Friday, October 8, 2021

காவடி பிறந்த வரலாறு பற்றி தெரியுமா?

 அடர்ந்த காட்டில் கணவனின் பின்னால் மனைவி இடும்பி நடந்து கொண்டிருந்தாள். அசுரனுக்கு எல்லாம் ஆசான் என பெயர் இடும்பியின் கணவன் இன்று இரு மலைகளை தூக்கிக்கொண்டு நடக்கின்றான்.

கல்லும் முள்ளும் நதிகளும் பசுமை நிறைந்த செடிகளும் உள்ளடக்கிய சப்தகிரி , சிவகிரி எனும் அழகிய மலைகளை சுமந்தவனாய் பொதிகை மலை நோக்கி நடக்கிறான்.
அகஸ்திய முனிவரின் ஆசையை நிறைவேற்றி, முருகனின் அருள் ஆசி பெற்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இடும்பன் நடக்கின்றான். இரு நாகங்கள் கயிறாக்கி உறிகொண்டு மலையை சுமந்து நடக்கின்றான்.
அசுரர்களுக்கு ஆசான் என்று இறுமாந்து நின்ற இடும்பன் இன்று இறையருள் பெற்று ஆன்மீக கடலில் மூழ்கும் ஆர்வம் கொண்டு ஆனந்தத்தோடு மலையை சுமந்து நடக்கின்றான். ஆணவம் அகங்காரம் அனைத்தும் தொலைத்தவனாய், ஆடிய ஆட்டம் என்றும் நிலைபெறாது எனும் கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க மலையைச் சுமந்து நடக்கின்றான்.
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை
இன்பமும் துன்பமும் வாழ்க்கை எனும் வண்டியின் சுழலும் சக்கரமே என்பதை தெளிவாக புரிந்து கொண்டவனாய் மலையை சுமந்து நடக்கின்றான்.
ஆண்டவனுக்கே மனைவி என்றாலும் அசுர குலத்தவன் மனைவி என்றாலும் ஆடி ஓடி உழைக்கும் தொழிலாளியின் மனைவி என்றாலும், பெண்ணுக்கு அழகு கணவன் பின்னால் நடப்பது தான் எனும் கருத்தை உலகுக்கு சொல்பவளாய் கணவன் பின் நடக்கின்றாள் இடும்பி
சிவனோடு சக்தி அடிக்கடி கோபம் கொண்டு தாண்டவமாடி பூமிக்கு வந்துவிடுவாள்... இருந்தாலும் சிவன் சக்தியை தேடிச்சென்று ஆட்கொள்வதை போல, கணவன் மனைவி சண்டை பூசல் வந்தாலும் கணவனை விட்டு பிரியாத மனைவியாய் இடும்பை அவன் பின்னே செல்கின்றாள்.
அசுரர் குல சகவாசம் வேண்டாம்- என்று எடுத்துச் சொல்லியும் கேட்காத கணவன், இன்று படும் துன்பத்தை கண்டு மனதளவில் நொந்தவளாய்...
கணவன் மேல் ஆயிரம் பாசம் மனதிற்குள் பொழிந்தாலும் வெளிக்காட்டாது நடிப்புக்கு பெயர் போனவளாய், கோபம் எனும் பாசாங்கு செய்தபடி கணவன் பின்னே செல்கின்றாள்.
திருஆவினன்குடி வருகையில் மலையை சுமந்த இடும்பனும் அயர்ந்துவிட, ஓய்வெடுக்க நினைத்தவனாய் காவடியை இறக்குகின்றான். சிவகிரி சப்தகிரி இரு மலைகளும் திருஆவினன்குடி தனிலே,சிவசக்தி சொரூபமாய் குடி அமர்ந்ததுவும் ஒரு அழகன்றோ!
அந்த மலைகளே பிற்காலத்தில் பல கோடி பக்தர்கள் ஏறுகின்ற பழனிமலையாய் காட்சியளிக்க போகின்றது என்பதை அறியாத இடும்பன் களைத்துப்போய் அமர்கின்றான்.
வரப்போகும் ஆபத்தை உணராமல் இடும்பன் இளைப்பாற.... இடும்பியோ அவசரமாய் நெருப்பு மூட்டி ஆக்கி வைத்த உணவுதனை ஆசையாய் பரிமாற ...இடும்பன் சாப்பிட்டு இளைப்பாற....
கணவனின் முகத்தினிலே திருப்தியை கண்டவளாய் சற்றே தானும் அயர்கின்றாள் இடும்பி.
உழைப்பவனுக்கு ஓய்வு ஏது? சாதிக்க நினைப்பவனுக்கு சற்றே அயர்வதற்கும் மனம் தோணாது .தவறு செய்தவனுக்கு சரி செய்ய வழி கிடைத்துவிட்டால் தூக்கம் தான் வருமோ ! சட்டென்று எழுந்தான் இடும்பன்
கணவனின் மனம் உணர்ந்த இடும்பையும் தூக்கம் கலைகின்றாள்.
இப்பொழுது மலையை தூக்கினால் மாலை பொழுதுக்குள் பொதிகையை அடைந்துவிடலாம். அகஸ்திய மாமுனி நமக்கு கொடுத்துள்ள வாக்கு நிறைவேறிவிடும்.
அசுரகுல சூரபத்மனுக்கு சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்து பாவத்தை சுமந்த நமக்கு , முருகனின் இறையருள் கிடைத்துவிட்டால் போதும் புண்ணிய மோட்சம் கிடைக்கின்ற பேறு கிடைக்கப் போகின்றது.
எண்ணியெண்ணி பூத்தவனாய் பயமுறுத்தும் மீசைதனை தாண்டி புன் சிரிப்பு தெரிகின்றது. என்னால் முடியும் என்ற வேகம் வந்து விட்டால் சூறாவளி காற்றும் கடுகளவே... வேகத்தோடு மலையை தூக்குகின்றான் இடும்பன்.
தூக்க முடியாது திகைக்கிறான். அகத்திய மாமுனியின் மந்திரத்தை உச்சரித்து, மீண்டும் தூக்க முயல பயனின்றி விழுகின்றான்.
பாலகன் முருகனுக்கு கோபம்
மலையில் வேறு யாராவது இருக்கின்றனரா! என தேட தென்பட்டான் ஒரு சிறுவன். சிவகிரி மலைதனில் பிரகாசமாக ஒளி கொடுக்கும் முகம் கொண்டவனாய் கோபத்திலும் ஒரு அழகு உண்டு மூத்தோர் சொல் நிரூபித்தவனாய் பால்வடியும் முகத்திலே பற்று அனைத்தும் துறந்தவனாய், மழலை கனியமுதாய் கலையான முகத்தவனாய், இடும்பனை நோக்க...
மலையை தூக்க முடியாத காரணம் சிறுவனோ! என ஐயத்தோடு இடும்பனும் பாலகனை நோக்குகின்றான்.
மலையை விட்டு இறங்க சொல்கிறான். இறங்க மாட்டேன் என சிறுவனும் பிடிவாதம் பிடிக்க.. முதலில் பொறுமையாக ,பிறகு சற்று கோபமாக, அதன்பிறகு தூக்கி வெளியேற்ற முயற்சி செய்கின்றான்.
ஏற்கனவே ஞானப்பழம் வேண்டி கோபம்கொண்டு மலைதனில் அடைக்கலமாய் அமர்ந்த பாலகன் முருகனோ கோபம் கொண்டான்.
தன்னுடைய வேல்கொண்டு ஆஜானுபாகுவான இடும்பனை சற்றே தள்ளிவிட ..அக்கணமே கீழே விழுந்து இறந்து விடுகிறான் இடும்பன். கண்ணிமைக்கும் நேரத்தில் செய்வதறியாது திடீரென்று ஏற்பட்ட நிகழ்வு கண்டு கதறி அழுகின்றாள் இடும்பி. ஓலமிடுகின்றாள். கணவனை உயிர்ப்பித்து தருமாறு பாலகனின் காலில் விழுந்து வேண்டுகின்றாள்.
அசுரனுக்கு ஆட்கொண்டவன் முருகன். தவறு செய்வோர் வருந்தினால் மன்னித்து அருள்பவன் முருகன். இடும்பையின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான்.உயிர்ப்பித்து எழுந்தான் இடும்பன் . ஆட்கொண்டான் முருகபெருமான்.
காவடியின் மகிமை
இனி எனக்கு காவலனாக 'காவல்தெய்வம் இடும்பன்' எனும் பெயர் கொண்டு ,என்னுடனேயே இருப்பாய் எனும் வரத்தை அளிக்கின்றான்.
காவடி சுமந்து உமை முதலில் வணங்கிய பிறகே ,எமை வேண்டி வரும் பக்தர்களுக்கு நான் அருள் பாவிப்பேன் வரத்தை பெறுகின்றான்இடும்பன்.
அன்று முதல் முருகனுக்கு காவல் தெய்வமாய் இடும்பன் காட்சி தருகின்றான். பழனிமலைமீது செல்லும் பாதையில் இடும்பனுக்காக கோவில்உண்டு.
எல்லா முருகன் கோவிலிலும் இடும்பன் காவல் தெய்வம் உண்டு. முருகன் கோயிலுக்கு செல்லும் போது முதலில் இடும்பனை வணங்கி விட்டு பிறகு முருகனை வணங்குங்கள்.
சிவபெருமானுக்கு நந்திதேவர் காவலனாய் காவல் தெய்வமாய் இருப்பது போன்று முருகப்பெருமானுக்கு இடும்பன் காவல் தெய்வமாக காட்சி தருகின்றான்.
நந்தீஸ்வரரின் காதில் நாம் எந்த காரியத்தை ஜெயம் ஆக வேண்டுமென்று வேண்டினாலும் உடனே நிறைவேறும் அதுபோன்று...
மனதிலே ஒரு காரியத்தை நினைத்து ஜெயமாக வேண்டும் என்று முருகனின் காவல் தெய்வம் இடும்பனை வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் .இடும்பனை வணங்குவோம் வாழ்வினில் முருகனின் அருள்பெற்று வாழ்வினில் இனிமை காண்போம் .
ஓம் ஷண்முகாய நமஹ
நன்றி 🙏 🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...