மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் முடிந்து பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தத் தேர்தலில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிடவில்லை. இதனால் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரியாமலே இருந்தது. இதற்கிடையே அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து அதன் பொதுச் செயலாளர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ``தமிழகத்தில் வரும் 18-ம் தேதி 17வது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் முதல் மக்களவைத் தேர்தல் என்பதால் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதை உலகமே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் நமது கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துத் தொண்டர்கள் அறிய ஆவலாக உள்ளார்கள் என்ற செய்தியை அறிந்தேன். ஜெயலலிதா மனதில் சுமந்திருந்த பிள்ளைகளாகிய தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்தக் கழகத்தை உருவாக்கியுள்ளோம்.
ஜெயலலிதா என்ற விஸ்வரூபினி எம்.ஜி.ஆர், அண்ணா கொள்கைகளுக்கு உயிர்கொடுத்துக் காப்பாற்றினார். அவரின் தன்மானம் மிகுந்த அரசியல் ஆளுமையைச் சிலர் தேர்தல் சந்தையில் ஏலம் போடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க ஜெயலலிதாவின் தன்மானத்தையே அடகு வைத்துவிட்டார்கள். தமிழக மக்கள் ஒருபோதும் ஊழல் சக்திக்கு ஆதரவு தரமாட்டார்கள். தேர்தலில் சீட்டுகளைப் பெற பிச்சைக்காரனைப்போல அலைகின்ற கூட்டத்தில் நாமும் சேர வேண்டுமா எனச் சிந்தித்துப் பார்த்து எடுத்த முடிவுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது. கட்சி தொடங்கி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதனால் 40 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெறப்போகிற இந்தத் தேர்தலில் இடிபடாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான பதவிகளை பெற நம்முடைய முதற்களம் அமையட்டும்.
அதற்குள் கட்சியின் கட்டமைப்பு, கிளைக் கழகம் வாரியாக அமைத்திட வேண்டும் என்பதே நிலைப்பாடு. இந்தத் தேர்தலில் நல்லவர்களுக்குப் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே பிரசாரம் செய்து நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment