Tuesday, February 7, 2023

விருதுக்கு அப்பாற்பட்ட இசை தெய்வங்கள்!

 எம். எஸ். விஸ்வநாதன்!

கே. வி. மகாதேவன்!
திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள், தமிழ் மட்டும் தெலுங்கு திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த , தலை சிறந்த இசை வேந்தர் ஆவார். திரை உலகம் மட்டுமல்லாமல், சமூகத்தில், எல்லோராலும் உயர்ந்த மதிப்புடனும், மரியாதையோடும் மதிக்கப் பட்ட மகானுபாவர்.
அடக்கம், அமைதி, எளிமை என எல்லா நல்ல குணங்களுக்கும் உதாரணமாக அமைந்து, அளப்பரிய திறமை பெற்றிருந்தாலும், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், இருக்கின்ற இடம் கூட தெரியாமல், வாழ்ந்து, சரித்திரங்கள், சாதனைகள் படைத்துச் சென்ற மாமனிதர்.(இவருக்கு நீங்கா நிழல்போல, உறுதுணையாக, உதவி புரிந்த புகழேந்தி அவர்களின் சிறந்த சேவையையும், இங்கே நினைவு கூர வேண்டும்)
தமிழ், தெலுங்கு படத்தின் அபாரமான இசையமைப்புக்காக, தேசிய விருது பெற்ற, திறமையானவர். மேலும் நந்தி விருதுகள், மாநில அரசு விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் , போன்றவை ,இவருக்கு அளிக்கப் பட்டதன் மூலம் , கௌரவத்தை அடைந்தன. சிவாஜி, எம்.ஜி.ஆர். , ஜெமினி,எஸ்.எஸ்.ஆர். ,என்.டி.ஆர் ,
நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, ஷோபன் பாபு, சாவித்திரி, பத்மினி, அஞ்சலி தேவி, கே.ஆர்.விஜயா போன்ற பெரிய நடிக, நடிகையர் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்ற , என்றும் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள எண்ணற்ற பாடல்கள், இவர் இசைக் கற்பனையில் உதித்து, ஒளிர்ந்தவை.
அன்போடு அனைவராலும், ' மாமா', என்று அழைக்கப் பட்ட இவரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், எம்.எஸ்.வி, எஸ்.பி.பி, சுசீலா ,வாணி ஜயராம் என்று அனைவரும், வணக்கத்துடனும், வந்தனத்தோடும் , பேசுவார்கள்.
இவரும், மெல்லிசை மன்னர் எம். எஸ். வி அவர்களும், ஒருவருக்கொருவர் நல்ல நட்புடன், மதிப்புடன், பழகி வந்தனர்.
கர்நாடிக் இசையை ஆதாரப் படுத்தி கொடுக்கப் பட்ட பாடல்கள், மண்ணின் மணம் வீசும் கிராமியப் பாடல்கள், இனிமையான காதல் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், மனதை வருடும், உருக்கும் தத்துவ, சோகப் பாடல்கள் , இன்று பிரபலமாக உள்ள குத்துப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியான, துள்ளல் பாடல்கள் என்று இசையில் விதம் விதமான, தேன் சொட்டும் பாடல்களைத் தந்த மாபெரும் இசை வல்லுநர்கள், இவரும், எம்.எஸ்.வியும் தான், என்றால், அது 1000% அக்மார்க் உண்மை.
இன்று வரை, பின் வந்த எல்லா இசையமைப்பாளர்களிடமும், இந்த இசைமேதைகளின் இணையற்ற இசை வண்ணங்களின், தாக்கம் இருந்து கொண்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.
எப்படி இருந்தாலும் இனிப்பு, இனிப்பு தான்.ஒருவரின் படைப்பு, பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்று சுவையானவை என்றால், மற்றொருவரின் கற்பனையில் எழுந்தவை, லட்டு, மைசூர் பாகு, ஜாங்கிரி போன்று ரசிக்க வைப்பவை.
ஒருவர் பட்டு வேட்டி ,அங்கவஸ்திரம், காஞ்சிபுரம் பட்டுப் புடவை , கைத்தறி ஆடைகள், என்ற பாரம்பரிய, கிராமிய உடைகள் போன்று மெட்டுக்கள் அமைத்தார் என்றால், மற்றவர் அதுவே பாலியஸ்டர் வேட்டி, புடவை, கால்சட்டை, டி சட்டை வகையான உடைகள் போல், மனதை மயக்கும் பாடல்கள் கொடுத்தார்.
எங்களைப் போன்ற, அம்பது, அறுபதுகளில் பிறந்த " வயதான குழந்தைகளைக்" கேளுங்கள். இவர்களைப் போன்ற, பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும், அபரிமிதமான, அபூர்வமான இசைச் சக்கரவர்த்திகளைப் பற்றி , நாளெல்லாம், சொல்லிக் கொண்டிருப்போம். இன்று, பெருகியுள்ள தொலைக்காட்சி சானல்கள், யுட்யூப் போன்ற, ஊடகங்களின் புண்ணியத்தில், அந்தக் காலத்தில், கே.வி.எம், எம்.எஸ்.வி படைத்த, காலத்தை வென்று, மனதில் நிலையான, நீங்கா இடம் பெற்ற, இசைக் கோலங்களைக் கேட்டு, ஆனந்தம் பெற முடிகிறது.
இன்று இசையில் பிரமிக்கத் தக்க மாற்றங்கள், மின்னணுத் துறையின் அசுர வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது. பின்னணி இசை, மறு பதிவு, பல்வேறு வகை இசையின் தாக்கங்கள், செவியைப் பிளக்கும் இசை வடிவங்கள் என்று, இன்றைய பாடல்களின் பரிணாமங்களே, சொல்லப் போனால், வேறே ' லெவல்'.
ஆனால், மனதை மகிழ்விக்கும்
இனிமை குறைந்துள்ளது, என்பதை உணர முடிகிறது.
திரை இசைத்திலகம் கே.வி.எம். போன்றவர்கள்,கொடுத்த இசை, ஒளி வெள்ளம் பாய்ச்சி, கண்ணைக் கவர்ந்து மின்னும், ஓராயிரம் வண்ண விளக்குகளுக்கு நடுவே, குடத்துக்குள் வைத்த, அழகான அகல் விளக்கைப் போன்றது.
இன்று விருதுகளை வாரி வழங்கும் ஆரவார சூழ்நிலையில், ஒப்பற்ற இசை விற்பன்னர்களான, கே.வி.எம்., எம்.எஸ்.வி, போன்றோரை, உரிய, உயரிய முறையில், கௌரவிக்க மறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
ஆனால், அவர்கள், இந்த விருதுகளுக்கெல்லாம்
அப்பாற்பட்ட இசை தெய்வங்கள்.
சில தகவல்கள் உதவி: விக்கிபீடியா
May be an image of 2 people and glasses
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...