அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்!இன்று 19/4/2023 புதன்கிழமை அமாவாசை அன்றுவணங்குவோம் ஓம் சக்தி பராசக்தி அனைவரும் வருக அம்பாளின் அருள் பெருக
அஷ்ட வராகிகள் பற்றிய விளக்கங்கள்
மனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களை எட்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டு செயல்களை மையமாகக் கொண்டே மாந்திரீகம் உருவானது;மாந்திரீகத்திற்கு அஷ்டகர்மா என்று பெயர்;இந்த அஷ்டகர்மாக்களை இயக்குவது அஷ்ட பைரவப் பெருமான் களே!
வராகியின் வடிவங்களும் 64 ஆக இருக்கின்றன;இந்த 64 வடிவங்களில் முதன்மையானவர்கள் எட்டு வராகிகளே!
அஷ்டவராகிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்;
பஞ்சமீ
அன்னை அராசாலை என்ற வராகியைப் பற்றி வராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது;நாத்திகப் பிரச்சாரம்,இந்தி எதிர்ப்பினால் தமிழுக்கும்,சமஸ்க்ருதத்திற்கும் இடையிலான 20,000 ஆண்டு மொழிபெயர்ப்பு தகர்ந்துவிட்டது;இதனால் பல அரிய நூல்கள் இன்று சமஸ்க்ருதத்திலேயே தங்கிவிட்டன;அண்டைமாநிலமான கேரளா கூட நம்மைவிட 120 ஆண்டுகள் முன்னேறிவிட்டது;ஆமாம்! ஏராளமான சமஸ்க்ருத நூல்களை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துள்ளனர்;
வராகி கல்பத்தில்,வராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமீ ஆகும்;ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமீ திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வராகி;பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமீ ஆகும்;சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவராகி தத்துவம் ஆகும்;இதனால் தான் இவளுக்கு பஞ்சமீ என்ற பெயர் உண்டானது;
பஞ்சமீயை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு;இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்;
வராகி என்ற வாராகி
சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வராகியைத்தான்!
பரமரகசியமான இந்த வழிபாட்டுமுறையால் தான் இந்த பாரத தேசத்துடன் மோதவே மற்ற நாட்டினர் பயந்தனர்;இடையில் வந்த புறசமய தாக்குதல்களால் இந்த வராகி வழிபாடு அருகிவிட்டது;இப்போது மீண்டும் அன்னை வராகியின் அருள்பார்வை நமது தேசத்தின் மீது விழுந்திருக்கிறது;
மஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள்;மோளமுகம் கொண்டவள்;இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும்;நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்;கருநிறத்திருமேனியைக் கொண்டவள்;
படைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கியை பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைப் பொடியாக்கியவள்;
ஸ்ரீவராகி சக்தி வாய்ந்தவள்;ஒரு முகம்,இருகண்கள்,நான்கு திருக்கரங்களைக் கொண்டவள்;கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்;கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்;மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள்;இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும்;வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள்;சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்;
ஸ்ரீவராகி எலும்பின் தேவதை;இவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்;
மயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும்;அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;இவ்வாறு இவளை வேண்டினால் வளம் பல தருவாள்;
பக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்ளல்களின் தலைமைக் கடவுளாகவே திகழுகிறாள்;இவளது பக்தர்கள் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள்;பொன்,பொருள் காட்டி இவர்களை ஏமாற்றிட முடியாது;ஆனால்,அன்புக்கு பணியக்கூடியவர்கள்;இவளது அடியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளங்குவர்;துன்பம் இவர்கள் இருக்கும் திசையில் கூட எட்டிப்பார்க்காது;மனநோயாளிகள் கூட இவர்கள் இருக்கும் பக்கம் வரமாட்டார்கள்;
வராகி பக்தர்களுடன் அன்புடன்(நயவஞ்சகமின்றி) பழகுபவர்களுக்கு மனத் தெளிவும்,வீட்டில் மகிழ்ச்சியும் ஏற்படும்;
ப்ரத்யட்ச வாராகி
கண்முன்னே தோன்றி அருள்புரிபவள் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் ப்ரத்யட்ச வாராகி என்று அர்த்தம்;சில இடங்களில் இந்த அன்னை அருளாட்சி புரிந்துவருகிறாள்;யாராவது உங்கள் ஊரில் இந்த அன்னை இருந்தால் தெரிவிக்கவும்;தன் பக்தர்களின் மனக்குறையை உடனே போக்கும் அருட்குணம் உடையவள்;எல்லாவிதத் தடைகளையும் தகர்த்து நல்வழி காட்டுபவள்;இவளது சன்னதியில் தேங்காயில் நெய்விட்டு தீபம் ஏற்றுவது நல்லது;பஞ்சமி திதியன்று இவளுக்கு புது ஆடைகளை அணிவித்து,புது மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த அன்னையை தினமும் வழிபட முடியும்;அப்படி வழிபடுவது போல நடிப்பவர்களுக்கு இவளின் அருள் சிறிதும் கிட்டாது;
தண்டினி
ஸ்ரீவாராகிதேவி ஒரு திருக்கரத்தில் தண்டு ஏந்தி காட்சி தந்ததால் இவளை தண்டினி என்று அழைப்பது வழக்கம்;
அஸ்வாரூட வாராகி
இவள் அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாவாள்;இவள் தனது திருக்கரங்களில் பாசம்,அங்குசம்,பிரம்பு ஆகியவைகளை ஏந்தி மிகவும் கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருப்பாள்;இவளது குதிரையின் பெயர் அபராஜிதா ஆகும்;இவளை வணங்கினால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உருவாகும்;
(ஆன்மீகத்தில் முன்னேற முதல் படியாக இருப்பது காம இச்சையே! இதைக் கடக்கவே பல பிறவிகள் எடுக்க வேண்டும்;இரண்டாவது தடையாக இருப்பது நான் என்ற அகங்காரம்;புராணங்கள்,கடவுள்களின் வரலாறு படித்தால் நெடுக அகங்காரத்தால் தான் பலர் சாபம் பெற்றிருப்பர்; அல்லது முறை தவறிய காம இச்சையால் சாபம் பெற்றிருப்பர்;நாம் தான் கர்ம உலகமாகிய பூமியில் வசிக்கிறோம் இல்லையா? இவளை வணங்கி,பிறப்பற்ற முக்தியைப் பெற்றுவிடுவோம்;)
சம்பத்கரி வாராகி
இவள் அம்பிகையின் யானைப்படையின் தலைவி! இவள் அங்குசத்தின் அதிஷ்டான தேவதை ஆவாள்;இந்த அங்குசத்தைத் தியானிப்பவர்கள் எதிரிகளை அடக்கும் வல்லமையைப் பெறுவார்கள்;
வாழ்க்கையில் மங்களமான இடத்தைப் பெற இவளை வழிபட வேண்டும்;இவளை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்;
தண்டினி வாராகி
அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் படைத்தலைவியாக இவள் விளங்குகிறாள்;இவள் ஆஷாட என்னும் ஆடி மாத நவராத்திரியில் வழிபடப்படுகிறாள்;தன் பக்தர்களின் எதிரிகளைத் தண்டித்து அடக்கும் சக்தி கொண்டவள்;எனவே தண்டினி எனப் பெயர் பெற்றவள்;இவள் எதிரிகளைத் தண்டிக்க பயன்படுத்தும் கருவியே தண்டம் ஆகும்;இவளுக்கு இன்னொரு பெயர் வார்த்தாளி!
சொப்பன வாராகி
கரிய நீல வண்ணத்திருமேனி உடையவள்;மூன்று கண்களும்,பன்றி முகமும் கொண்ட கன்னித்தாய்;சந்திரனைத் தலையில் சூடியிருப்பாள்;அழகிய குதிரை மீது அமர்ந்து பவனி வருவாள்;பிரபஞ்சம் எங்கும்!
நல்ல அழகும்,அருளும்,வெற்றியும் உடைய இந்த சிறப்பான பெண் தெய்வத்தை அளவற்ற புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வணங்கிட முடியும்;
சொப்பன வாராகி வழிபாட்டுமுறை மிகுந்த பாதுகாப்பானது;ஸ்ரீசொப்பன வாராகி நேரில் வரமாட்டாள்;நம் சொப்பனத்தில் வந்து நம் சந்தேகங்களுக்குப் பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பதில் இவளது தாய்மையை உணரலாம்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment