தமிழகத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில், சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,யுடன் முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், போராட்டங்களை கண்காணிக்க, கூடுதல் டி.ஜி.பி.,க்கள் உள்ளிட்ட, 12 பேர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை துாண்டி விடுவோரை கண்டறிந்து, அவர்களை சிறையில் தள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளி இரவு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைக்கண்டித்து சனிக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த பரபரப்பான சூழலில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லைக்கு மகேஷ்குமார் அகர்வால் மற்றும் முருகன் தேனிக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், திண்டுக்கல்லுக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 6 அதிகாரிகளை ஒருங்கிணைத்து, போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார் என டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டி.ஜி.பி. திரிபாதியும், கமிஷனர் விஸ்வநாதனும் அவரது இல்லத்துக்கு சென்று, போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக, தமிழகத்தில் ஆங்காங்கே, அமைதி வழியில் போராட்டம் நடந்து வந்தது. சில தினங்களாக இந்த போராட்டம், போலீசாருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் வகையில் தீவிரமாகி உள்ளது.
சீர்குலைக்க முயற்சி
இதன் பின்னணியில், சில அரசியல் கட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்கட்சியினர், சிறுபான்மையினரை துாண்டிவிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்து வருவதாக, அரசுக்கு உளவு போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில், இம்மாதம், 13ம் தேதியில் இருந்து, 28ம் தேதி வரை, போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி போன்றவற்றில் ஈடுபட, மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
போராட்டங்களில் ஈடுபட திட்டமிடுவோர், ஐந்து நாட்களுக்கு முன், அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. கல் வீசி தாக்குதல் எனினும், தடையை மீறி, இம்மாதம், 14ம் தேதி, சென்னை, வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதியம், 2:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை, 7:00 மணி வரை நீடித்தது. அங்கு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்ய முயன்ற போது, மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில், போராட்டக்காரர்கள் மற்றும் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் ஒருவர், பெண் போலீசார் என, ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்தனர். அவர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில், மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பதற்றமான சூழல்
அதேபோல, குன்றத்துார் பெரிய மசூதி அருகிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தை, மாநிலம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியில், சில முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வருவதாக, போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், தேனி மாவட்டத்தில், கம்பம், உத்தமபாளையம்; மதுரை நெல்பேட்டை; தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், 31 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிகளில் பதற்றமான சூழல் உள்ளதால், போராட்டங்களை முறியடிக்க, அப்பகுதிகளில், உளவு மற்றும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஆலோசனை
இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனையில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, பொதுப்பணி துறை செயலர் செந்தில்குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வர் நடத்திய இந்த ஆலோசனைக்கு பின், அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், போராட்டங்களை துாண்டிவிடும், அரசியல் கட்சியினர், அமைப்பினர், தனிநபர்கள் யார் என, கண்காணிக்கவும், அவர்களை பிடித்து, சிறையில் தள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகளாக, ஆறு பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.
யார், யார்?
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:முஸ்லிம்களை, சில அரசியல் கட்சியினர் பகடைக்காயாக பயன்படுத்த முயற்சி செய்து வருவதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, குடியுரிமை திருத்தம் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மற்றும் துாண்டி விடுவோரை கண்காணிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரம் மற்றும் மதுரை சரகம் முழுவதையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் கண்காணிப்பார். திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி சரகத்தில், செயலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., முருகன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பழநியில், சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ஸ்டாலின்; தேனி மாவட்டம், கம்பம், போடி பகுதிகளில், எட்டாவது பட்டாலியன் கமாண்டன்ட் பாஸ்கரன்; துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதிகளில், ஐந்தாவது பட்டாலியன், கமாண்டன்ட் மகேந்திரன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மற்ற இடங்களில், ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விடுப்பு ரத்து
இதற்கிடையில், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு பணியில், தொய்வு ஏற்படாமல் இருக்க,விடுமுறையில் சென்ற போலீசாரின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல், பணியில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் முடியும் வரை, அனைத்து அதிகாரிகளும், போலீசாரும், மருத்துவம் உட்பட, அனைத்து விடுப்புகளும் எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
'ஜமாத்'தார்கள்அமைச்சருடன் பேச்சு
சென்னை, வண்ணாரப்பேட்டையில், நேற்று மூன்றாவது நாளாக, முஸ்லிம்களின் போராட்டம் தொடர்ந்தது. வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, ஜமாத் அமைப்பினர், நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து, பேச்சு நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின் ஜெயகுமார் அளித்த பேட்டி:
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய, ஆறு ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும் என, ஜமாத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.மேலும், முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை தமிழகத்தில் ஏற்படாது. இது, அரசின் கொள்கை முடிவு. முஸ்லிம்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர். இது குறித்து, முதல்வர் தான் முடிவெடுப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
'தி.மு.க., தான்காரணம்'
பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நேற்று அளித்த பேட்டி:வண்ணாரப்பேட்டையில் நடந்த கலவரத்தை அடுத்து, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற, சாமர்த்தியமாக, தமிழக அரசு, 12 சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அதற்காக,தமிழக அரசை பாராட்டுகிறேன்.கலவரத்தின் பின்புலத்தில் தி.மு.க., இருக்கிறது. மக்களிடம், நடக்காத விஷயத்தை நடந்ததாக, தி.மு.க.,வினர் கூறியுள்ளனர். போராட்டத்தின் போது,கலவரத்தை துாண்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'மாற்று கருத்து சொல்ல உரிமை உண்டு'
சென்னை விமான நிலையத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:சென்னை வண்ணாரப்பேட்டையில், அமைதியாக போராட்டம் நடத்தியவர்களை, இரவு நேரத்தில், போலீசார் அடித்து துன்புறுத்தியதால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது. அரசு, சட்டத்தை சரிவர பராமரிக்காமல், போராட்டத்தை ஒடுக்க பல சக்திகளை பயன்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில், ஒரு கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல, ஒருவருக்கு உரிமை உண்டு. போலீசாரின் நடுநிலையான விசாரணையோ, நீதிமன்ற விசாரணையோ இருந்தால் உண்மை தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment