Saturday, July 1, 2023

*சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை...*

 என்னவோ... இன்னிக்கு சீக்கிரமே பசிக்கிது.

லஞ்ச்சுக்கு ஆத்துக்காரி என்ன கொடுத்திருக்கிறாள் 🤔 என்று ஆவலுடன் ஹாட்பேக்கை திறந்து உள்ளேயிருந்த காரியரை உறுவினேன்.
ப்ராக்கெட் கம்பியை விரித்து முதல் தட்டை திறந்தேன்.
கம்மென்று வெங்காய வாசனையுடன் உருளை ஃப்ரை முழித்து பார்த்தது.
அடுத்த தட்டில்...
மணம் கமழும் முருங்கை சாம்பார் சாதம்,
கடைசி தட்டில் தாளித்த தயிர்சாதம், அதன் நடுவில் ஊறுகாய்.....
வெள்ளை பேக்ரவுண்டில் ஆஸ்திரேலியா மேப்பை போல் படர்ந்திருந்தது.
எச்சிலை விழுங்கியபடியே 😛 ஸ்பூனை எடுத்து சாப்பிட ஆயத்தமானபோது ஃபோன் அடித்தது.
ஃபோனில் ரிசப்ஷனிஸ்ட்
*"சார்..Mrs. குமாரசாமி வந்திருக்காங்க. 12:45க்கு வரச் சொன்னீங்களாமே?"*
*"ஓ..எஸ்..எஸ்.. சரி.. அவங்கள விசிட்டர்ஸ் ரூம்ல உட்காரவச்சு ஏதாவது குடிக்க குடுங்க. நான் ஒரு பத்து நிமிஷத்தில பாக்கறேன்”* என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தேன்.
குமாரசாமியின் நினைவு....
சாப்பாட்டின் ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிட்டது.😙
புவர் ஃபெலோ....
45 வயசிலேயே அகாலமா போன மாசம் போய்ட்டான்.😔
அவனுக்கு சேரவேண்டிய பணத்தை அவன் மனைவிக்கு கிடைக்க, சில பேப்பர்களில் கையெழுத்து போட அவன் மனைவியை வரச்சொல்லியிருந்தேன்
20 வருஷமா இந்த பேங்க்குக்காக மாடா உழச்சான்.
பிகாம் முடிச்சவுடனே சேந்தவன் கடைசிவரைக்கும் இங்க தான்....
எப்ப ஆபீஸ்க்கு வந்தாலும் அவனை பார்க்கலாம்.
எல்லாருக்கும் முன்னாடியே வந்து கடைசியாத்தான் போவான்.
இப்போ, இப்படி முன்னாடியே போய்ட்டான்...😥
போறாததுக்கு லீவு நாள்லேயும் வந்துடுவான். PL லீவைக் கூட எடுக்காமல் என்கேஷ் பண்ணிடுவான்.
ஒரு ஹெச் ஆர் ஹெட்டா என்னால இதை அனுமதிக்க பிடிக்கல..
பாஸ்கிட்ட நிறைய தடவை ஆர்க்யூ பண்ணியிருக்கேன்.
அவர், தான் ஒன்னும் கம்ப்பெல் பண்றதில்லேன்னும், அவனேதான் இப்படி இருக்கான்னும் சொல்லவே நான் அவன்கிட்டையே நேரா பேசியிருக்கேன்.
*" இதோ பாரு குமாரசாமி, வொர்க் லைஃப் ரெண்டையும் கொஞ்சம் பாலன்ஸ் சரியா பண்ணனும். அதுதான் உனக்கும் நல்லது பேங்க்குக்கும் நல்லது”* என்று நிறைய தடவை சொல்லியிருக்கேன்.
*“ சரி சரி”* ன்னு தலையாட்டிவிட்டு பழையபடியேதான் இருப்பான். அப்பப்ப கூப்பிட்டு பேசியிருக்கேன்.
*“ ஏம்பா இப்படி ஆபீஸே பழியா கெடக்கிறயே உனக்கு வீடு குடும்பமெல்லாம் இல்லையா? “* என்ற கேள்விக்கு அவனுடைய பதில்
*“ சார் எல்லாத்தையும் என் வொய்ஃப் பாத்துப்பா சார், என் வொய்ஃப் ரொம்ப கெட்டிக்காரி சார், என்னைவிட திறமையா, அவ பாத்துப்பா சார்”* என்ற ரீதியில்தான் இருக்கும்.
போன தடவைகூட இந்த மாதிரி பதிலை கேட்டு “ *அது சரி. ஆனா நீயும் கொஞ்சம் குடும்பத்தோட டைம் செலவழிக்கலமே”* என்றேன்..
*“ ஆமா சார். ஆசை இருக்குதான். ஆனா ஆபிஸில செலவழிக்கற டைமுக்கு நாலு காசு கெடைக்குதே? நான் பணக்கஷ்டமான சூழ்நிலைல வளந்தவன். அந்த கஷ்டம் என் குடும்பத்துக்கு வராம இருக்கனும்... அதான் இப்படி ஒழைக்கறேன்.”*
*“அது சரி. உன் வொய்ஃப் ஒன்னும் சொல்லமாட்டாங்களா?”*
*“ சார் மத்த விஷயத்தில கடவுள் எனக்கு ஒன்னும் பெரிசா கொடுக்கலைனாலும்,* *எல்லாத்துக்கும் சேத்துவச்சு
அருமையான
மனைவிய கொடுத்திருக்கான். வீட்டு கவலையே எனக்கு வராதபடி, ஒருத்தியா எல்லாத்தையும் தானே இழுத்து போட்டுன்டு செய்றா...*
*இந்த மாதிரி ஒரு வொய்ஃப் கிடச்சதுக்கு ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன் சார்.”*
இந்த ரீதியில் மனைவியின் புகழை மெச்சிக்கொண்டான்.
இப்போ அந்த மனைவி அவனை இழந்து வெளியில் காத்திருக்கிறாள் என்ற நினைவு சுரீரென்று உறைக்கவே, அவசரமாக சாப்பிட்டு முடித்து, அவளை என் அறைக்கு அனுப்ப சொன்னேன்.
உள்ளே வந்தவளுக்கு 35-40 வயது இருக்கலாம். களையான முகத்தில் ஒரு இறுக்கமும், கண்ணீர் வற்றிய கண்களில் சோகமும் பாக்கியிருந்தது.
*“வாங்கம்மா”* என்று வரவேற்று எதிரில் அமரச்செய்தேன்.
குமாரசாமியின் ஃபைலை எடுத்து *"உங்க கணவருக்கு சேரவேண்டிய பணத்தையெல்லாம் உங்களுக்கு தருவதற்கான பேப்பர்களில் உங்க கையெழுத்தை மார்க் பண்ணின இடங்களில் போடவேண்டும். படித்து பார்த்துட்டு போடுங்க. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க”* என்றவாரே ஃபைலை அவளிடம் கொடுத்தேன்.
பக்கங்களை புரட்டி மேலாக படித்துவிட்டு பையிலிருந்து பேனாவை எடுத்து கையெழுத்து போட ஆரம்பித்தாள்.
அங்கு நிலவிய சங்கடமான மௌனத்தை கலைக்க
*“ குமாரசாமி மாதிரி ஒரு சின்சியர் எம்ப்ளாயியை இழந்த நாங்க படற வருத்தத்தைவிட உங்க வருத்தம் பல மடங்கு அதிகமாத்தான் இருக்கும். என்ன செய்யறது? நீங்க கொஞ்சம் தைரியமா இருக்கணும்”* என்றேன்.
பதிலுக்கு ஒரு வறண்ட புன்னகை அவளிடமிருந்து வந்தது.
*“ ஆனா நீங்க ரொம்ப திறமைசாலின்னு சொல்லுவார்”* என்றதும் கையெழுத்து போட இருந்ததை சட்டென நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்தாள். 😶
*" ஆமா. நீங்கதான் குடும்பத்தையே தனியா மேனேஜ் பண்றீங்கன்னு ரொம்ப பெருமையா சொல்லுவார்”*
*“ நிஜமாவா?”* நம்பிக்கையில்லாமல் கேட்டாள்🤥
*“ நெஜமாங்க. அதுமட்டுமில்ல...*
*உங்கள மாதிரி வொய்ஃப் கெடச்சதுக்கு ரொம்ப கொடுத்துவச்சிருக்கேன்னு அடிக்கடி சொல்லுவார்”* என்று சொன்னதும் வறண்டிருந்த கண்களிலிருந்து குபுக் என்று கண்ணீர் ஊற்று பெருக 😪 சடாரென்று டேபிளின்மீது தலையை கவிழ்த்து தோள்பட்டை குலுங்க கேவி கேவி அழ ஆரம்பித்தாள். 😭
அழுது அமைதி ஆகட்டும் என்று காத்திருந்தேன்.
ஒரு சில நிமிடங்களில் நிமிர்ந்து கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டே “ *சாரி சார். எதிர்பாராத உங்கள் வார்த்தைகளை கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்”* என்றாள்.
*“ எதிர்பாராத வார்த்தைகளா?”* புரியாமல் அவளை கேட்டேன்.
அவள் முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு தொண்டையை மெல்ல செருமிக்கொண்டு என் கண்களை தவிர்த்து குனிந்தவாரே தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தாள் :
*“ சார்...எங்களுக்கு கல்யாணமாகி 15 வருஷமாச்சு. இந்த 15 வருஷத்தில இவர் ஒரு நாள்.... ஒரு தடவை கூட என்னை பாராட்டி ஒரு வார்த்தை சொன்னதில்ல..*
*கல்யாணமான முதல் வருஷம் ரொம்ப எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து... அப்புறம் கோவிச்சு கடைசில வெறுத்துப்போய்.....ஒரு மாதிரி ‘சரி விடு உன் மேரேஜ் லைஃப் இப்படித்தான்னு விதிச்சிருக்கு’ ன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்.*
*ஒரு வேளை பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டாரோன்னு கூட நெனச்சேன்.*🤔
*ஆனா, அவர் மனசில இவ்வளவு ஆசையிருந்திருக்குன்னு தெரியாம நெறயதடவை அவரை மனசுக்குள்ளே சபிச்சிருக்கேன்.*
*இந்த பாராட்டுற வார்த்தைகளையெல்லாம் உங்ககிட்ட சொல்லி என்ன சார் பிரயோசனம் ? எங்கிட்ட ஒரு நாளாவது சொல்லியிருந்தா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன். இப்ப தெரிஞ்சு என்ன பலன்? “* மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.
*“ ரிலாக்ஸ் மேடம். முக்காவாசி ஆம்பளைங்களே அப்படிதான். வெளிப்படையா சொல்லனும்னு அவசியமில்லே....மனைவி தன்னை நல்லா புரிஞ்சுப்பா ன்னுதான் நம்புறாங்க.”*
*“ என்ன சார் நீங்க? ஒரு ஹெச் ஆர் ஹெட்டா இருந்து இப்படி பேசறீங்க? உங்க ஆஃபீஸ்ல நல்லா வேலை செய்யறவங்கள நீங்க பாராட்டறதில்லையா? மோட்டிவேட் பண்றதில்லையா?”*
*" மேடம் இதெல்லாம் கமர்ஷியல் ரிலேஷன்ஷிப். இங்கே உதட்டளவு பேச்சுதான். ஆனா கணவன் மனைவிங்கறது ஒரு உணர்வுசார்ந்த ஆத்மார்த்தமான உறவு. பாசாங்கு பேச்சு தேவையில்ல”*
*"அப்படீன்னு நீங்க நெனக்கறீங்க. ஆனா எங்களுக்கு என்ன தோணுது தெரியுமா?*
*ஆஃப்ட்ரால் ஒரு வொய்ஃப் செய்யவேண்டிய ட்யூட்டிய தானே செய்றா. இதுல பாராட்டு என்ன வேண்டிக்கெடக்குன்னு நெனச்சு, நீங்க எங்கள டேக்கன் ஃபார் கிரான்டட் ன்னு நெனைக்கிறீங்களோனு படுது.*
*நாங்களும் ரத்தமும் சதையும் உள்ள, எல்லாரையும்போல உணர்ச்சியுடைய, பாராட்டை எதிர்பார்க்கும் சாதாரண மனுஷங்கதானே...”* இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது என் ஃபோன் ஒலித்து ‘சிஈஓ கூட மீட்டிங்கிற்கு டைம் ஆகிவிட்டதாக செய்தி வந்ததும் அவளை என் அசிஸ்டன்ட்டிடம் அனுப்பிவிட்டு மீட்டிங்கில் பிஸியாகிவிட்டதால் இந்த சம்பவத்தை சற்றே மறந்திருந்தேன்.
ஆனால் ஆஃபீஸ் முடிந்து வீடு திரும்பும்போது இந்த சந்திப்பு என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
வழியெல்லாம் Mrs குமாராசாமியின் வார்த்தைகள் அலைபோல் மனதில் எழும்பிக்கொண்டேயிருந்தது.
வீட்டை அடைந்து ப்ரீஃப் கேசையும் டிஃபன் காரியரையும் டேபிளில் வைத்துவிட்டு சோஃபாவில் சரிந்தேன்.
நான் வந்த சத்தம் கேட்டு உள்ளிருந்து சூடான ☕️காஃபி கப்புடன் வந்த என் மனைவி, கப்பை டேபிளில் வைத்தாள். பின் அங்கிருந்த டிஃபன் பாக்ஸை எடுத்துகொண்டு உள்ளே திரும்பி போனவளை...
*“ ஜெய் ”* என்று கூப்பிட்டேன். *"என்ன’* என்பதுபோல் திரும்பி பார்த்தவளிடம்
*“ ஜெய் ..இன்னிக்கு ஆலு ரோஸ்ட் சூப்பர், அதைவிட முருங்கக்காய் சாம்பார் வாசனை ஆள தூக்கிடுச்சு, அப்புறம் கடைசில அந்த தாளிச்ச தயிர்சாதம் வித் ஊறுகாய் வாவ் அவுட் ஆஃப் தி வேர்ல்ட்”* என்றதும்...
ஆச்சர்யத்துடன்,
அவள் கண்களும் வாயும் விரிந்தது போலவே...
கைகளும் விரிந்ததால்,
கையிலிருந்த டிஃபன் பாக்ஸ் நழுவி,
கீழே உருண்டோடியது....
அங்கே உருண்டு ஓடியது ...
டிஃபன் பாக்ஸ்.... மட்டும் அல்ல...
*அவள் மகிழ்ச்சியும் தான்..*. ❤️
**பாராட்டு கொஞ்சம் பொய்யாகவோ சற்று மிகைப்படுத்தலாகவோ இருந்தால்கூட.....*
*அது தரும் பரவசமே தனி.*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...