பிழைத்திருத்தல் என்பது வேறு: வாழ்ந்திருத்தல் என்பது வேறு. பிழைத்துக் கிடப்பதற்கு பெரிய சிந்தனையோ விஷய ஞானமோ தேவையில்லை. ஆனால் வாழ்ந்திருப்பதற்கு நான்கு விஷயங்கள் தேவை.
வாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும். அதனால்தான் சிரத்தையுள்ளவனே ஆன்மாவைப் பற்றிய அறிவை பெறுகிறான் என்கிறது கீதை. ஆன்மா அறிவை மட்டுமல்ல; நலமிகு வாழ்வை குறித்த அறிவையும் அவன்தான் பெறுகிறான். மனமும் உடலும் சீரான நிலையில் இருந்தால் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.
தூங்க வேண்டிய நேரத்தில் சிலர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருப்பார்கள். செல்போனில் யாரிடமாவது கதைத்துக் கொண்டிருப்பார்கள்; அல்லது வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை பற்றிய உணர்வே இல்லாமல் மூழ்கி கிடப்பார்கள்.
எவ்வித நேர ஒழுங்குமின்றி எப்போதும் வேலை வேலை என்று தூக்கத்தை உதறித் தள்ளுபவர்கள் வெகு சீக்கிரத்திலேயே பல்வேறு உபாதைகளை வாங்கிக் கொள்கிறார்கள். தூக்கமின்மை உடற்சோர்வையும் மனநோயையும் ஏற்படுத்தும்; புத்தி மயக்கம், பார்வைக் கோளாறு, பேச்சில் குழப்பம், பசியின்மை, எதிலும் தெளிவின்மை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தூக்கமின்மையே மூல காரணம்.
ஒவ்வொருமுறை தூங்கி விழிக்கின்ற போதும் நாம் புதிதாக பிறக்கின்றோம். எனவே சந்தடியற்ற சஞ்சலமற்ற அமைதியான தூக்கம் மிக அவசியம். இன்றைய விறுவிறு வாழ்க்கை கட்டத்தில் பல நல்ல விஷயங்களை நாம் தவறவிட்டுவிடுகின்றோம். எப்போதும் பரபரப்புடனும் மன உளைச்சலுடனும் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்திரமயமான நமது நவீன வாழ்க்கை முறையும் நோய்களுக்குத்தான் வழிவகுக்கின்றன.
எனவே அவற்றை வருமுன் தடுத்தாக வேண்டுமே. அதற்குத்தான் உடற்பயிற்சி. பணச்செலவே இல்லாமல் எல்லாரும் எளிதாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி சில நிமிட நடைப்பயிற்சி. காலையிலோ மாலையிலோ நாற்பது நிமிடங்கள் போதும். அங்கேயும் நாலுபேரைச் சேர்த்துக் கொண்டு பிரச்சினைகளை பேசிப் பேசி நடக்காதீர்கள். அதில் பயனில்லை. சீரான நடைப்பயிற்சியே நீரோட்டத்தை வேகப்படுத்தும். அது நம் உடல் முழுவதும் நடைபெறும்போது நமது காது மடல்களுக்கும் காலின் சுண்டு விரல்களுக்கும் ரத்தம் முழுமையாகச் சென்று திரும்பும். அப்படியானால்தான் நம் உடலின் செல்கள் அனைத்தும் தினம்தினம் புத்துணர்வைப் பெறமுடியும். அப்படி அவை புத்துணர்வைப் பெறும்போதுதான் உள்ளுறுப்புகள் தமக்குரிய கடமைகளை முழு ஆற்றலுடன் செய்ய முடியும்.
ஆரோக்கியமோ சுகக்கேடோ நம் வாழ்க்கை முறையில்தான் உள்ளது. சாப்பிடுவதில்கூட ஒழுங்குமுறை இருக்கிறது. உணவை பயபக்தியுடன் உண்ண வேண்டும். ஏனெனில், உணவு உண்ணுதல் என்பது ஒரு வகை வழிபாடு. சாப்பிட்ட உடனே குளிக்கச் செல்லாதீர்கள். வயிறு நிரம்பி இருக்கும்போது குளித்தால், செரிமான மண்டலம் பலவீனமாகும். உணவு ஜீரணமாவதில் பிரச்சினை ஏற்படும். எனவே குளித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்.
படுத்துகொண்டோ நின்றுக்கொண்டோ வீட்டுக்கும் தெருவுக்கும் இடைப்பட்ட வாசல்வெளியில் இருந்துகொண்டோ, வீட்டின் கதவைத் திறந்து வைத்து வாசலுக்கு எதிராக அமர்ந்து கொண்டோ சாப்பிடக்கூடாது என்றெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாழை இலையில் உணவு உட்கொண்டால் உடல்நலம் பெருகும்; மந்தம், வலிமைக் குறைவு இழைப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்; பித்தமும் தணியும் என்கி றார்கள்.
எனவே கூடுமான வரையில் வாழை இலைகளை நாம் பயன் படுத்திக்கொண்டால் நல்ல பலன்களை காண முடியும். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சி இல்லை என்றால் அனைத்தும் வீண். எனவே எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.
உடலின் உற்சாகம் மனதைச் சார்ந்தது. கண்ணுக்குத் தெரிகின்ற ஒன்றிற்கும், கண்ணுக்குப் புலப்படாத மற்றொன்றிற்கும் அப்படியொரு பிணைப்பு.
நம் சராசரி உயரம் மூன்றரை முழம்தான். ஆனால் மனம்? அதன் உயரத்திற்கு வரையறை இல்லை. அது அற்புதமானது; ஆகாயத்தையும் விஞ்சியது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மூளை விறுவிறுப்பாக செயல்படுகிறது. எந்த வேலையையும் சிரமமின்றி முடிப்பதற்கு வேகம் பிறக்கிறது. உள்ளத்தின் மகிழ்ச்சி வாழ்வை சுலபமாக்குகிறது;
அந்த மகிழ்ச்சி என்னும் பெருஞ்செல்வத்தை நாம் எங்கிருந்து பெறமுடியும்? நமக்குள்ளிருந்துத்தான்! கல்லுக்குள்தானே சிலை இருக்கிறது. தேவையற்றவைகளை வெட்டி எடுத்துவிட்டால் சிலை வந்துவிடும். அதேபோல், மகிழ்ச்சிக்குத் தடையாய் இருப்பவைகளை மனதிலிருந்து விலக்கிவிட்டால் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றுவிடும்.
நம்பிக்கை, நிதானம், நல்லெண்ணம், நல்லுறவு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனம்விட்டுப் பேச வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட வேண்டும். அப்படியெனில், மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். எனவே நலமான வாழ்வை விரும்புவோர், நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நிம்மதியான தூக்கம், சீரான நடைப்பயிற்சி, ஒழுங்கான உணவுமுறை, எப்போதும் மகிழ்ச்சி இவற்றை பழக்கப்படுத்திக் கொண்டால் நலமிகு வாழ்க்கை நமதாகும்.
No comments:
Post a Comment