விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதாகவும், பாதுகாப்பு வேண்டும் எனவும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தர்பார். இப்படம் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக சில விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் முருகதாஸின் வீடுகளை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டஈடு கேட்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும். தனக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸிற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முருகதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் பதிலளித்தது. இந்நிலையில் தான் தாக்கல் செய்த புகார் மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் விடுக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'நீங்கள் வேண்டும் எனில் விசாரிக்கவும், வேண்டாம் எனில் விசாரிக்க கூடாது எனவும் சொல்கிறீர்கள். நீதிமன்றம், உங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டுமா?' என கண்டித்து, வழக்கை முடித்து வைத்தது.
No comments:
Post a Comment