Tuesday, October 12, 2021

படித்ததில் சிந்திக்க வைத்ததால் பகிர்கிறேன் இங்கு.

 சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார்.

அவர் வரும் வழியில் பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான்.
அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார்.
அவனை அசைத்துப் பார்த்தார்.
அவன் அசையாமல் கிடந்தான்.
சாதுவிற்கு ஒரு யோசனை தோன்றியது.
தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.
மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.
குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் பட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.
சாது சுதாரிப்பதற்குள், அவன் அந்தக் குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது.
திகைத்துப் போனார் சாது. என்ன மாதிரி ஒரு ஏமாற்று?
அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும் இதுவரை அவன் தன்னிடம் மயங்கியது போல நடித்துள்ளதும் தெரிந்தது அவருக்கு.
குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு வேறு ஒரு குதிரை வாங்கப் போனார்.
அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.
திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான்.
சாது மெல்லச் சிரித்தார்.
"சொல்லாதே!" என்றார்.
திருடன் மிரண்டான்."எது?
என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
சாது சொன்னார்.
"குதிரையை நீயே வைத்துக் கொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே.!"
மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில், உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள்.
நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.
காரணம், என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை.
சில காலம் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும்.
தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும்.
புரிகிறதா? என்றார்.
திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அது அவன் திருந்தியதற்கான அடையாளம்.
நீதி:"குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளை நாம் ஒரு போதும் சிதைத்து விடவே கூடாது. அதே போல, நல்லவர்களையும், நல்ல நட்பையும் நாம் ஒரு போதும் இழந்து விடவும் கூடாது!"
இந்த நாள் இனிய நாள் ஆக நமக்கெல்லாம் அமையட்டும் நட்புகளே 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...