சிவப்பு நிற அழகன் நான்
இப்போது அதிகம் கவனிக்கப் படாத
கிழவனாகிப் போனேன்
இன்று
விஞ்ஞான வளர்ச்சியால்
தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருக்கும்
துர்பாக்கியசாலி நான்
ஓடாமல்
ஓரிடத்தில் நின்று கொண்டே
உங்களுக்காக தூது சொன்ன
தூயவன் நான் .
துன்பங்களையும் துயரங்களையும்
கண்ணீர்க் கறையோடு
பார்த்தவன் நான்
உங்கள் காதலை தேக்கி வைத்து
அனுப்பியவனும் நான்
சாலை ஓரம் எனது இருப்பிடம்
என்றாலும்
வேலை தேடுபவர்களுக்கு
வாசலாய் இருந்திருக்கிறேன்.
வேலை கிடைத்தாலும்
எனக்குத்தான் முதலில் தெரியும்
வேலை இழந்தாலும்
எனக்குத் தான் தெரியும்
கண்டுகொள்ளாமல்
போகிறீர்களே!கனவான்களே!
உங்கள் மகிழ்ச்சியையும்
வாங்கி இருக்கிறேன்
கோபத்தையும்
தாங்கி இருக்கிறேன்
உங்கள் வீட்டு திருமணம்தான்
ஆனால்
முதல் அழைப்பிதழ் எனக்குத்தான்
எத்தனையோ பேருக்கு
மகிழ்ச்சியை
மனமார பகிர்ந்தளித்திருக்கிறேன்
பாசத்தை பல்லாண்டுகளாய்
சுமந்திருக்கிறேன்
நெருப்பு வார்த்தைகளயும் அறிவேன்
நெகிழ்ச்சி மொழிகளையும் அறிவேன்
ஐயா! மஞ்சள்பை கராரே
உங்களுக்கும் நினைவில்லையா?
நான் யாரென்று
இளைஞர்கள்தான் என்னை
இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்
நீங்களுமா?
இனிவரும்
காலங்களில்
அருங்காட்சியகத்தில்தான்
அழகாய் அமர்ந்திருப்பேன்.
உங்கள் முன்
ஆச்சர்யக் குறியாய் நிற்கும்
என்னை தெரிகிறதா?
வாயும் வயிறும் இருந்தும்
வாழ்விழக்கப் போகும் என்னை
கவனிக்கவா போகிறீர்கள்
பரவாயில்லை!
No comments:
Post a Comment