சென்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த, இந்த கூட்டத்தில், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்ட, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். காலை, 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல், 2:30 மணி வரை நடந்தது.
இதில், ஒவ்வொரு நிர்வாகியும், கூட்டணி குறித்து பேச அனுமதி வழங்கப்பட்டது. பலரும், 'பா.ம.க., இருக்கும் கூட்டணியில் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும்' என, கூறியுள்ளனர். அதன்பின், மாவட்ட செயலாளர்களை தன் அறைக்கு அழைத்து, விஜயகாந்த் கருத்து கேட்டு உள்ளார். தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல், பிரட் அல்வா, முட்டையுடன், மதிய உணவு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்: பா.ம.க.,வை எதிர்த்தே, தே.மு.தி.க.,வை, விஜயகாந்த் துவங்கியதாக, சில மாவட்ட செயலாளர் கள் சுட்டிக்காட்டினர். 2014 லோக்சபா தேர்தலில் செய்த தவறை, மீண்டும் செய்யக் கூடாது. பா.ம.க, இருக்கும் கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது, சில நிமிடங்கள் பேசிய விஜயகாந்த், 'நான் நன்றாக இருக்கிறேன். நாட்டின் நலன், மக்கள் நலன் கருதியும், கட்சியினரின் பொருளாதார நலன் கருதியும், கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவு, நாளைக்கு வரும்' என்றார். அவரை தொடர்ந்து பேசிய பிரேமலதா, 'கூட்டணி முடிவு, சுயநலமாக எடுக்கப்பட்டது அல்ல; நமக்கு, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஒன்று தான். கட்சியினரின் நலன் கருதியே, கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இறுதியாக, சுதீஷ் பேசுகையில், 'அனைத்து கட்சி தலைவர்களையும், கூட்டணி பேச, வீட்டுக்கு வரவழைக்கும் சக்தி, விஜயகாந்திற்கு மட்டுமே உள்ளது. பா.ம.க.,வினர், நம்மிடம் நட்பாக இருக்க விரும்புகின்றனர். அவர்களை அரவணைத்து செல்ல வேண்டியது, காலத்தின் கட்டாயம். 'மோடி தான் அடுத்த பிரதமர். அதை உறுதிப்படுத்தும் வகையில், வெற்றி கூட்டணியில், தே.மு.தி.க., இடம்பெறப் போகிறது.
கூட்டணி அறிவிப்பு, நாளை நல்லபடி வெளியாகும். வீட்டிற்கே வந்த விருந்தாளிகள், நம் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வர்' என்றார். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில், இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், விஜயகாந்திற்கு பதிலாக, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக, மாவட்ட செயலர்கள் அனைவரும், சென்னையில் தங்கியிருக்கும் படியும், தொண்டர்களை அழைத்து வர தயார் நிலையில் இருக்கும்படியும், தே.மு.தி.க., தலைமை, நேற்று உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை, 10:00 மணிக்குள், தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடும்படி, தே.மு.தி.க.,வுக்கு, அ.தி.மு.க., தலைமை கெடு விதித்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர், ஜெயகுமார் ஆகியோர், நேற்று முன்தினம், சென்னையில், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, பேச்சு நடத்தினர். பின், 'அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., நிச்சயம் இடம்பெறும்' என, பன்னீர்செல்வம் உறுதியளித்து சென்றார். இந்நிலையில், அ.தி.மு.க., தரப்பில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷிடம், நேற்று மொபைல் போனில் பேசப்பட்டு உள்ளது. 'அ.தி.மு.க., வழங்கும் தொகுதிகளுக்கு உடன்பட்டால், மத்திய அமைச்சரவையில், தே.மு.தி.க.,விற்கு இடம் வழங்கப்படும். மத்திய அரசு துறைகளில், வாரிய தலைவர் பதவியும் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக, சுதீஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 'எதுவாக இருந்தாலும், இன்று காலை, 10:00 மணிக்குள், முடிவை சொல்ல வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமை கெடு விதித்துள்ளது.
06-03-2019
No comments:
Post a Comment