Saturday, December 21, 2019

'பெரியப்பா' என அழைப்பதில் மட்டும் ஸ்டாலின் பாசம் :வருத்தத்தில் அன்பழகன் குடும்பம்.

'தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், என் பெரியப்பா' என கூறும் ஸ்டாலின், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கட்சியில் உரிய இடம் வழங்க முன்வராதது, அன்பழகன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈ.வெ.ரா., காலம் தொட்டு, நேரடி அரசியலில் இருப்பவர், அன்பழகன். தி.மு.க., துவக்கப்பட்ட நாள் முதல், கட்சிக்காக உழைத்து வருபவர். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். கருணாநிதி, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், அன்பழகனுடன் கலந்தாலோசிப்பது வழக்கம்.

அதிருப்தி


ஐந்து ஆண்டுகளுக்கு முன், பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து, தாம் விலக விரும்புவதாகவும், அந்த பொறுப்புக்கு, ஸ்டாலினை நியமிக்கலாம் என்றும், கருணநிதியிடமே அன்பழகன் தெரிவித்துஉள்ளார். அதை ஏற்க மறுத்த கருணாநிதி, 'என் வாழ்நாள் முழுவதும், என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்; எனக்கு பிறகும், கட்சி பொறுப்பில் தொடர வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.
 'பெரியப்பா', என, அழைப்பதில்,மட்டும்,ஸ்டாலின்,பாசம் வருத்தத்தில்,அன்பழகன்,குடும்பம்

கருணாநிதி மறைவுக்கு பின், அன்பழகன் உடல் நலிவடைந்தது. எனவே, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது, 98வது பிறந்த நாள், சமீபத்தில் கொண்டாடப்பட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது வீட்டிற்கு சென்று, 'அவர் ,100 ஆண்டு கடந்து, சீரோடு வாழ வேண்டும்' என வாழ்த்தினார்.தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'அன்பழகன், பொதுச்செயலர் மட்டும் அல்ல; என் பெரியப்பா' என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

ஆனால், அன்பழகன் குடும்பத்திற்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்க முன்வரவில்லை. இது, அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அன்பழகன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இதுவரை கட்சியில், எந்த பொறுப்பும் வழங்க வில்லை. லோக்சபா, சட்டசபை தேர்தலிலும், வாய்ப்பு வழங்கவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியலுக்கு வர வேண்டாம் என்ற பெருந்தன்மை, அன்பழகனுக்கு இருந்தது. ஆனால், அவரது மகன் அன்புச்செல்வன் மற்றும் பேரன்களுக்கு, அரசியல் ஈடுபாடு உள்ளது. அதற்கான முயற்சியில், அவர்கள் ஈடுபட்டபோதும், கட்சி உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை.

அன்பழகனின் மகன் வழி பேரன் வெற்றி அழகன்; 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுத்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.தி.மு.க.,வில், ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, டி.ஆர்.பாலு என்று, பல்வேறு பிரபலங்களின் வாரிசுகள், எம்.பி.க்களாக, எம்.எல்.ஏ.க்களாக இருக்கின்றனர்; சிலர் கட்சி பொறுப்பிலும்உள்ளனர்.


வாய்ப்பு வழங்கவில்லை


ஆனால், கட்சியின் மூத்த தலைவரான அன்பழகன், தி.மு.க, பொருளாளராகவும், அண்ணாதுரை அமைச்சரவையில் இடம்பெற்றவருமான சாதிக் பாட்ஷா ஆகியோர் வாரிசுகளை, தி.மு.க., தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. சாதிக் பாட்ஷாவின் மகன் முஸ்தாக் பாட்ஷா, கடந்த தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட, விருப்ப மனு செய்திருந்தார்; அவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.

கட்சிக்காக கடுமையாக உழைத்த, எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, குறிப்பாக தவறான வழியில் சொத்து சேர்க்காத, மூத்த தலைவர்களின் வாரிசுகளை, கட்சி தலைமை புறக்கணிப்பது, சரியான அணுகுமுறை இல்லை.

கருணாநிதி குடும்பத்தில், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, இப்போது உதயநிதி என பலரும், கட்சி பதவிகளிலும், எம்.பி., - எம்.எல்.ஏ., பதவிகளிலும் இருந்து வருகின்றனர். ஆனால், கருணாநிதிக்கு இணையாக தோளோடு தோள் நின்று, கட்சியை வளர்த்த அன்பழகன் குடும்பத்தை புறக்கணிப்பது, நியாயமா என்ற, கேள்வி எழுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...