Saturday, July 1, 2023

சாப்பிட யாரும் வரவில்லையே எனத் தெரிவித்தாள்.

 சென்னையைச் சேர்ந்த வசதியான பெண் ஒருத்தி காசி யாத்திரை செல்ல ஆசைப்பட்டாள். காஞ்சி மகாசுவாமிகளிடம் தன் எண்ணத்தை தெரிவித்து ஆசி வேண்டினாள்.

''நல்லது. உன்னால் ஒரு உபகாரம் செய்ய முடியுமா... ஏழை பாட்டி ஒருத்தி காசியாத்திரை செல்ல விரும்புகிறாள். அவளையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயா?'' எனக் கேட்டார்.
பரவசத்துடன், ''அவசியம் அழைத்துச் செல்கிறேன்'' என்றாள்.
''அப்படியானால் இப்போதே இங்குள்ள பெருமாள் கோயிலுக்குப் போ. அங்கே மடப்பள்ளியில் சொல்லி உடனடியாக நாற்பது பேருக்கு உணவு சமைக்க ஏற்பாடு செய்'' என்றார்.
பாட்டியை காசிக்கு அழைத்துச் செல்வதற்கும், பெருமாள் கோயிலில் உணவு ஏற்பாடு செய்வதற்கும் என்ன சம்பந்தம் என அவளுக்கு புரியவில்லை. ஆனால் மகாசுவாமிகள் சொன்னால் வேத வாக்கு ஆயிற்றே....அதைத் தட்டக்கூடாது. கேள்வி கேட்கவும் கூடாது எனக் கருதி கோயிலுக்குப் புறப்பட்டாள்.
40 பேருக்கு உணவு தயாராகிவிட்டது. மதிய நேரமாகியும் ஒருவரும் சாப்பிட வரவில்லை. என்ன செய்வது?
மறுபடி மகாசுவாமிகளிடம் வந்தாள். சாப்பிட யாரும் வரவில்லையே எனத் தெரிவித்தாள்.
அப்போது திருப்பதி செல்லும் பக்தர் குழு ஒன்று சுவாமிகளைத் தரிசிக்க வந்தது. அவர்களுக்கு ஆசி வழங்கிய சுவாமிகள், ''உங்களுக்கெல்லாம் இந்த அம்மா சாப்பாடு தயார் செய்திருக்கிறாள். வயிறாரச் சாப்பிடுங்கள்'' என அனுப்பி வைத்தார்.
அந்த பெண் ஆச்சரியப்பட்டாள். ஏனெனில் அவர்கள் சரியாக நாற்பது பேர் இருந்தனர். திருப்தியாகச் சாப்பிட்டனர். அவளை வாழ்த்தி விடைபெற்றனர்.
அதன் பின் பாட்டியை அழைத்துச் செல்வதற்காக மடத்திற்கு வந்தாள்.
''காசிக்குப் போகிறவர்கள் சமாராதனை செய்ய வேண்டும் என்பார்கள். நீ உன் செலவில் நாற்பது பேருக்கு உணவு பரிமாறினாய் அல்லவா? அதுதான் காசிக்குப் போவதற்கு நீ செய்த சமாராதனை. பாட்டியை காசிக்கு அழைத்துச் செல்வது, பக்தர்களுக்கு உணவிட்டது என புண்ணியத்தின் மேலே புண்ணியம் தேடிக் கொண்டாய்'' என்றார் சுவாமிகள்.
பக்தையின் விழிகளில் கண்ணீர் பெருகியது.
உடல்நலம் பெற... - காஞ்சிப்பெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...