Wednesday, December 23, 2020

சக தொழிலாளர்களுக்காக திரைப்பட தயாரிப்பாளரை கடிந்து கொண்ட எம்.ஜி.ஆர்.,

 எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளியான, விக்ரமாதித்தன் படத்தின் சண்டைக் காட்சி ஒன்று, வாஹினி ஸ்டூடியோவில் மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டன்ட் குழுவினருக்கு, யூனியன் அமைக்கப்படாத சமயம். ஒப்பந்த அடிப்படையில், நாங்களே நேரடியாக தயாரிப்பாளர் ஊதிய தொகையை முடிவு செய்வோம். அதன்படியே, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினோம். படத்தின் சண்டைக் காட்சி மூன்று நாட்கள் சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.


அதன் பின் ஒரு வாரம் கழித்து நானும், படத்தில் நடித்த மற்ற ஸ்டன்ட் கலைஞர்களும் படத்தில் நடித்ததற்கான ஊதியத்தை பெற, சென்னை தேனாம்பேட்டை தற்போதைய டி.எம்.எஸ்., வளாகத்திற்கு சற்று தள்ளி அமைந்திருந்த, தயாரிப்பாளரின் இல்லத்திற்கு சென்றிருந்தோம். தயாரிப்பாளரிடம் ஊதியம் கேட்டோம்.உடனே கோபம் கொண்ட அவர், 'அடுத்த மாதம் வந்து பாருங்கள்' என்று வெறுப்புடன் கூறினார். ஸ்டன்ட் சோமுவிடம் விபரத்தை கூறியபோது, அவரோ, 'எனக்கும், 'அட்வான்ஸ்' தொகை கொடுத்ததோடு சரி... முழு தொகையும் வரவில்லை' என, தன் நிலையை கூறினார்.

பின்னர் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான, என்.எஸ்.ராமதாசிடம் சொன்னபோது, தன்னால் இவ்விஷயத்தில் தலையிட முடியாது என்று அவரும் ஒதுங்கினார்.எம்.ஜி.ஆரிடம் செல்லாததற்கு காரணம், எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி மறைந்து, இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. துக்கத்தில் இருந்த அவரிடம், எப்படி சொல்வது என்ற தயக்கம்.விபரத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., மிகவும் கோபமுற்றார்.

உடனடியாக தொலைபேசியில் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு, 'ஏன் இன்னும் தொகையை கொடுக்காமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்க, 'கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லையே... பின்னர் கொடுக்கிறேன் என்று தானே சொன்னேன்' என்று தயாரிப்பாளர் கூற, பதிலுக்கு எம்.ஜி.ஆர்., 'படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், தாமதம் செய்வது சரியில்லை. 'அவர்கள் கஷ்டப்பட்டு, தங்கள் தொழிலை செய்பவர்கள். அவர்களுக்கான ஊதியத்தை, காலநேரம் அறிந்து கொடுக்க வேண்டாமா?

'படம் வெளியானபின், பணம் கிடைப்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது... இன்று மாலை என் உதவியாளரை அனுப்புகிறேன்; அவரிடம், தொழிலாளர்களிடம் பேசிய ஊதியத் தொகையை கொடுத்து அனுப்புங்கள்...' என்று கோபத்துடனேயே தொலைபேசியை வைத்து விட்டார்.அதன்படி, எம்.ஜி.ஆரால் எங்களுக்கு உடனடியாக ஊதியத்தொகை கிடைத்தது.

தன் மனைவியின் துக்கம் முழுவதுமாக மாறாத நிலையிலும், எங்கள் விஷயத்தில் தாமதமின்றி, உடனடியாக செயல்பட்டு உதவி செய்தார். இந்தப் படத்தின் ஒரு சிறப்பு என்னவெனில், இந்தியா - சீனா யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, இப்படம் வெளியானது. அந்த சமயத்தில், பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க, யுத்த நிவாரண நிதியாக, 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக, எம்.ஜி.ஆர்., அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு போதிய சமயத்தில் பணம் கிடைப்பதற்கு, இப்போது அமைக்கப்பட்ட யூனியன் எல்லாம் அப்போது இல்லாத நிலையில், எங்களை போன்ற கலைஞர்களுக்கு பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில், ஒரு பாதுகாப்பு யூனியனாகவே இருந்து உதவினார், எம்.ஜி.ஆர்.,சினிமாவில் எம்.ஜி.ஆர்., இருந்தது வரை, சினிமா தொழிலாளர்களுக்கு அவரது காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.இது போன்ற எண்ணற்ற மனித உதவி செயல்களால் தான் காலங்களையெல்லாம் கடந்து, மக்களின் உள்ளங்களில், எம்.ஜி.ஆர்., சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.- ஆர்.கோவிந்தராஜ்


வள்ளுவரின் குறள் நெறிப்படி



எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள், யாரும் இருக்க முடியாது. அதே சமயம் எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத சிலர் உண்டு. அவர்கள் எம்.ஜி.ஆரிடம் பழகியபடியே, எம்.ஜி.ஆர்., மீதுள்ள பொறாமை காரணமாக, அவரைப் பற்றி மறைமுகமாக மற்றவர்களிடம் தேவையின்றி விமர்சிப்பவர்களாக இருந்திருப்பர் அல்லது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயல்களை செய்பவர்களாக இருந்திருப்பர். எம்.ஜி.ஆருக்கு இது தெரியாது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பர். விஷயத்தை நன்கு விசாரித்து அறியும் எம்.ஜி.ஆரும், எதுவும் தெரியாதது போல் இருந்து விடுவார்.அப்படியானவர்களை நிகழ்ச்சிகளில் எதிரெதிரே பார்க்க நேர்ந்தால், எம்.ஜி.ஆர்., அவரைத் தவிர்க்க, தன் கண்ணெதிரே தென்படும், தனக்குத் தெரியாத நபரிடம், நலம் விசாரிப்பது போல பேசி, நகர்வார். நலம் விசாரிக்கப்பட்டவருக்கு ஒன்றுமே புரியாது.

எம்.ஜி.ஆர்., நலம் விசாரித்ததில், ஆனந்தம் கொள்வார் அந்த நபர். எதிரே வரும் தனக்கு பிடிக்காதவர்களை பார்த்து முகம் சுளித்துப் பேசுவதை தவிப்பதற்காக, எம்.ஜி.ஆர்., மேற்கொள்ளும் வித்தியாசமான செயல் இது.எம்.ஜி.ஆரின் வெறுப்பிற்கு ஆளானவர், கூனிக் குறுகி போய் விடுவார். எம்.ஜி.ஆர்., தன்னை தவிர்த்து விட்ட நிலையை எண்ணி வருந்துவார். அதுவே, எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. எம்.ஜி.ஆருக்கு தவறிழைத்த அந்த நபர் பின் தன் தவறை உணர்ந்து எம்.ஜி.ஆரிடம் வரும் பட்சத்தில் அவரது நிலையுணர்ந்து அரவணைத்துக் கொள்வார். வள்ளுவரின் குறள் படி, 'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என்பதே, எம்.ஜி.ஆரின் கண்ணியமான செயலாக இருந்தது.




மற்றவர் பொறுக்க மாட்டார்



எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றிக்கு, பல்வேறு சிறப்புகளை உதாரணமாக கூற முடியும் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது, மற்றவர்களின் பசி உணர்வை அவர் பொறுக்க மாட்டார் என்பது தான். எங்கு சென்றாலும் மற்றவருக்கு உணவு தேவை எனும் செய்தியை கேள்விப்பட்ட மாத்திரத்தில், உடனே அதற்கு ஏற்பாடு செய்யும் அவர், தன்னுடனேயே இருப்பவர்களின் பசியை உணர்ந்து கொள்ளாமல் இருப்பாரா என்ன! அதற்கான சம்பவம் இது.கடந்த, 1972ல் கட்சி துவங்கியபின் தமிழகம் முழுதும் மக்களை சந்தித்து கருத்து கேட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சமயம். எம்.ஜி.ஆரின் சுற்றுப் பயணங்கள் சூறாவளியை போன்றது.

இரவு பகல் பாராது, ஓய்வைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, மக்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர்., சாப்பிடுவதற்கு நேரம் நிச்சயிக்க முடியாது. மதியம் 2:00 மணிக்கு ஒரு ஊரில் உணவு சாப்பிட தீர்மானித்தால், அது சாத்தியப்படாமல், மாலை, 4:00 மணி கூட ஆகிவிடும். காரணம், வழியெங்கும் மக்கள் வெள்ளம், உணர்ச்சிப்பெருக்கு தென்படும். அவர்களைத் தாண்டிப் போக, அவர் மனம் இடம் கொடுக்காது.

இடையில் ஆங்காங்கே கொடியேற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பட்டு விடும். அதையெல்லாம் முடித்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அங்கிருந்து கடந்து செல்வார். அப்படியான சூறாவளி சுற்றுப்பயணம், ஒரு நாள் கும்பகோணத்தில், காலை, 10:00 மணியளவில் துவங்கியது.

மதிய உணவை பட்டுக்கோட்டையில் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்., வழக்கம் போல் மக்கள் அலை அலையாக வழியெங்கும் எம்.ஜி.ஆரை காண காத்திருந்ததால் பட்டுக்கோட்டை செல்ல மதியம், 4:00 மணி ஆகிவிட, எம்.ஜி.ஆர்., உட்பட உடனிருந்த எங்கள் அனைவருக்கும் அதிகமான பசி.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரையில் நீண்ட வரிசையாக உணவு பரிமாறி எம்.ஜி.ஆருக்கு தனியாக ஒரு தனி அறையில் ஏற்பாடு செய்ய, எம்.ஜி.ஆரோ அதை ஏற்றுக் கொள்ளாமல், தரையில் அமர்ந்தார்.அருகே மெய்க்காப்பாளர்கள் நாங்கள் அமர்ந்து விட, திடீரென சுற்றும் முற்றும் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்., யாரையோ தேடுகிறார் என்பதை அறிந்த நாங்கள், 'என்ன அண்ணே...' என்று கேட்க, 'எங்கப்பா நம்ம கதிரேசன், ஆறுமுகம்...' எனக் கேட்க, 'முகம் கழுவப் போயிருக்காங்கண்ணே...' என்றோம்.

கதிரேசன், எம்.ஜி.ஆரின் கார் ஓட்டுனர்; ஆறுமுகம், புகைப்படக்காரர். அவர்கள் வந்ததும், எம்.ஜி.ஆர்., 'எங்கேப்பா போனீங்க... பசிக்கலியா... பந்திக்கு முந்திக்க வேண்டாமா... ஊர்க்காரங்க எல்லாரும் உட்கார்ந்துட்டாங்களே...' எனச் சொல்லியபடி, 'டக்'கென எழுந்து விட்டார்.
'நீங்களெல்லாம் சாப்பிடுங்க. நான் அப்புறம், என் கூட வந்தவங்களோடு சேர்ந்து சாப்பிடுகிறேன்' என்று கூறி நகரத் துவங்கினார். அந்த இடமே பரபரப்பானது; பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.


சிலர் தங்கள் இலையிலிருந்து எழுந்து, எம்.ஜி.ஆர்., உட்பட மூவருக்கும் இடம் கொடுத்து அமரச் சொல்லி வற்புறுத்திய பின், திருப்தியுடன் அமர்ந்தார் எம்.ஜி.ஆர்., யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆர்., அங்கு வந்தால், சாப்பிடுபவர் எழுந்து நிற்பதை அவர் விரும்ப மாட்டார்.'நாம் எந்நேரமும் உழைப்பது, இந்த உணவிற்காக தான். அத்தகைய உணவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எனக்கு மரியாதை வேண்டாம். சாப்பிடும் போது, யாருக்காகவும் இடையில் நிறுத்தக் கூடாது' என்று அறிவுரை வழங்குவார்.இது போன்ற இன்னும் எத்தனையோ சிறந்த குணங்களால் மட்டுமே, எம்.ஜி.ஆர்., இன்றளவிலும் மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்!

வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்! :பணியாளர்கள் வீடு தேடி வந்த வண்ண 'டிவி'

எம்.ஜி.ஆர்., மறைந்து, 33 ஆண்டுகளான பிறகும், அவரை முன்னிறுத்தி தான் இன்றும் அரசியல் நகர்கிறது. மக்கள் மனதில், அவர் இன்னமும் வாழ்கிறார். எம்.ஜி.ஆரால் பலன் பெற்ற பல்லாயிரம் பேரும், இன்னும் அவர் புகழ்பாடுகின்றனர். அவர்களில் ஒருவர், பழநியாண்டவர்.தேனி மாவட்டம், சின்னமனுாரில், அந்நாளில் பிரபல புகைப் படக்கலைஞரும், தந்தையுமான பவுனுடன் ஸ்டூடியோ நடத்திக் கொண்டு இருந்தார், பழநியாண்டவர்.

கடந்த, 1986ல், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி.,யாக இருந்த கம்பம் ஆர்.டி.கோபால் இல்ல திருமணத்தில், புகைப்படம் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, எம்.ஜி.ஆரிடம் அறிமுகமானவர்.திருமணத்தை நடத்தி வைத்த, எம்.ஜி.ஆர்., தன்னையும் அழைத்து, தன்னுடன் படம் எடுத்துக் கொண்டது தான், தன் வாழ்நாளின் உச்சக்கட்ட மகிழ்ச்சி என்றார், பழநியாண்டவர்.அவர் நினைவுகூர்ந்ததாவது: நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் மட்டுமில்லை; பரம பக்தன். எம்.ஜி.ஆரை படம் எடுக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தவனை, என்னை அழைத்து, படம் எடுத்துக் கொண்டது பெரும் பாக்கியம்.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவர் வாழ்ந்த, சென்னை, ராமாபுரம் தோட்டத்தில், அவர் மனைவி ஜானகியின், தனி வீடியோகிராபராக பணிபுரிந்தேன்.எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருந்து ஆசைப்பட்டு வாங்கி வந்த, 'என்3' வீடியோ கேமராவை, நான் தான் உபயோகித்தேன்.எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும், கொடை குணமும் மக்களுக்கு மட்டுமல்ல; வீட்டு பணியாளர்களுக்கும் தாராளமாக கிடைத்தன. அதை சொல்லி சொல்லி, அவர்கள் மகிழ்வது வழக்கம்.ஒரு முறை, 'டிவி'யில், எம்.ஜி.ஆர்., நடித்த, நம்நாடு படம் ஒளிபரப்பாக இருந்தது. வீட்டில் வேலை பார்த்தவர்கள், வேலை நேரம் முடிந்தும், வீட்டிற்கு போகவில்லை. வீட்டில் 'டிவி' இல்லாததால், எம்.ஜி.ஆர்., அவர்களை படம் பார்க்கச் சொல்லிவிட்டு, படத்துக்கு நடுவே ருசிக்க, பலகாரம், டீயும் ஏற்பாடு செய்தார். படம் முடிந்த பின், சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டது. பணியாளர்கள் யார் வீட்டில் எல்லாம், 'டிவி' இல்லை என கணக்கெடுத்தார். அத்தனை பேர் வீட்டிலும், 'டிவி' பொருத்த, 'ஆர்டர்' கொடுத்தார்.

 சக தொழிலாளர்களுக்காக திரைப்பட தயாரிப்பாளரை கடிந்து கொண்ட எம்.ஜி.ஆர்.,


எல்லார் வீட்டிலும், 'ஒனிடா' என்ற நிறுவனத்தின் வர்ண 'டிவி' பொருத்தப்பட்டது.அன்றைய தினத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கு கூட, அப்படிப்பட்ட வண்ண 'டிவி' வாங்குவது, ஒரு கனவாகவே இருந்தது.வீட்டில், 'டிவி' பொருத்தப்பட்ட போது தான், அது எம்.ஜி.ஆர்., சொல்லி வந்தது என்பது, பணியாளர்களுக்கு தெரியவந்தது. இது போல, எத்தனையோ சம்பவங்களை சொல்வர்.ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது பரிசுப்பொருட்களை, தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு மாற்றிய பின், ராமாவரம் வீட்டில் வேலை இல்லை. வெளியில் வேலை பார்க்கவும் விருப்பம் இல்லை.

நான் தலைவரது நினைவு இல்லத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, புகைப்படம் எடுத்துக் கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்கிறேன். இன்றைக்கும், என் குடும்பத்திற்கு, அவர் தான் சோறு போட்டுக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு, பழநியாண்டவர் கூறிய போது, அவர் நா தழுதழுத்தது.


அ.தி.மு.க., உருவாக என்ன காரணம்?



எம்.ஜி.ஆரின் நினைவகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார், நிழல் போல உதவியாளராக வலம் வந்த கே.மகாலிங்கம்.இது குறித்து அவர் கூறியதாவது:குடும்பத் தலைவரை இழந்து, நிர்க்கதியாய் நின்ற, நடிகர் குண்டு கருப்பையா குடும்பத்திற்கு ஆறுதலாக இருப்பதற்காக, அவரின் மகனான, என்னை தனி உதவியாளராக அமர்த்தினார் எம்.ஜி.ஆர்., எனக்கு மட்டுமல்ல, என் உடன்பிறந்த சகோதர - சகோதரியர் அனைவருக்கும், அவர் தான், தந்தை போல இருந்து, திருமணத்தை நடத்தி வைத்தார்.மனதிற்கு பிடித்தவர்களுக்கு, 200நுாறு ரூபாய் நோட்டுகளை வழங்குவது, அவரது வழக்கம். முதல் முதலாக அவரை சந்தித்த போது, எனக்கும் 200 ரூபாய் வழங்கினார். உதவி கேட்டு வந்தவர்களுக்கு, 200 ரூபாய்களாக, அள்ளி அள்ளி கொடுப்பார்.
தோட்டத்தில், எப்போதும் சாப்பாடு தயாராகியபடி இருக்கும். யார் வந்தாலும், முதலில் சாப்பிட்டுவிட்டு தான் பேசச் சொல்வார்.

தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டபோது, அவர் 'சத்யா ஸ்டூடியோ'வில் படப்பிடிப்பில் இருந்தார். அவரின் கருத்தறிய, ராமாபுரம் தோட்டத்தில் குவிந்தனர், பத்திரிகையாளர்கள். படப்பிடிப்பில் இடைவெளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னேன். குழப்பத்தில் நான், 'பத்திரிகையாளர்களிடம் என்ன சொல்ல' என, கேட்டேன். அவர் சொன்ன பதில், ''நான் பாயசம் சாப்பிட்டுக் கொண்டு
இருக்கிறேன்!'' வீடு திரும்பிய எம்.ஜி.ஆர்., அமைதியாக இருந்தார். நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.எஸ்., போன்றவர்கள், எம்.ஜி.ஆரை மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்கும் பேச்சில் இறங்கினர். ஆனால், வீட்டு வாசலில் திரண்டு ரசிகர்கள் நின்று, கண்ணீர் விட்டு அழுதனர்; கதறினர். தி.மு.க.,வினரால் தாக்கப்பட்ட முசிறிபுத்தன் போன்றவர்கள், ரத்தம் வழிய, எம்.ஜி.ஆரை பார்க்க வந்தனர்.

ரசிகர்களின் கண்ணீரில் நெகிழ்ந்து போய் இருந்த எம்.ஜி.ஆர்., அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வெகுண்டு எழுந்தார். இது, அவரை உறுதியான முடிவுக்கு அழைத்துச் சென்றது. 'இனி, எந்த சமாதானத்தையும் ஏற்பதாக இல்லை' என்று சொன்னவர், அ.தி.மு.க.,வை
துவக்கினார்.அவரது எண்ணம், கொள்கை, லட்சியம் மூலை முடுக்கெல்லாம் பரவியது. இதில், 'தினமலர்' நாளிதழும் முக்கிய பங்காற்றியது. 'தினமலர்' தனக்கு பெரும் பலமாகவும் உறுதுணையாகவும் இருந்ததாக, எம்.ஜி.ஆர்., கருதினார். எம்.ஜி.ஆர்., துவக்கிய கட்சி, அசுர வளர்ச்சி பெற்று, வெற்றிகளை குவித்தது. அவர் முதல்வரானதும், என்னை அதிகாரபூர்வமாக உதவியாளராக்கி அழகு பார்த்தார். அவர் பச்சை குத்திக் கொள்ளச் சொன்ன போது, பலரும் தயங்கினர். நான் ஒரு கையில், இரட்டை இலையையும், இன்னொரு கையில் எம்.ஜி.ஆர்., படத்தையும் பச்சை குத்திக்கொண்டேன்.
இதை எல்லாம் மனதில் வைத்து தான், 'கட்சியை நடத்திச் செல்வதில், மகாலிங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு' என்று பொது வெளியில் என்னை பாராட்டினார்.அவர் இறக்கும் வரை, அவரது உதவியாளராகவே இருந்தேன். அது எனக்கு மட்டுமல்ல; என் குடும்பத்துக்கே பாக்கியம். அதன் பின், அவரது நினைவுகளோடு இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.


குண்டு கருப்பையா குடும்பம்



எம்.ஜி.ஆரின் படங்களில், நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், குண்டு கருப்பையா. அவர் மறைந்த போது, அவர் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்திக் கொடுத்தவர்.குண்டு கருப்பையாவின் மகன், கே.மகாலிங்கத்தையும் எம்.ஜி.ஆர்., அரவணைத்துக் கொண்டார்.
நாடு போற்றும் நடிகராக இருந்த காலத்தில் இருந்து, 1987ம் ஆண்டு, அவர் உலகம் போற்றும் முதல்வராக இருந்து மறைந்தது வரை, எம்.ஜி.ஆர்., நிழல் போல தனி உதவியாளராக, கூடவே இருந்தார் கே.மகாலிங்கம். தற்போது, சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தில் குடியிருக்கிறார்.


எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரம் எம்.ஜி.ஆர்.,



முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், 'கவிஞர் மு.மேத்தாவுக்கு இந்த விருதை வழங்கவும்' என, தன் கையால் எழுதியிருந்தார். இதை, இன்றும் நினைவுகூர்கிறார், 'சாகித்ய அகாடமி' விருது வென்ற, மு.மேத்தா.
எம்.ஜி.ஆர்., குறித்து, அவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., என்ற பெயருக்கு, இப்போதும் இருக்கிற மந்திர சக்தியை கொடுத்தவரே, எம்.ஜி.ஆர்., தான். ஏராளமானோர் மக்களால் புகழப்பட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு பின், அந்த பெயரும், புகழும் மறக்கப்படும்.

எம்.ஜி.ஆர்., நல்ல நடிகர் என்பதைத் தாண்டி, முழுமையான மதிக்கத்தக்க மாண்புமிகு மனிதர்.எம்.ஜி.ஆரின் இரக்க குணம், ஈகை குணம், வாழ்த்துகிற குணம், அவரை எல்லார் மனதிலும் நிலைநிறுத்தியுள்ளது. தன்னைப் போல் மற்றவர்களையும் மதித்து, தன்னைப் போல் பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்ற குணம், அவரிடம் இருந்தது.எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அன்புடன் அரவணைத்தார்.கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்தவர்களை மதித்தார்.மாற்றுக் கட்சியில் இருந்தாலும், உண்மையான கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீது, எம்.ஜி.ஆருக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.


நடிகராக இருந்தபோதும், தலைவராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும், அவரது நடவடிக்கைகள், மக்கள் நலம் சார்ந்தவையாக, மக்களுக்காக சிந்திப்பவையாக இருந்தன.நடிகர் சிவாஜி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், எம்.ஜி.ஆரின் சினிமாவில், அவரையே அவரின் ரசிகர்கள் நேரில் பார்ப்பதாக உணர்ந்தனர். மக்களை காப்பாற்றுபவராக சினிமாவில் வந்தார். மக்களைக் காப்பவராகவும் வாழ்ந்து காட்டினார்.

எதிரிகள் கூட, இவரை நேரில் ஒருமுறை சந்தித்தால் நண்பர்களாவர். இது தான், அவரது செல்வாக்குக்கு காரணம்.வர்த்தகமான சினிமாவில், நிறைய பேர் தங்களின் வளர்ச்சியை மட்டும் கவனிப்பார்களே தவிர, மற்றவர்களின் நலத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால், எம்.ஜி.ஆர்., மற்றவர்களின் நலத்தையும் பார்த்தார். அது அவருக்கு பெரிய பலத்தைக் கொடுத்தது. அவரது கோபம் கூட ஒரு தீபம் தான். அது அழுக்குகளையும், இருட்டையும் அகற்றும்.மக்கள் வெள்ளம் ஒருவரைச் சந்திக்க எதையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது என்றால், அது எம்.ஜி.ஆரை சந்திக்கத் தான். எம்.ஜி.ஆரின் உயர்வு, அவரது உருவத்தால் ஏற்பட்டதல்ல; பரந்த அவரது உள்ளத்தால் ஏற்பட்டது. எளியவர்களுக்கு உதவும் பண்பு, இயற்கையிலேயே அவருக்கு இருந்தது. எளிய மக்களின் வாழ்க்கை கஷ்டங்களை புரிந்து, அதைப் போக்கும் மருத்துவராக எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார். அதனால் தான், அவர் எப்போதும் பிரகாசிக்கும் நட்சத்திரமாக திகழ்கிறார்.இவ்வாறு, மு.மேத்தா கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...