சிஷ்யன் பாடம் படித்துக்கொண்டிருந்தான். குரு போதித்துக்கொண்டிருந்தார்.
ஆசிரமத்துக்கு வெளியே இருந்து உரத்த குரல்கள் ஒலித்தன. யாரோ பேசிக்கொண்டிருந்தனர்.
நேரமாக ஆக.. குரல்களில் வேகமும் விதண்டாவாதமும் கூடிக்கொண்டே இருந்தன. வசைச்சொற்களும் தாறுமாறாக ஒலித்தன.
பாடத்தில் கவனம் செலுத்தமுடியாத சூழலாக மாறியதும், ‘‘வெளியே சென்று என்ன நடக்கிறதென்று பார்த்து வா’’ என்றார் குரு.
வெளியே சென்றான் சிஷ்யன். ஒருசில நிமிடங்களில் திரும்ப வந்து, ‘‘யாரோ இரண்டு பேர் கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.
இருவரையும் சமாதானப்படுத்திவைத்தேன்.
வேண்டா வெறுப்போடு கலைந்து சென்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்குள் நிரந்தர சமாதானம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது இடத்தில் நின்று மறுபடியும் தங்கள் சண்டையைத் தொடருவார்கள் என்றே நினைக்கிறேன்’’ என்றான்.
அவன் அமர்ந்ததும் ஒரு கேள்வியைக் கேட்டார் குரு.. ‘‘அருகருகே இருக்கும் நபர்கள் ஏன் அவ்வளவு சத்தத்துடன் பேசிக்கொள்கிறார்கள்? மெதுவாகப் பேசினாலே இருவருக்கும் கேட்கும்தானே?’’ என்றார்.
யோசித்தான் சிஷ்யன்.
‘‘பொதுவாகவே அருகருகே இருக்கும் நபர்கள் சன்னமான குரலில்தான் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் மட்டும் ஏன் இப்படி பெருங்குரலெடுத்துப் பேசுகிறார்கள்?’’ என்று மறுபடியும் கேட்டார் குரு.
சிஷ்யன் யோசனையிலேயே இருந்தான். அவனால் குருவின் கேள்விக்கான பதிலை அறிய முடியவில்லை.
‘‘என்னால் இதற்கு விடை காண முடியவில்லை குருவே. நீங்களே விளக்குங்கள்..’’ என்றான் சிஷ்யன்.
குரு பேச ஆரம்பித்தார்.. ‘‘மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு அருகருகே இருக்கும்போது உடலால் மட்டுமல்ல,
மனதாலும் நெருக்கமாகவே இருக்கிறார்கள்.
அதனால்தான், அருகருகே இருக்கும் காதலர்கள் மிகவும் பக்கத்தில் இருக்கும் மூன்றாவது நபருக்குக்கூட கேட்காத அளவில் மிகவும் சன்னமான குரலில் பேசி மகிழ்கிறார்கள்..’’.
தலையசைத்து ஆமோதித்தான் சிஷ்யன்.
குரு தொடர்ந்தார்.. ‘‘ஒருவருக்கொருவர் கருத்து வேறுபட்டு வாதிட நேரும்போது, அது ஆக்கப்பூர்வமான விவாதமாக இருக்கும்பட்சத்தில்,
அப்போதும் குரல்களை உயர்த்தமாட்டார்கள்.
நீயா நானா என்ற பிடிவாதம் இருக்காது. எந்தக் கருத்து சரியானது என்பதை வாதிட்டு அறிந்துகொள்ளும் ஆர்வமே நிலையாக இருக்கும்.
ஆனால் வாதம், விதண்டாவாதமானதும் நீயா நானா என்ற பிடிவாதம் பற்றிக்கொள்ளும்.
அப்போது அவர்களது உடல்கள் அருகருகே இருந்தாலும், மனதளவில் ஒருவரை விட்டு ஒருவர் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
அந்த இடைவெளியின் வெளிப்பாடுதான் உரத்த குரலில் பேசுவது.
தூரத்தில் நிற்பவர்களுடன் பெருங்குரலெடுத்துத்தானே பேசவேண்டி இருக்கும்!
அருகருகே நிற்கும் உடல்களை மறந்து, தூரத்துக்குச் சென்றுவிட்ட மனதே பிரதானமாகத் தெரியும்!’’ என்றார் குரு.
அவர் சன்னமான குரலில் பேசியது தெளிவாகவே கேட்டது சிஷ்யனின் மனதுக்கும்!
No comments:
Post a Comment