*♨விமான நிலையத்தைப் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் சென்னையில் அமையும் பேருந்து நிலையம்!*
கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் ரூ.394 கோடியில் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் புழங்கும் வகையில் விமான நிலையத்தின் தரத்துக்கு ஈடாக புதிய புறநகர் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், விமான நிலையம் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமையவிருக்கிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மொத்தம் 80 லட்சம் பேர் வசிக்கிறார்கள். தினமும் 20 லட்சம் பேர் அலுவல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வந்து செல்கிறார்கள். ஆக, 1 கோடி பேர் புழங்கும் சென்னையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் மாநகர் பேருந்து நிலையமும், மறு புறம் புறநகர் பேருந்து நிலையமும் அமைந்திருக்கின்றன.
தவிர, சமீபத்தில், மாதவரம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இங்கிருந்து செல்கின்றன.
இந்நிலையில் கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் ரூ.394 கோடியில் தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் புழங்கும் வகையில் விமான நிலையத்தின் தரத்துக்கு ஈடாக புதிய புறநகர் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. சமீபத்தில் இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் பொருத்தவரை, புறநகர், தனியார், ஆம்னி பேருந்துகளுக்கு தனித்தனி நிலையங்கள் உள்ளன. ஆனால், கிளாம்பாக்கத்தில், அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைய இருப்பது இதன் சிறப்பு.
மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் இந்த பேருந்து நிலையத்தின் முதல் அடித் தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் இரண்டாவது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் இருக்கும். தரைதளம் மற்றும் முதல்தளத்தில் பயணிகளுக்கான வசதிகளும் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட போக்குவரத்துப் பணியாளர்களுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தரைதளத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற் கான பகுதி, 49 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், 20 பயணச்சீட்டு வழங்குமிடங்கள், மருத்துவ மையம், மருத்துவமனை, தாய்ப் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களைக் கண்காணிக்கும் அறை, தரைதளத்தின் பல்வேறுபகுதிகளில் ஆண், பெண் கழிப் பறைகள் ஆகிவற்றோடு நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படுகிறது.
அதோடு முதல் தளத்தில், 100 ஆண்கள், 40 பெண்கள் தங்குமிடம், 340 ஓட்டுநர்கள் தங்குமிடம், 35 கடைகள், கழிப்பிடம் ஆகியன இடம்பெறுகின்றன.
இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த பேருந்து நிலையம் இன்னும் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்கிறார்கள் சி.எம்.டி.ஏ அதிகாரிகள்.
No comments:
Post a Comment