Monday, December 2, 2019

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு.

தமிழகத்தில், மூன்று ஆண்டு இழுபறிக்கு பின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கால், தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகள் உள்ளன.





ஊரக உள்ளாட்சிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் உள்ளன. இவ்வாறு, 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகளுக்கு, 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக, தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தது. இடஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., தொடர்ந்த வழக்கால், கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, 2011 மக்கள் தொகை அடிப்படையில், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு, வார்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்தில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தலை நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது. அதேநேரத்தில், இடஒதுக்கீடு நடைமுறைகளை முறையாக பின்பற்றிய பின்னரே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என, தி.மு.க., மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதேபோல, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா என்ற, கேள்வி எழுந்தது.அதேநேரத்தில், நீதிமன்ற அவமதிப்பில் இருந்து தப்பிக்க, தேர்தலை அறிவித்து விடலாம் என்ற முடிவிற்கு, ஆணையம் வந்தது. அதன்படி, நேற்று காலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டனர். ஊரக உள்ளாட்சிகளில் உள்ள, 1.18 லட்சம் பதவிகளுக்கு மட்டும், இரண்டு கட்டமாக, தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட தேர்தல், வரும், 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல், 30ம் தேதியும் நடக்க உள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல், 6ம் தேதி துவங்கவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகி உள்ளதால், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.


உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:


மனு தாக்கல் துவக்கம் - டிச., 6

மனு தாக்கல் இறுதி நாள் - டிச., 13

மனுக்கள் பரிசீலனை - டிச., 16

மனுக்கள் வாபஸ் - டிச., 18

முதற்கட்ட ஓட்டுப்பதிவு - டிச., 27

இரண்டாம் கட்டம் - டிச., 30

ஓட்டு எண்ணிக்கை - ஜனவரி, 2.

இரண்டு கட்ட தேர்தல் குளறுபடி


* முதற்கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 3,232 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6,251 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து, 638 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும், 27ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* இரண்டாம் கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 3,239 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6,273 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து, 686 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும், 30ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, முதற்கட்டமாக, எத்தனை இடங்களிலும், இரண்டாம் கட்டமாக, எத்தனை இடங்களிலும் தேர்தல் நடக்கிறது என்ற, விபரம் வெளியிடப்படவில்லை. இதனால், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது

* எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்ற, பட்டியலும் வெளியிடப்படவில்லை. 'மனு தாக்கல் துவங்க, 6ம் தேதி வரை, அவகாசம் உள்ளதால், அதற்குள் இந்த விவரங்கள் வெளியிடப்படும்' என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

பார்வையாளர்கள் நியமனம்!


மாவட்ட கவுன்சிலரை தேர்வு செய்ய, மஞ்சள் நிறம்; ஒன்றிய கவுன்சிலருக்கு, பச்சை நிறம்; ஊராட்சி தலைவருக்கு, இளஞ்சிவப்பு; ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, வெள்ளை நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதற்கட்ட தேர்தலில், 31 ஆயிரத்து, 698 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இரண்டாம் கட்டமாக, 32 ஆயிரத்து, 92 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

முதற்கட்ட தேர்தலில், 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில், 1.67 கோடி வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து, உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில், 114 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மற்ற இடங்களில், 2.33 லட்சம் ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளர்களாக, தற்போது பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 870 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; 16 ஆயிரத்து, 840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மட்டுமின்றி, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 8 தேர்தல் அலுவலர்கள் என, 5.18 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம்


உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பணியில், அரசு பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசு பள்ளிகளுக்கு, டிச., 24 முதல், ஜன., 2 வரை, அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.விடுமுறை நாட்களில், வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...