#சின்ன அண்ணாமலைக்கு ஏற்பட்ட சங்கடத்தை போக்கிய எம்ஜிஆர்..#
திருடாதே படத்தில் எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், சீர்காழியில் இன்பக்கனவு நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
‘திருடாதே’ படத்தை முதலில் பழம்பெரும் காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலை தயாரித்தார். தன்னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்கு இங்கே ஒரு உதாரணம்.
கால் முறிவு காரணமாக எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம். சின்ன அண்ணாமலையை அழைத்தார். ‘‘எனக்கு எப்போது கால் குணமாகி மீண்டும் நடிக்க வருவேன் என்று தெரியாது. அதுவரை காத்திருந்தால் படத்துக்காக நீங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டியும் ஏறிவிடும். எனவே, படத்தை ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுங்கள். உங்களுக்கு லாபமாக நல்ல தொகையைத் தரச் சொல்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
கவியரசு கண்ணதாசனின் சகோ தரர் ஏ.எல்.சீனிவாசன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். எம்.ஜி.ஆர். கூறியபடி ஏ.எல்.சீனிவாசனிடம் ‘திருடாதே’ படத்தை நல்ல விலைக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். படம் வெளியாக சற்றே தாமதமானாலும் ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சின்ன அண்ணா மலையும் கடன் சுமையில் சிக்காமல் தப்பினார்.
இப்படி எல்லா விஷயங்களிலும் மற்றவர்கள் நலனை முன்னிறுத் தியே எம்.ஜி.ஆர். சிந்திப்பார்.
No comments:
Post a Comment