Wednesday, February 12, 2020

இரட்டைஇலை வரலாறு ....

#புரட்சித்தலைவர் திமுகவிலிருந்து வெளியேறி
கட்சி ஆரம்பித்த போது
அவருடன் வந்தவர்கள் ஆறே ஆறு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே'
சமாதியில் இலை வைத்துப் படைப்பார்கள்.
இப்போது இலையைச் சமாதியில் வைத்துவிட்டார்கள்.
``இதுமட்டும் நடந்துச்சுன்னா, ஊருக்கே இலை போட்டுச் சாப்பாடு போடுவேன்” என்பது கிராமத்துச் சபதங்களில் ஒன்று.
``அவன் வீட்டுல இனி இலை போட்டுச் சாப்பிடுறேனா பார்” என்பது இப்போதும் கிராமத்துக் கோபங்களில் ஒன்று.
வாழ்த்தவும் வசைபாடவுமான நம்பிக்கைகளில் ஒன்று `இலை'.
இந்த சென்டிமென்ட்டை ஒழுங்காகப் பயன்படுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.
கருணாநிதியும் இந்திரா காந்தியும் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து (1980) திடீர் சட்டமன்றத் தேர்தலை வரவழைத்தார்கள்.
அப்போது தமிழ்நாட்டு மக்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்டார்,
“நான் இலை வைத்திருக்கிறேன். மக்களே நீங்கள் எனக்கு விருந்து படைப்பீர்களா?” என்று!
கொடுத்துச் சிவந்த கரம் வைத்த இரவல் கோரிக்கையைப் பார்த்து அழுத மக்கள்,
செரிக்காத அளவுக்கு எம்.ஜி.ஆருக்கே பெருவிருந்து கொடுத்தார்கள்.
கருணாநிதிக்கு மிஞ்சியது மிச்சமும் சொச்சமும்.
அதன் பிறகுதான் செடிகொடி அனைத்திலும் மிளிர்வது அ.தி.மு.க-வின் சின்னமாக வளர்சிதை மாற்றம் பெற்றது.
இரட்டை இலை, அ.தி.மு.க-வின் அதிகார பூர்வச் சின்னமாக ஆவதற்கு முன்னால்,
அது சுயேச்சை சின்னமாகத் தேர்தல் ஆணையத்தின் அலமாரியில் சுருண்டுகிடந்தது.
தி.மு.க-விலிருந்து (1972 அக்டோபர் 10) நீக்கப்பட்டபோது,
‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் இருந்தார் எம்.ஜி.ஆர்.
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சத்யா ஸ்டூடியோவை நோக்கி சாரி சாரியாக ரசிகர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
அவர்களுக்குச் சொல்லவும் எம்.ஜி.ஆரிடம் செய்தி இல்லை.
எம்.ஜி.ஆரை நீக்கியதற்கு அங்கீகாரம் வாங்க,
அவசர அவசரமாக தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டினார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.
‘பொதுக்குழுவுக்கு வருபவர்களை மறிக்கப்போகிறோம்’ என்று எம்.ஜி.ஆரிடம் அனுமதி வாங்க இரண்டு பேர் வந்தார்கள்
ஒருவர் வண்ணை மு.பாண்டியன், இன்னொருவர் இ.மதுசூதனன்.
இவர்களுக்கும் எம்.ஜி.ஆர் அனுமதி தரவில்லை.
அதை மீறிப் போய் தி.மு.க உறுப்பினர்களை மறித்ததாக பாண்டியனும் மதுசூதனனும் கைதானார்கள்.
இருவரும் ஆர்.கே நகர்காரர்கள்.
எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதை, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் 277 பேரும் ஆதரித்தார்கள்.
தீர்மானத்தை விளக்கி சீரணி அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில்
முதல்வர் கருணாநிதி உள்பட, தி.மு.க முன்னணியின் அத்தனை பேரும் எம்.ஜி.ஆரை வறுத்தெடுத்தார்கள்.
‘எம்.ஜி.ஆரை `இதயக்கனி' என்றார் அண்ணா.
இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டது’ என்று கருணாநிதி சீண்டினார்.
எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த அனகாபுத்தூர் ராமலிங்கம்,
“தலைவரே! அது கருணாநிதியின் தி.மு.க. நாம்தான் அண்ணாவின் தி.மு.க” என்றார்.
அதிலிருந்து வார்த்தையைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.
அடுத்த இரண்டாவது நாளே
(1972 அக்டோபர் 17) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.
எம்.ஜி.ஆருக்கு வந்தது ஆறே எம்.எல்.ஏ-க்கள்.
தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பந்தாடப்பட்டார்கள்.
அடிதடியும் ரெளடித்தனமும் தாண்டவம் ஆடின.
போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
விருகம்பாக்கத்திலும் ஆவடியிலும் எம்.ஜி.ஆர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தக் கட்சியை நடத்தியே ஆகவேண்டும் என்ற வெறி,
எம்.ஜி.ஆருக்கு ஆவடியில்தான் வந்தது.
அவரோடு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.
‘`என்னை அடிக்க முடியாமல் உங்களை அடித்துள்ளார்கள்.
என் கண் முன்னால் அடிபட்டுக் கிடக்கின்ற நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.
எதிர்கால போலீஸ் உங்கள் கையில் என்பதை மறவாதீர்கள்!” என்றார்.
ரத்தம், அவரை அப்படி ஒரு சபதம் எடுக்கவைத்தது.
ஆறே மாதங்களில் அடுத்த சோதனை. திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல்.
‘`உதயசூரியனின் பாதையிலே... உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...”
என்று எந்தச் சின்னத்தை சினிமாவில் வளர்த்தெடுத்தாரோ...
உதயசூரியன் பார்டர் போட்ட சேலையை வாங்கி பெண்களுக்குக் கொடுத்தாரோ,
அந்தக் கறுப்பு-சிவப்புக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றாக வேண்டும்.
அன்று மாநிலத்தை ஆளும் கட்சி தி.மு.க.
மத்தியில் ஆளும் கட்சி இந்திரா காங்கிரஸ்.
காமராஜர் முன்னின்று நடத்தி வந்தது ஸ்தாபன காங்கிரஸ்.
இந்த மூன்று மலைகளையும் எதிர்த்து ஆறே மாதங்கள் ஆன அ.தி.மு.க மோத வேண்டும்.
அன்றைய வேட்பாளர் மாயத்தேவருக்கு, முதன்முதலாக இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள்.
‘`சூரியனும் இயற்கை;
இலையும் இயற்கை.
இருக்கட்டும்” என்றார்.
‘`சூரியன் உதித்தால் இலை கருகிவிடும்” என்று தி.மு.க-வினர் அளித்த விளக்கத்தால் எம்.ஜி.ஆர். திணறினார்.
இலையை எப்படி மக்களுக்கு அறிமுகப்படுத்துவது? மரம், செடி, கொடிகளில் இருக்கும் இலைகளைப் பறித்து மக்களிடம் கொடுத்தார்கள்.
பதிவான வாக்குகளில் பாதியை வாங்கி, அன்றைய மாநில ஆளும் கட்சியான தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்கும்,
மத்திய ஆளும் கட்சியான இந்திரா காங்கிரஸை நான்காவது இடத்துக்கும் தள்ளினார் எம்.ஜி.ஆர்.
‘இனி தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி.மு.க நீங்கலாக இன்னொரு கட்சிக்கு வேலை இருக்காது’
என்று காமராஜரை நினைக்கவைக்கும் வெற்றியைக் கொடுத்தது இரட்டை இலை.
அது வெற்று இலை அல்ல...
வெற்றி இலை ஆனது.....
நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பிரசாரம் வந்த எம்.ஜி.ஆர்.,
இரட்டை இலையின் அடையாளமாக இரண்டு விரல்களைக் காட்டத் தொடங்கினார்.
மூக்கை இரண்டு விரல்களால் தேய்த்துவிட்டு
டயலாக் பேசும் வழக்கத்தை சினிமாவில் வைத்திருந்த அவர்,
அதே இரண்டு விரல்களை மக்களை நோக்கிக் காட்டினார்.
அதன் பிறகுதான் ஐந்து விரல்களைக் காட்டி ‘உதயசூரியன்’ என்று உருவகப்படுத்தியது தி.மு.க.
மொத்தத் தமிழ்நாடும் இவர்கள் இருவர் கைக்குள் அடக்கும் என்பதற்கான சாத்தியத்தை
உதயசூரியனும்
இரட்டை இலையும் உருவாக்கிக்கொடுத்தன.
கட்சிச் சின்னத்தைப் பச்சை குத்துவதும்,
கண்களை மூடிக்கொண்டு வாக்களிப்பதும் இதன் பிறகுதான் தொடங்கியது.
எம்.ஜி.ஆர் இருக்கும் வரை மட்டுமல்ல,
இறந்த பிறகும் இலைதான்
சோறு போட்டது.
மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் அம்மாவும் ... ஆட்சியைப் பிடித்தார்.
மூன்று முறையும் இலையில் விருந்து படைக்கப்பட்டது அவருக்கு.
தேர்தல் நேரத்தில் மட்டும் அவர் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்ததன் காரணம்,
அவர்தான் சோறு போட முடியும் என்பது அவருக்கும்... தெரிந்திருந்ததுதான்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...