ஒரு முறை ஸ்ரீ மடத்திற்கு ஒருவர் ஒரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அதை எடுத்து மசியல் செய்தாயிற்று.
சாப்பிட வந்தவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லையே... எப்படி சாப்பிடுவார்கள்?
இது பெரியவாளுக்குத் தெரிய வந்தது.. சமைத்தவர் கையைப் பிசைந்து கொண்டு, "எனக்குத் தெரிந்த வரை கழுநீரில் அலம்பி, புளி விட்டுக் கொதிக்க வைச்சுத் தான் பண்ணினேன் ; அதற்கெல்லாம் மசியவில்லையே - அதான் மசியல் வீணாகி விட்டது!" என்றார்.
பெரியவா சொன்னார், "கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத்தண்டை வெட்டிப் போடு.. அரிக்காது!" என்றார்..
அதன் படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் படி அமைந்தது.
இன்னொரு நாள் சமையலுக்குப் பெருங்காயம் போறலை என்று சமையல்காரர் தவித்தார்.. அதற்கும் பெரியவா எளிய வழி ஒன்று காட்டினார்...
"இந்தப் பெருங்காயத்தை பருப்பு வேகும் போது போட்டு விடு. அந்தப் பருப்பை சாம்பார், ரசம் எதில் சேர்த்தாலும் பெருங்காயம் வாசனையுடன் கூடவே சேர்ந்து விடும். தினமுமே இப்படிப் பண்ணு ; பெருங்காயச் செலவு குறையும்! " என்றார்.
சிக்கனத்தைக் கற்றுத் தருவதிலும் பெரியவாளை யாரும் விஞ்ச முடியாது...
No comments:
Post a Comment