Friday, July 10, 2020

சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்ச பிரம்ம தலங்கள்.

சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்ச பிரம்ம தலங்கள்
சுருட்டப்பள்ளி


















அகத்திய முனிவரிடம் சீடனாக இருந்தவர், உரோமச மகரிஷி. இவர் அரியத்துறை என்ற இடத்தில் யாகம் செய்வதற்காக பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் இருந்தார். அவருக்கு காட்சி கொடுத்த பிரம்மன், உரோமச மகரிஷி யாகம் செய்வதற்காக ஆரணி மரங்களை உரசி அதில் இருந்து வெளிப்பட்ட தீயை யாக குண்டத்தில் போட்டு எரியச் செய்தார். ஆரணி மரங்கள் உரசியபோது ஏற்பட்ட பெரும் சத்தத்தில் நிலத்தில் பெருவெடிப்பு ஏற்பட்டு உள்ளிருந்து நீர் வெளிப்பட்டு நதியாக ஓடியது. அதுவே ‘ஆரணி நதி’ என்றானது.

மேலும் அந்த ஆரணி ஆற்றங்கரையில் சிவபெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 5 தலங்களும் உருவாகின. இவை ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்று பெயர் பெற்றன. சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த 5 ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..

திருக்காரிக்கரை

சென்னையில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருட்டப்பள்ளி என்ற இடத்தைத் தாண்டியதும் திருக்காரிக்கரை உள்ளது. இந்த ஊர் தற்போது ராமகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக வாலீஸ்வரர் அருள்கிறார். அம்பாளின் திருநாமம் மரகதாம்பாள் என்பதாகும். பஞ்ச பிரம்ம தாங்களில், சிவபெருமானின் ஈசான முகத்திற்குரிய தலமாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி, வடக்கு பக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்திக்கும், சிவலிங்கத்திற்கும் நடுவே ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமான அமைப்பாகும். நந்தியின் வாய் பகுதியில் இருந்து நீர் சுரந்தபடியே இருக்கிறது. எந்த காலத்திலும் வந்துகொண்டே இருக்கும் இந்த நீர், மலையில் உச்சியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் காலபைரவரும் பிரதான மூர்த்தியாக விளங்குகிறார்.

வாமதேவபுரம்

சென்னையில் இருந்து வடக்கு பகுதியில் 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆரணி பேரூராட்சி. இங்குள்ள பெரியபாளையம் எஸ்.பி. கோவில் தெருவில், பிச்சாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் வாமதேவ முகத்திற்குரியது இந்த ஆலயம். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவர், சுயம்பு மூர்த்தியாவார். இறைவனின் திருநாமம் பிச்சாலேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் பெயர், மரகதவல்லி. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் விசேஷமானது. இந்த சிவலிங்கத்தில் பாணம் எனப்படும் மேற்பகுதியில், அம்பாளின் பாதம் பதிந்திருக்கிறதாம்.

சுருட்டப்பள்ளி

சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. இந்த ஆலயத்தில் இறைவனின் திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர். அம்பாளின் திருநாமம் மரகதவல்லி. திருப்பாற்கடலை கடைந்தபோது, கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷம்தான் வெளிப்பட்டது. உலகை அழிக்கும் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அந்த விஷம் அவரது உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அம்பாள் பிடித்தார். இதனால் விஷம் ஈசனின் கழுத்திலேயே நின்றது. விஷத்தின் வீரியத்தால் அம்பாளின் மடியில் மயங்கி விழுந்தார் ஈசன். இப்படி அம்பாளின் மடி மீது தலை வைத்தபடி சயன கோலத்தில் ஈசன் இருக்கும் சிறப்புமிக்க ஆலயம் இதுவாகும். பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் ஈசன், சிவலிங்க வடிவிலேயே காட்சி தருவார். ஆனால் இங்கு மனித உருவத்துடன் அம்பாளின் மடியில் தலை சாய்த்தபடி சயன கோலத்தில் காட்சி தருவது அபூர்வமானது. இந்த மூலவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நைமிசான்யம் (கருங்காலி)

சென்னை பொன்னேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பழவேற்காடு. இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கருங்காலி திருத்தலம் அமைந்துள்ளது. இது பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் அகோர முகத்திற்குரிய தலமாகும். 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயம், ஆரணி நதி, கடலில் கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்த்த அமைப்பின் காரணமாக, இந்த ஆலயம் காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு நிகரானதாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இத்தல இறைவனின் திருநாமம் சிந்தாமணீஸ்வரர், அம்பாளின் திருநாமம் சிவகாமவல்லி என்பதாகும். இத்தல கால பைரவர், திருமண பாக்கியம் அருள்வதால், பைரவத்தலமாகவும் இது விளங்குகிறது.

அரியத்துறை

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் கவரப்பேட்டை என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அரியத்துறை அமைந்துள்ளது. பஞ்ச பிரம்ம தலங்களில், சிவபெருமானின் சத்யோஜாதம் முகத்திற்குரிய தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்கு பார்த்த நிலையில் காணப்படுகிறது. எனவே இது பரிகாரத்தலமாக விளங்குகிறது. அதே நேரம் அம்பாளின் சன்னிதியும் தெற்கு நோக்கி உள்ளது. எனவே திருமண பாக்கியம் அருளும் ஆலயமாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலய இறைவன் வரமூர்த்தீஸ்வரர் என்றும், அம்பாள் மரகதவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. இந்த லிங்கம் சதுர ஆவுடையாரைக் கொண்டது. இந்த ஆலயத்தில் சுயம்பு காலபைரவரை தரிசனம் செய்யலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...