31-03-1999 அன்று விடியற்காலை 3 மணிக்கு புலனாய்வுத் துறை ஐ.ஜி.-யால் மிகுந்த அவசரச் செய்தி என்று பரபரப்பாக எழுப்பப்பட்டார் கலைஞர். அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வயது 76.
சென்னயை அடுத்துள்ள செங்குன்றம் ஏரிக்கரை உடையும் அபாயத்திலே இருப்பதாகவும், அதன் காரணமாக,சென்னையும் அதன் சுற்றுப்புறமும் மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம் எனும் அவசரத்திற்கான காரணத்தை காவல்துறை ஐ.ஜி.சொன்னவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் கலைஞர். உடனே தலைமைச் செயலாளரோடும், காவல்துறை அதிகாரிகளோடும், பொதுப்பணித் துறை அதிகாரிகளோடும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவரோடும் தொடர்பு கொண்டு உடனடியாக எச்சரிக்கை பணிகளை மேற்க்கொள்ளும்படியும், தாழ்வான பகுதிகளிலே உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்படியும் உத்தரவிட்டார் கலைஞர்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஐந்தே கால் மணியளவிலே தலைமைச் செயலகத்திற்கு வந்து எதிர்கட்சி தலைவருக்கும் சபாநாயகருக்கும் இந்த தகவலை வழங்கி, அதன் பின்னர் அப்போது அமைச்சர்களாக இருந்த திரு.ஆற்காடு வீராசாமி, திரு.கோ.சி.மணி, அப்போதைய வணக்கத்திற்குரிய மேயர் அண்ணண் தளபதி மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் ஆகியோரோடு தலைமைச் செயலகத்திலே அவசரக் கூட்டம் நடத்தினார். அதற்குள் அந்த திருவள்ளூர் மாவட்டத்தினுடைய அமைச்சர் திரு க.சுந்தரம் அவர்கள் உடனடியாக உடைப்பு எற்பட்ட இடத்திற்குச் சென்று, அங்கிருந்து கலைஞருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.
செங்குன்றம் ஏரியில் முன் நாள் இரவு 10 மணியளவில் புழல் - அம்பத்தூர் சாலையில் வேலம்மாள் பாலிடெக்னிக் கட்டடத்திற்கும் செங்குன்றத்திலே உள்ள சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே 30 அடி அகலமும், 25 அடி ஆழமுமான உடைப்பு ஏரிக்கரையில் ஏற்பட்டு இருக்கிறது.இந்த உடைப்பு ஏற்பட்டபோது ஏரியில் அதன் கொள்ளளவான 300 கோடி கன அடி தண்ணீர் முழுவதுமாக ஏரியில் நிரம்பியிருந்தது. இரவே உடனடியாக அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை எடுத்து,பக்கத்திலே உள்ள காவாங்குளம், குளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய ஊர்களிலே உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வெளியேற்றப்பட்டனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் எல்லாம் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த உடைப்பை அடைப்பதற்காக மேற்கொண்டணர். பாதிப்பு பெரிய அளவிலே நேரிட்டு இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு சொல்லப்பட்டு அவர்களும் தயார் நிலையிலே வைக்கப்பட்டார்கள்.
பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களுடைய மாமனார் காலமாகிவிட்டதை அறிந்த அவர் முன் நாளே ஊருக்கு போயிருந்தாலும் கூட தகவலரிந்தவர் அதையும் பொருட்படுத்தாமல் சென்னைக்கு வந்து கொண்டிருந்ததை கேள்விபட்டதும் ராணிப்பேட்டை அருகே அவரை செல்போனில் தொடர்பு கொண்டு வரவேண்டாம் என்று தடுத்து திருப்பி அனுப்பிவிட்டார் கலைஞர்.
கலைஞர் தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தை முடித்த நிலையில் தலைமை செயலகத்தில் இருந்து காலை 7 மணியளவில் கலைஞரும் அமைச்சர்களும் மேயரும் தலைமைச் செயலாளரும் நேராக செங்குன்றம் சென்று உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார்கள். சென்னைக்கு ஏற்பட இருந்த மாபெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர்.
அவர்கள் அங்கு சென்றபோது அங்கு ஏற்கனவே அமைச்சர்கள் திரு ஐ.பெரியசாமி, திரு.கு.பிச்சாண்டி, திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.புரசை ரங்கநாதன், மறைந்த திரு.செங்கை சிவம், திருவெற்றியூர் விஜயன் ஆகியோர் அங்கு வந்து விட்டிருந்தனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி அவர்களின் தலைமையில் குடிநீர் வாரிய அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அந்த உடைப்பை அடைப்பதற்கான 'ஒரிஜினல்' போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்த பணிகளையெல்லாம் பார்வையிட்டு முடித்து விட்டு "இந்த உடைப்பின் காரணமாக சென்னை மாநகருக்கு ஏற்படவிருந்த பேராபத்து, அரசு மேற்கொண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தவிர்க்கப்பட்டதோடு வருங்காலத்தில் சென்னை மாநகருக்குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத அளவிற்கும் காப்பாற்றப்பட்டது" என்பதை நெஞ்சம் நிமிர்த்தி கம்பீரமாக அன்றே சட்டமன்றத்தில் தெரிவித்தார் கலைஞர்..
No comments:
Post a Comment