ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்றாரே உதயநிதி. அந்த டெக்னிக் தெரிந்த கட்சி ஏன் வாய்தா வாங்கியது ? நீதி மன்றத்தில் அந்த ரகசியத்தை அவிழ்த்து விட்டு நீட்டை தடை செய்திருக்க வேண்டியதுதானே ? என்று ஏகடியம் பேசுகிறது சங்கிக் கூட்டம்.
புலி பதுங்குவது பாயத்தான் என்ற அடிப்படை அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள்
.எப்போது கழக அரசு கேட்ட அவகாசத்தை அனுமதித்ததோ, வாய்தா கொடுத்ததோ அப்போதே உச்ச நீதிமன்றம் , கழக அரசின் வாதத்திளுள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகத்தானே அர்த்தம் ,
நீட்டை ஒழிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகத்தானே அர்த்தம் என்பது சிறிதளவு அறிவுள்ளவர்களுக்கும் புரியும்..
.
அடுத்த வருடம் மத்திய ஆட்சியே கழகம் கை காட்டும் திசையில்தான் அமையும் என்பதை எத்தனை தோற்ற பின்னும் படிக்கவில்லை இச்சங்கி அதிகப் பிரசங்கிகள்.
அப்படி ஒரு வேளை , கழகம் கை காட்டும் கட்சி ஆட்சி அமைக்காவிட்டால் ? எந்தக் கட்சி வென்று ஆட்சி அமைக்கிறதோ அதன் திசையில் கையைத் திருப்பிக் காட்டிவிட்டால் போகிறது.
அடுத்தபடியாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு கோப்பில்தான் என்றாரே கனிமொழி ? என்று அடுத்த நகைச்சுவை கேள்வியைக் கேட்கிறது பாசிச காவிக் கூட்டம்.
மது விலக்கென்பது முழுமையாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதை அறிவார்களா இவர்கள் ?
சமூகத்தில் பாதிப்பேர், அதாவது பெண்களில் 99 சதவிகிதத்தினர், வீட்டை விட்டு நகர முடியாத அளவுக்கு , உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள், பத்து வயது தாண்டாத , சுயமாக மது வாங்கிக் குடிக்கும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் பெற்றிராத குழந்தைகள் ஆகியோருக்கும் மது உரிமை பரவலாக்கப்பட்ட பிறகு, அதாவது மது இலக்கு முழுமையாக்கப்பட்ட சிலப்பல ஆண்டுகளுக்குப் பின்னர், மது விலக்கு கொணர்வது பற்றி ஆலோசிப்பது பற்றி பரிசீலிக்கலாமா என்று தாயுள்ளம் கொண்ட கழக அரசு யோசிக்கும் அந்த நந்நாள் வரத்தான் போகிறது என்ற நம்பிக்கை கொள்வோம்.
அப்படியானால் திமுக ஆட்சி அமைந்தவுடன் போடும் முதல் கையெழுத்து... என்று கனிமொழி பேசியது ?? என்று வாய்க்கூசாமல் கேட்கும் பாசிச காவி வெறிக் கூட்டத்துக்கு நாம் சொல்லிக் கொள்வது..
ஆமாம்.. கழகம் ஆட்சி அமைத்தவுடன் போடும் கையெழுத்து என்று கனிமொழியார் பேசியது உண்மைதான்.. "முதல்".. என்ற வார்த்தை இவர்களாக செய்துவிட்ட ஒட்டு..
அவர் எந்த ஆட்சியைச் சொன்னார் ? தமிழ்நாடு என்ற இந்தக் குறுகிய நிலப்பரப்பையா ? ஐயா கலைஞர் காலத்தில் நடந்ததே அகில இந்தியாவிற்கும் கலைஞரின் ஆலோசனை, வழிகாட்டுதலின்படி பத்தாண்டுகள் ஒரு ஆட்சி..அப்படிப்பட்ட ஒரு ஆட்சி தளபதி தலைமையில், வழிகாட்டுதலில் மத்தியில்,..மன்னிக்கவும்,... ஒன்றியத்தில் அமைந்ததும் போடக் கூடிய முதல் கையெழுத்துக்கள் பல்லாயிரத்துக்கு இடையே மதுவிலக்கும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு உண்டாகும்.
அப்போதும் குஜராத் போன்ற மதுவிலக்கு எனும் அரக்கனால், போதையில் பிற்படுத்தப்பட்ட ஓரிரு பரிதாப மாநிலங்களுக்கும், ஒன்றியத்தின் 130 கோடி மக்கள் அனைவருக்கும் மது உரிமை முழுமையாக பொதுவாக்கப்பட்ட பிறகு , முழுமையான மது விலக்கு பற்றி ஆலோசிக்கும் ஒரு குழுவை அமைப்பது பற்றிய கோப்பில் முதல் கையெழுத்திடும் இடத்தில் கழகம்தான் இருக்கும்.
அந்த சூழலிலும் கூட சுற்றிலும் நெருப்பிருக்க இந்திய ஒன்றியம் மட்டும் எப்படி தப்பிக்க முடியும் ? இந்தியர்கள் அனைவரும் அருகில் உள்ள பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இலங்கைக்கும் சென்று மது அருந்தி விடுவார்களே !! என்று கலைஞர் வகுத்த பாதையில் பொறுப்போடு கவலைப்படும் கழக அரசு.
கல்வி என்றால் என்ன , மது என்றால் என்ன என்பதையெல்லாம் அரை நூற்றாண்டு கடந்த திராவிட ஆட்சியை பார்த்தும் கற்றுக் கொள்ளாத மூடர்கள், உலகத்திலேயே ஆகச்சிறந்த அரசாக யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக ஆட்சியைப் பார்த்து கேள்வி கேட்பதை அறியாமை என்பதா பொறாமை என்பதா என்பதை தமிழக மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுவோம்..
No comments:
Post a Comment