை வாய்க்கப் பெறாமல் இருப்பவர்கள், வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள், கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் இவர்களைப் பற்றியெல்லாம் நம் ஜாதிக்கார உறவினர்கள் குறிப்பிட்ட நபர்கள் அருகில் இல்லாதபோது பேசும் பேச்சுக்கள் எவ்வளவு கேவலமானவை என்பதை நாம் அறிந்தவர்கள் தானே?
இந்த சொந்த ஜாதிக்காரர்களின் அநாகரிகங்களை சகித்துக் கொண்டுதானே நாம் தொடர்ந்து இந்த உறவுகளைப் பேணி வாழ வேண்டியிருக்கிறது?
சொந்த ஜாதியினரின் லட்சணம் இந்த அளவில் இருக்கும்போது, ஒருவன் சொந்த ஜாதி அபிமானத்துடன் வாழ்வான் என்றால் அதை விட முட்டாள்தனம் வேறென்ன?
உறவை நாம் தேர்வுசெய்ய இயலாது. அது பிறப்பால் வருவது. அண்ணன், தங்கை, மாமா, அத்தை என எத்தனையோ உறவுகள். எல்லாம் ஒரே ஜாதிதான்.
ஆனால் இதில் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு. இதை நாம் அனைவரும் அறிவோம்.
நட்பு அப்படியல்ல. நண்பர்களை நாம் தேர்வு செய்ய இயலும். நம் நண்பர்கள் பல ஜாதிக்காரர்கள். ஆனால் நண்பர்கள் தரும் ஊக்கத்தால் தான் நாம் இன்று பாதுகாப்புணர்வுடன் வாழ்கிறோம்.
பொருட்செல்வத்தை மட்டுமே தேடுகிறவன் பேதை. நட்புச் செல்வத்தைத் தேடி அடைகிறவன் ஞானி. நல்ல நண்பர்களைக் கொண்டவர்களைத் துயரங்கள் வாட்டுவதில்லை.
சொந்த ஜாதி என்ற சின்னச் சிமிழுக்குள் தேடினால் நல்ல நண்பர்களை எப்படிக் கண்டடைய முடியும்? சமுதாயம் என்ற பரந்த கடலில் நமக்கான உற்ற நண்பர்கள் எந்த ஜாதியில் வேண்டுமானாலும் இருக்க முடியும் என்பதே உண்மை.
எனவே யாராவது ஓர் அரசியல்வாதி அல்லது ஒரு மேடைப் பேச்சாளர் ஏதேனும் ஒரு ஜாதியைச் சொல்லித் தாக்கினால், அந்த ஜாதியில் பிறந்த நம் நண்பரை அல்லவா அவர் தாக்குகிறார் என்ற சீற்றம் நமக்கு வரவேண்டும்.
அப்படி நமக்கு வருகிறதா? அந்தப் பேச்சைக் கேட்டு, அப்படிப்பட்ட பேச்சுக்கு எதிராக, நம் மனம் கொதிப்படைகிறதா?
அப்படிக் கொதிப்படைந்தால்தான் நாம் உண்மையான மனிதர்கள். அப்படிச் சீற்றம் கொண்டால்தான் நாம் நம் நட்புக்கும் நம் உற்ற நண்பர்களுக்கும் நியாயம் செய்தவர்களாவோம்.
இல்லை, அந்த அருவருக்கத் தக்க ஜாதித் துவேஷப் பேச்சைக் கேட்டு (அது எந்த ஜாதியாகத் தான் இருக்கட்டுமே!) நாமும் கைதட்டினால் நாம் நாகரிகமற்றவர்கள், கற்கால மனிதர்களை விட மோசமான அற்பர்கள் என்றுதான் பொருள்.
நாம் நம் ஜாதிக்காரர்களான உறவினரோடும் மற்ற ஜாதிக்காரர்களான நண்பர்களோடும் ஆனந்தமாக வாழ்கிறோம்.
நம் ஜாதி உறவினர்களில், நமக்கு உகந்தவர்களை நாம் தேர்வுசெய்து உறவுகொண்டாடுகிறோம். நம் நண்பர்களை ஜாதிபாராது தேர்வுசெய்து நட்புப் பாராட்டி வாழ்வை மகிழ்ச்சியாக்கிக் கொள்கிறோம்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி. எனில் அரசியல் வந்திங்கு புகல் என்ன நீதி?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...