'பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன' என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளையராஜா சார்பில், நேற்று அளிக்கப்பட்ட புகார்:சென்னை, சாலிகிராமத்தில், திரைப்பட தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத்திற்கு சொந்தமான, 'பிரசாத் ஸ்டுடியோ' என்ற, கட்டடம் உள்ளது. இதில், ஒரு பகுதியை, எனக்கு எல்.வி.பிரசாத், ரெகார்டிங் தியேட்டர் அமைத்து கொள்ள ஒதுக்கி தந்தார்.அதில், பல கோடி ரூபாய் செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற, இசைக் குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.இந்த இடத்தில் இருந்து தான், 1977ல் இருந்து, தமிழ், தெலுங்கு என, பல்வேறு மொழி படங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.
இந்நிலையில், 2019 செப்டம்பரில், எல்.வி.பிரசாத்தின் வாரிசான, ரமேஷ் பிரசாத் என்பவரின் மகன் சாய் பிரசாத், அந்த இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற, பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.சட்ட விரோதமாக மின்சாரம், தண்ணீரை துண்டித்தார். தற்போது, ஊரடங்கு காரணமாக, என், 'ரெக்கார்டிங் தியேட்டர்' பூட்டப்பட்டு உள்ளது.சில தினங்களுக்கு முன், சாய் பிரசாத் துாண்டுதலில், மர்ம நபர்கள், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள, இசைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை, சேதப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.
அத்துடன், விலை மதிப்பற்ற, என் இசைக் குறிப்புகள் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment