ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்க, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர்.
பிரசாரம்
முன்னாள் மத்திய அமைச்சர்கள், தயாநிதி மாறன், அ.ராசா, டி.ஆர்.பாலு போன்றோரும், களம் இறங்கி உள்ளனர்.இதுவரை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, முதல் முறையாக, லோக்சபா தேர்தலில் களம் இறங்கி உள்ளார். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார்.
சர்ச்சை வீடியோ
இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், தி.க., தலைவர் வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். மேலும், 'இந்த வீடியோக்களை பதிவிடுவோர், ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும், தி.மு.க.,விற்கு உங்கள் ஒட்டு தேவையா; ஹிந்துக்களே சிந்தியுங்கள்' என, சமூக வலைதளங்களில், பதிவிட்டு வருகின்றனர். 'வீரமணியின் சர்ச்சை பேச்சால், தங்களுக்கு வர வேண்டிய ஓட்டுக்களில், 10 சதவீதம், அ.தி.மு.க., பக்கம்திரும்பி விடும். இது, தி.மு.க.,வின் வெற்றியை கடுமையாக பாதிக்கும்; அ.தி.மு.க., வெற்றிக்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக அமைந்து விடும்' என, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தடை விதியுங்கள்
தேவையில்லாமல் ஹிந்துக்களை விமர்சித்து, அவர்களின் ஓட்டுக்களை இழக்க, அவர்கள் விரும்பவில்லை. எனவே, 'வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்' என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தேர்தல் பிரசார கூட்டத்திற்கும், வீரமணியை அழைக்காதீர்கள் என்று, வெளிப்படையாக கூறிவிட்டனர்.
கடும் எதிர்ப்பு
தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 'தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்' என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment