முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், 2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் மாதம் ஒரு மனதாக மசோதா இயற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ரவி, அதை இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல், தன் பரிசீலனையில் வைத்துள்ளார்.
ஒரு நாள் விவாதம்
இந்நிலையில், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தை தன் உரையுடன் கவர்னர் ரவி, சமீபத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, ஒரு நாள் விவாதம் நடந்தது. இரண்டாவது நாள், முதல்வர் ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம், தலைமை செயலகத்தில் கூட்டப்பட்டது.
அதில், சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பாமல், கவர்னர் ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தார்.இது, கவர்னருக்கு அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. சட்டசபையில் உரை நிகழ்த்தும் போது, 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழ், வாழிய பாரத மணித் திருநாடு, ஜெய்ஹிந்த்' என்று கூறி, கவர்னர் தன் உரையை நிறைவு செய்ததாக
தெரிகிறது. தமிழக அரசு வெளியிட்ட கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை மட்டும் இடம் பெறவில்லை. இதுவும் கவர்னருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடந்து வரும் சில செயல்களால், கவர்னர் அதிர்ச்சி அடைந்துஉள்ளார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக ஒரு அறிக்கையை, சமீபத்தில் கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் மதமாற்றம், சில என்.ஜி.ஓ., அமைப்புகள் வாயிலாக வரும் வெளிநாட்டு பணம், பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்டவை குறித்து, மூன்று பத்திகளில் அந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
அரசின் செயல்பாடுகள்
ஒவ்வொரு கவர்னரும், மாதத்திற்கு இரண்டு முறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பது வழக்கம். அந்த வகையில், இம்மாதம் அனுப்பியுள்ள முதல் அறிக்கையில், தான் பதவியேற்றது முதல் இதுவரை அனுப்பிய அறிக்கைகளில் இல்லாத அளவிற்கு, காரசாரமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த அதிருப்திகளை, கவர்னர் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த அறிக்கையின் நகல்கள், ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திப்பது கடினம். எனவே, இ - மெயில் வாயிலாக இந்த கடிதத்தை, கவர்னர் அவசரமாக அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமையை விளக்குவதற்காக, அடுத்த வாரம், கவர்னர் டில்லி செல்லவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கவர்னரின் டில்லி பயணத்திற்கு பின், தமிழகத்தில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, கோட்டை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
சட்டசபையில் வாசிக்கப்படும் கவர்னர் உரையை, மாநில நிதி அமைச்சகம் தயாரிக்கும். தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், 2021ம் ஆண்டு நிகழ்த்திய உரையில், 'ஜெய்ஹிந்த்' வார்த்தை இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை நிதி அமைச்சர் தியாகராஜன், 'கட்' செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நடப்பாண்டில், ஜெய்ஹிந்த் என்று கூறி, கவர்னர் தன் உரையை நிறைவு செய்தாலும், அது அறிக்கையில் இடம் பெறவில்லை. எனவே, தமிழக அரசு வெளியிட்டுள்ள உரை நகலை இணைத்து, மத்திய உள்துறைக்கு கவர்னர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் இணைத்துள்ளார்.
கடந்த முறை டில்லி சென்றபோது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கவர்னர் பேசினார். மீண்டும் டில்லி செல்லும் போது, யாரை எல்லாம் சந்திக்க போகிறார், என்னென்ன புகார்களை ஆதாரத்துடன் அடுக்க போகிறார் என்பது புதிராக உள்ளது.இவ்வாறு கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment