தமிழகத்தில் நடக்க உள்ள, சட்டசபை இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வை விட, எதிர்க்கட்சியான தி.மு.க.,விற்கு அதிகம் உள்ளது. எனவே, தேர்தலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 21ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விக்கிரவாண்டி தொகுதி, தி.மு.க., வசம் இருந்தது. நாங்குநேரி தொகுதி, அதன் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் இருந்தது.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 63 ஆயிரத்து, 757 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. அ.தி.மு.க., 56 ஆயிரத்து, 845 ஓட்டுகளை பெற்று, தோல்வி அடைந்தது.
அந்த தேர்தலில், தனித்து போட்டியிட்ட, பா.ம.க., 41 ஆயிரத்து, 428 ஓட்டுகளைப் பெற்றது.இந்த ஆண்டு நடந்த, விழுப்புரம் லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டியில், தி.மு.க.,வுக்கு, 83 ஆயிரத்து, 432 ஓட்டுகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, பா.ம.க.,வுக்கு, 74 ஆயிரத்து, 819 ஓட்டுகள் கிடைத்தன. தனித்து போட்டியிட்ட, தினகரனின், அ.ம.மு.க., 8,545 ஓட்டுகளைப் பெற்றது. வரும் இடைத்தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடப் போவதில்லை. அக்கட்சி ஓட்டுகள், அ.தி.மு.க.,விற்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, விக்கிரவாண்டியில், தி.மு.க., வெற்றி பெற, கடுமையாக போராட வேண்டி வரும்.
போராடி பெற்றது காங்.,
நாங்குநேரி தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர், 74 ஆயிரத்து, 988 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வுக்கு, 57 ஆயிரத்து, 547 ஓட்டுகளே கிடைத்தன. தனித்துப் போட்டியிட்ட, பா.ஜ.,வுக்கு, 6,624 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஆண்டில், ஏப்ரலில் நடந்த, திருநெல்வேலி லோக்சபா தேர்தலில், நாங்குநேரி தொகுதிக்குள் மட்டும், தி.மு.க., வேட்பாளர், 86 ஆயிரத்து, 306 ஓட்டுகளைப் பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர், 51 ஆயிரத்து, 596 ஓட்டுகளையும், அ.ம.மு.க., வேட்பாளர், 15 ஆயிரத்து, 114 ஓட்டுகளையும் பெற்றனர்.
இந்த தொகுதியில்,தி.மு.க., போட்டியிட விரும்பியது. ஆனால், காங்கிரஸ் கட்சி போராடி, 'சீட்' பெற்றுள்ளது.எனவே, தி.மு.க., தரப்பில், காங்கிரசுக்கு போதிய அளவு ஒத்துழைப்பும், பண உதவியும் தரப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. இரு தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அ.தி.மு.க., இரு தொகுதிகளிலும், தோல்வியை தழுவினால், 'ஏற்கனவே, அவை எதிர்க்கட்சிகள் வசமிருந்தன; எங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை' என, கூறிவிடும். ஆனால், ஒன்றில் வெற்றி பெற்றாலும், அதை, அ.தி.மு.க., கொண்டாடும்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில், அமோக வெற்றி பெற்றது.ஆனால், வேலுார் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தட்டுத் தடுமாறியே வெற்றியை தொட்டது. அது, அ.தி.மு.க.,விற்கு, உற்சாகத்தை தந்துள்ளது.எனவே, சட்டசபை இடைத்தேர்தலில், இரு தொகுதிகளிலும், வெற்றி பெற்று விட வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க., களம் இறங்கி உள்ளது. அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. அதன் வெற்றிக்கு, இடைத்தேர்தல் வெற்றி கைகொடுக்கும் என, அ.தி.மு.க., நம்புகிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது
அ.தி.மு.க.,விற்கு நெருக்கடி இல்லாத நிலையில், எதிர்க்கட்சியானதி.மு.க., இரண்டு தொகுதிகளிலும், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில், ஒன்றில் தோற்றாலும், அக்கட்சியின் செல்வாக்கு சரிந்ததாக கருதப்படும்.'காங்கிரசால் தான் தோல்வி' என, காரணம் கூறும் வாய்ப்பு இருந்தாலும், இது, உள்ளாட்சி தேர்தலில், பின்னடைவை ஏற்படுத்தும்.இதை தவிர்க்க, அக்கட்சி, இரு தொகுதிகளிலும், வெற்றி பெற கடும் முயற்சிகளை மேற்கொள்ளும். காங்கிரஸ் போராடி பெற்ற தொகுதியில், வெற்றி பெறாவிட்டால், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,விடம் பேரம் பேச முடியாத நிலை ஏற்படும்.வெற்றி பெற்றால், கூடுதல் பங்கு கேட்க முடியும். அதனால், அக்கட்சியும் வெற்றிக்கு, அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும். எனவே, இரு தொகுதிகளிலும், விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
No comments:
Post a Comment