Friday, April 21, 2023

கவியரசர் கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்.

 கவியரசர் கண்ணதாசன்

முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் "மதுரை வீரன்". படம் வெளியான ஆண்டு 1956.
"ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி பெறாத எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தார் என்றால், அடிமைத்தனம் வேரூன்றி கிடக்கும் உலகின் எந்த மூலையிலும், "கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை" "கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை" "அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை" "அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை" என்று இவரிடம் இருந்து வந்த வார்த்தைகளேயன்றி வேறொன்றும் இல்லை.
அறிஞர்
அண்ணா
புற்று நோயால் அவதியுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை நலம் விசாரிக்கும் வகையில், அந்த ஆண்டு வெளிவந்த "தில்லான மோகனாம்பாள்" திரைப்படத்தில், நடிகை பத்மினி, காயமுற்ற சிவாஜியை நலம் விசாரிப்பது போல் அமைந்த காட்சியின் பாடலை கவிஞர் கண்ணதாசன் இவ்வாறு எழுதுகின்றார்
."நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நலம் பெற வேண்டும் நீ இன்று நாளும் என் நெஞ்சில நினைவுண்டு இலைமறை காய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று" என்று பல்லவியிலும்
"கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்" என்று சரணத்திலும்,
அன்றைய தி மு க விலிருந்து விலகியிருந்த கவிஞர்,
ஒரு பாட்டின் வாயிலாக நலம் விசாரித்த அழகு இன்றும் அலாதியான ஒன்று.
திமுகவில் இருந்து விலகிய கவிஞர் கண்ணதாசன், காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பது போலும், காமராஜருக்கு தூது விடுவது போலவும், "பட்டணத்தில் பூதம்" திரைப்படத்தில் வரும்
"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி" என்று சூசகமாக எழுதியிருப்பது தனி அழகு. காமராஜரின் தாயாரின் பெயர் "சிவகாமி அம்மாள்".
இறைவன் என்றால் யார்? அவர் எங்கு இருக்கின்றார்? இந்த கேள்விகளுக்கு கவிஞர் கண்ணதாசன் தனது பாணியில் ஒரு திரைப்பட பாடலில் இவ்வாறு கூறுகின்றார். "ஆண்டவன் கட்டளை" திரைப்படத்தில் வரும் "ஆறு மனமே ஆறு" என்ற பாடலில் "ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்". "அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம்" என்று நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வம் இருப்பதையும், மிருகம் இருப்பதையும் அறியும் வண்ணம் கூறிய மகா கவிஞன் கண்ணதாசன்.
"தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்" "தாய் தூங்க தாலாட்டு நீ பாட வேண்டும்" "நீ பாடும் தாலாட்டை தாய் கேட்க வேண்டும்" "தன் நிலை மாறி அவள் கூட மொழி பேச வேண்டும்" என்று வேறொரு படத்திற்கு கவிஞர் எழுதிய இந்த தாலாட்டுப் பாடல்தான் பின்னாளில் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" "நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்" என்ற காதல் பாடலாக கவிஞரால் உருமாறியது.
சொல்ல வந்த கருத்தை, சொல்ல வந்த விஷயத்தை, அலங்கார வார்த்தைகளன்றி மிக இயல்பாகவும், எளிமையாகவும் தமிழின் இனிமை குன்றாமல் ஆழமான பொருள் கொண்டு, பாமரன் முதல் படித்தவன்வரை சென்றடையும் வண்ணம் பாடல்கள் புனைவதில் கவிஞருக்கு இணை கவிஞரே.
ஒரே பாடலில் விரகதாபத்தையும், துறவறத்தையும் நியாயப்படுத்தும் வகையில் பாடல் எழுதுவதென்றால் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. "தரிசனம்" என்ற திரைப்படத்தில் வரும்
"மாலை நேரத்து மயக்கம்" என்ற பாடலி;ல் கவிஞர் இவ்வாறு எழுதுகின்றார்.
"இது மாலை நேரத்து மயக்கம்" "பூ மாலை போல் உடல் மணக்கும்" "இதழ் மேலே இதழ் மோதும்" "அந்த இன்பம் தேடுது எனக்கும்" என்று பெண் தனது விரகதாபத்தை வெளிப்படுத்துவது போலவும்,
"இது காலதேவனின் கலக்கம்" "இதை காதல் என்பது பழக்கம்" "ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்"
என்று ஆண் அதை மறுத்து துறவறத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இருவேறு எண்ணம் கொண்ட காதலன் காதலியின் நிலைப்பாட்டை பல்லவியிலேயே ஆணித்தரமாக சொல்ல முடியும் என்றால் அது கவிஞர் கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் இயலாது.
"பாவமன்னிப்பு" திரைப்படத்தில் நடிகர் சிவாஜி ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, சந்தர்ப்பவசத்தால் சிறுவயதிலேயே ஒரு இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு, இளைஞனானபின் பாடுவதுபோல் ஒரு காட்சி. அக்காட்சிக்கு கவிஞர் எழுதிய பாடல் இது."எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்" அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்". வளர்ப்பால் இஸ்லாமியரான நடிகர் சிவாஜியின் கதாபாத்திரம், பிறப்பால் ஒரு இந்து என்பதால் அவரை அறியாமலேயே அவர் நாவில் ஓம்" என்று ஒலிப்பதாக பாடல் முழுவதும் ஓம் ஓம் ஓம் என்றே வருவது போல் அமைத்திருப்பது கவிஞர் கண்ணதாசனுக்கே உண்டான தனிச்சிறப்பு.
சினிமா உலகில் நுழைவது மிகக்கடினம். அவ்வாறு நுழைந்தாலும் ஒரு நிலையான இடத்தைப் பிடிப்பது மிக மிகக் கடினம். இந்த அனுபவம் கவிஞர் வாலியையும் விட்டு வைக்கவில்லை. சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு பண்ணிய கவிஞர் வாலி, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா" என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை கேட்டு தனது முடிவை மாற்றி மீண்டும் முயற்ச்சித்ததாக அவரே சுவைபட குறிப்பிட்டுள்ளார்.
நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.
"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். "அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது.
கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லை.
கை, கால்கள் ஓய்ந்த பின்னே உழைப்பதில் லாபமில்லை என்று உழைப்பையும்,
பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும் பால் தரும் கருணை அது, இருக்கின்ற பிடி சோறுதனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோயில் அது என்று தாய்மையையும் போற்றினார்.
அர்த்தமுள்ள இந்து மதத்தில் பாவ புண்ணியங்களை வலியுறுத்தி தவறு செய்வோர் தண்டனை அடைவர் என எடுத்துக்காட்டுகிறார்.
திருக்குறளின் தாக்கம் கம்பனிடத்திலும், கம்பனின்
தாக்கம் கவிஞரிடத்திலும் காண முடியும். எதுகை மோனையில் கம்பனுக்கு இணையானவர் கவிஞர்.
கரையேறி மீன் விளையாடும் காவிரிநாடு உறையூரின் காவலனே வாழிய நீடு என்றும்,
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றும் எதுகை, மோனையில் எழுத்தாள்கிறார் கவிஞர்.
தான் சொந்த படம் எடுத்ததை பெரிய தவறாகவே கருதினார். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் வணிகரீதியாக வசூலைக் கொடுக்கவில்லை. கசப்பான அனுபவங்களை கற்றுத்தந்தன. கவலையில்லாத மனிதன் கவிஞரை கவலையுள்ள மனிதனாக்கின.
கால்ஷீட் வேண்டி ஒரு நடிகரின் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்ற அந்த நடிகர் வீட்டின் பின்வாசல் வழியாக சொல்லாமலேயே சென்றுவிட்டார். இதையறிந்த கவிஞர் அந்த படத்தில்,
பிறக்கும்போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான் என்ற பாடலை எழுதி அந்த நடிகரையே பாட வைத்தார்.
1962ல் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் சட்டசபையில் இடம் கிடைக்கவில்லை. அதே ஆண்டில் அன்னை படத்தில்,
புத்தியுள்ள மனிதரெல்லாம், வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற கவிஞரது பாடல் இடம் பெற்றது.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன்.
பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. ஒருமுறை,
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார்.
இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார். ”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன்.
இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
பல ஆயிரம் பாடல்கள் எழுதிய கண்ணதாசன்,
பல தத்துவ நூல்களை எழுதிய கண்ணதாசன் பேனா பிடித்து எழுத மாட்டார். சினிமாவுக்கு பாடல் எழுதும்போது நேராக எம்.எஸ்.விஸ்வநாதனின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு செல்வார். ஆர்மோனிய பெட்டி சகிதமாக விஸ்வநாதன் அமர்ந்திருப்பார். அருகில் படத்தின் இயக்குனர் அமர்ந்திருப்பார். கண்ணதாசன் நேராக சென்று ஆர்மோனிய பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொள்வார்.
இயக்குனர் காட்சிக்காக சூழலை சொல்வார். எம்.எஸ்.விஸ்வாதன் மெட்டை இசைத்து காட்டுவார். உடனே கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்வார். அதனை அருகில் இருக்கும் உதவியாளர்கள் எழுதிக் கொள்வார்கள். மெட்டுக்குள் சிக்காத சில வார்த்தைகளை மாற்றுமாறு விஸ்வநாதன் சொல்வார்,
அதை மாற்றிச் சொல்வார் கண்ணதாசன்
. அதை உதவியாளர் திருத்தி எழுதிக் கொள்வார். எல்லாம் முடிந்த பிறகு உதவியாளர் எழுதிய பாடல் வரிகளை ஒரு முறை படித்து பார்த்துவிட்டு "வரட்டுமா விசு" என்றபடியே எழுந்து போய்விடுவார். அத்தனையும் 30 நிமிடத்துக்குள் முடியும். கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை இப்படித்தான் எழுதுவார்.
'கருப்பு பணம், ரத்த திலகம், சூர்யகாந்தி, அபூர்வ ராகங்கள்' ஆகிய படங்களில் ஒரு நடிகனாகவும் தன்னை நிரூபித்தார் கண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அவரே வாயசைத்து பாடிய பாடல்கள் : எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்(கருப்பு பணம்),
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு(ரத்த திலகம்),
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது(சூர்யகாந்தி).

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...