"அதிகாரிகள் பரிந்துரைத்தார்கள்; அமைச்சர் வெறும் கையெழுத்து மட்டும்தான் போட்டார்!"
அதாவது அமைச்சர்கள் எதுவுமே தெரியாத அப்பாவிகள்! வெகுளிகள்!
தனது அரசியல் அதிகாரத்தை, பண பலத்தை, கட்சி ஆள் பலத்தை...
எந்த சமயத்திலும் எதற்கும் எப்போதும் யார் மீதும் பிரயோகிக்காதவர்கள்! எந்தவிதமான 'பிரஷரும்' அவர்கள் அதிகாரிகளுக்குத் தருவதே இல்லை!
அவ்வளவு வெள்ளந்தியான வெகுளிகள் நமது அமைச்சர்கள்! அவர்களுக்கு ஒரு உத்தரவில் கை எழுத்துப் போடும் போது அதன் சாதக பாதகங்கள் எதுவுமே தெரியாது!
அதிலும் ஹார்வர்டில் படித்து, பொருளாதாரம் - சட்டம் இரண்டிலும் வல்லுநர் என்று உலக அளவில் புகழ் பெற்றவராக இருந்தாலும் கூட...
ஒரு கட்சியின் தலைமையையே வழிகாட்டி நடத்தும் அளவுக்கு அனுபவமும், பணபலமும், ஆள்பலமும், ஆளுமையும் பெற்றவராக இருந்தாலும் கூட...
ஆங்கிலத்திலும் அவரது தாய்மொழியிலும் வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைப்பதில் மிகச்சிறந்த மொழிவளமும், தேர்ந்த சொல்லாட்சியும் பெற்றவராக இருப்பினும் கூட....
பாவம் என்ன செய்வார் அவர்? ராஜீய நிர்வாக விஷயங்களின் அரிச்சுவடி கூட அறியாதவர் ஆயிற்றே அவர்!
ஐயோ பாவம் அவர்! அத்தனை வெகுளி! அப்படி ஒரு அப்பாவி! அப்படி ஒரு வெள்ளந்தியானவர் பாவம்!
ஆறேழு செகரட்டரிகள், அல்லது ஒரு டஜன் உயர்மட்ட அதிகாரிகள் - "பரிந்துரை"- என்ற பெயரில் எதையோ எழுதி இவர் முன்பாக ஃபைலை நீட்டினார்கள்!
பாவம், இவர் அப்பாவி,என்ன செய்வார்? அந்த அதிகாரிகள் நீட்டிய ஃபைல்களில் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டதோடு சரி!
எனவே... எனவே... எனவே... அந்த அதிகாரிகள்தான்....
சொல்வது யார்? ஒரு முன்னாள் பிரதமர்! அவரே ஒரு 'பொருளாதார மேதை'!
இப்படி அமைச்சர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால், 'கூட்டுப் பொறுப்பு'- 'கூட்டாக யோசித்து முடிவெடுத்தல்- (Collective Decision) என்ற அமைப்பே குலைந்துவிடுமாம்!
அதனால் அமைப்பு குலையாது!
பிரச்னை என்று வந்தால் அதிகாரிகளைக் கைகாட்டி விட்டு நகரும் இந்த அபாயகரமான அணுகுமுறைதான் கூட்டுச் செயல்பாட்டைச் சீர்குலைக்கும்!
அதுவும் ஒரு முன்னாள் பிரதமர் இப்படி அதிகாரிகளைக் கைகாட்டி விட்டு அரசியல்வாதியை மீட்பதற்குத் துணை போவது...
வெட்கக்கேடு!
No comments:
Post a Comment