Saturday, February 15, 2020

51 ராஜ்யசபா இடங்களுக்கு விரைவில் தேர்தல்! பாஜக, காங்., கிற்கு வெற்றி வாய்ப்பு.

ராஜ்யசபாவில், பா.ஜ., - காங்., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 51 எம்.பி.,க்களின் பதவிக் காலம் ஏப்ரலில் முடிவடையவுள்ளதால், இந்த இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ., - காங்., கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்யசபாவில், மொத்தம், 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 51 பேரின் பதவிக் காலம், வரும் ஏப்ரலுடன் முடிவுக்கு வருகிறது.


பாதிப்பு

பதவிக் காலம் முடிவடையவுள்ள, எம்.பி.,க்களில், 18 பேர், பா.ஜ.,வையும், 11 பேர் காங்கிரசையும் சேர்ந்தவர்கள். மாநிலங்களைப் பொறுத்தவரை, மஹாராஷ்டிராவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு பேர், தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு பேரின் பதவிக் காலங்கள் முடிவடைகின்றன. பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, தலா, ஐந்து பேர், ஆந்திரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த, தலா, நான்கு பேர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்ளைச் சேர்ந்த, தலா, மூன்று பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, தலா, இரண்டு பேர், அசாம், மணிப்பூர், ஹரியானா, ஹிமாச்சல் மாநிலங்களைச் சேர்ந்த தலா, ஒருவரது பதவிக் காலங்கள், ஏப்ரலுடன் முடிவடையவுள்ளன.

தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடையும், எம்.பி.,க்களில், தி.மு.க.,வின் சிவா, அ.தி.மு.க.,வின் விஜிலா சத்யானந்த் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், ஏப்ரலில் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலால், அந்த கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பா.ஜ.,வுக்கு தற்போது, 82 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில், 18 எம்.பி.,க்கள் ஓய்வு பெறும் நிலையில், ஏப்ரலில் நடக்கும் தேர்தலின் மூலம், அந்த கட்சிக்கு புதிதாக, 14 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

காங்கிரசுக்கு தற்போது, 46 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில், 11 பேரின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிதாக, 10 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள, பிஜு ஜனதா தளம், மூன்று இடங்களிலும், ஆந்திர மாநில ஆளும் கட்சியான, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், நான்கு இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


முற்றுகை


மேற்கு வங்கத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட, ஐந்து எம்.பி.,க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த நான்கு பேர், புதிதாக ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்பு நிலவுகிறது. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு இடங்களில், ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., எதிர்க்கட்சியான, தி.மு.க., ஆகியவை, தலா, மூன்று இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பா.ஜ., - காங்., கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, மேலிட தலைவர்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...