“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்றொரு பழமொழியைக் கேட்டிருப்போம். அதன் உண்மை அர்த்தம் யாதென்பதை பின்வரும் விளக்கங்களில் காணலாம், வியாழன் கோளின் தோற்றம் பொன்னிறம். இக்கோள் சூரியனைச் சுற்றி வர சுமார் 12 வருடங்களை எடுத்துக் கொள்ளும். ஆகையால் இக்கோளைக் காண்பது அறிதாகும்.
ஆனால் புதன் கோளானது தோற்றத்தில் பூமியைக் காட்டிலும் 18 மடங்கு மிக மிகச் சிறியதாகும். மேலும் இக்கோள் சூரியனுக்கு மிக மிக அருகில் இருப்பதால் சூரியனின் பொலிவின் ஊடே இக்கோளைக் கண்களால் காண்பது இயலாத காரியமாகும்.
மேலை நாட்டு வானியல் அறிஞரான கோபர் நிக்கஸ் என்னும் அறிவியலார் 1543 ம் ஆண்டு தான் இறக்கும் தருவாயில் கடைசி வரைத் தன்னால் புதன் கோளைக் காண முடியவில்லையே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டே இறந்து போனார். இச்செய்தியில் ஒரு மாபெரும் உண்மை ஒளிந்துள்ளது. இவ்வுண்மையே இக்கட்டுரை எழுதுவதற்கோர் தூண்டுகோலாகவும் அமைந்தது.
உண்மையில் கோபர் நிக்கஸ் என்பவரே ஐரோப்பிய வானியலாலர்களில் முதன்மையானவராகக் கருதபடுபவர் ஆவார். ஏனெனில் இவர்தான் முதன் முதலாக சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருவதாக உலகிற்கு அறிவித்தார்.
ஐரோப்பிய அறிவிலிகள் மத்தியில் தெளிவாக சிந்தித்த இவரால் கூட புதன் கோளைக் காண முடியவில்லை என்னும் உண்மையே ஐரோப்பியர்களுக்கு கோள்களைப் பற்றிய முன்னறிவு இல்லை என்பதையும், வானியல் அறிவானது வெளியிலிருந்தே ஐரோப்பாவிற்குச் சென்ற மெய்ம்மையும் தெள்ளற விளக்கும்.
ஒரு கோளைக் கண்களால் காணக்கூட முடியாத இவர்களால் அப்படி ஒரு கோள் உள்ளது என்று பிறர் கூறித்தானே அறிந்திருக்க முடியும். அதன் பின்னர்தானே அக்கோளைக் காண இவர்கள் முயற்சி செய்திருக்க வேண்டும், இல்லையா? அவ்வாறு ஐரோப்பியர்களுக்கு கூறியது யாராக இருக்க முடியும் ?
புதன் என்பது புத்தியைக் குறித்து வழங்கும் ஒரு சொல்லாகும். அறிவன் கோள் என்பதே புதன் கோள் என்றானது. தமிழில் அறிவு என்றால் வடமொழியில் புத்தி என்று பொருள். வரலாற்றில் புதன் கோளின் கண்டுபிடிப்பே வானியலுக்கு மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்தது. ஞால நடுவரைக் கோட்டுப் பகுதியில் வாழ்ந்த அறிவன் குலத்தவரே அக்கண்டுபிடிப்பை நிகழ்த்தினர்.
ஆகையால் தமது பெயரையே அக்கோளுக்கும் சூட்டினர். ஏனைய கோள்களைப் போன்று கண்களுக்குப் புலப்படாமல் தொடர்ந்து போக்குக் காட்டி வந்த புதன் கோளை முதன் முதலில் தமது அகக் கண்களால் கண்டு அதன் இயக்கத்தை தெளிவாக வரையருத்தவரும் அவர்களே ஆவர். இதனையே அறிவர் மரபின் மூன்றாவது கண் எனத் தொல்காப்பியமும், “நுதன்விழி நாட்டத் திரையோன் என்று சிலப்பதிகாரமும், “முக்கட் செல்வர்” என எட்டுத்தொகை நூல்களும், “நயனங்கள் மூன்றுடை நந்தி” எனத் திருமந்திரமும் குறிப்பிடுகின்றன.
ஐரோப்பியக் கண்டத்தில் வணங்கப்பட்ட ரோமானியக் கடவுளின் பெயர் “மெர்குரி” (Eloquence) ஆகும். இச்சொல்லுக்கு தமிழ் லெக்ஸிகன் அகராதியில் பொருள் கொண்டால் அது “நிமித்திகன்”, என்றும் “காலத்தை முன்கூட்டியே கணிப்பவன்” என்றும் வாக்குபலம் கொண்டவன் என்றும் காட்டும். ஆகையால் அறிவன் (Fortune Teller) எனப்பட்டவனே Mercury என்னும் கடவுளாக ஐரோப்பியர்களால் வணங்கப்பட்டான் பின்பு அவனின் பெயரே புதன் கோளுக்கும் சூட்டப்பட்டது என்னும் உண்மையை விளக்க மேற்கூறிய சான்றுகள் போதுமானது.
அறிவன் என்பவனே கணியன் எனவும், வள்ளுவன் எனவும் வழங்கப்பட்டான் என்பதற்கு ஏராளமான வரலாற்று இலக்கியச் சான்றுகள் இருப்பினும் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் வரும் சான்றே இவற்றுள் தலைசிறந்ததாகும்.
புறத்திணையியல்
=======================
“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்”
- ( தொல்காப்பியம்)
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூவகைக் காலத்தையும் திறம்பட அறிந்து நெறி தவறாமல் பிறருக்கு உரைப்பவனே அறிவன் எனப்பட்டான் என்பதே இதன் பொருள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணார், “அறிவன்” என்பவனே “சோதிடன்” ஆவான் என்று தனது தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார்.
தமிழ் அறிவர்களான வள்ளுவர்களின் சோதிட அறிவை “குறி சொல்லுதல்” என்னும் சிறிய வட்டத்துக்குள் அடக்கி விட முடியாது. அவர்கள் கற்பனைக்கும் எட்டாத் தொலைவிலிருந்த பல்வேறு கோள்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் கூடத் துல்லியமாக அறிந்திருந்தனர். 1974 –ல் நாசாவால் அனுப்பப்பட்ட மாரினர் விண்கலமும், அதன் பின்னர் அனுப்பப்பட்ட மெசெஞ்சர் விண்கலமும் புதன் கோளை மிக அருகில் நெருங்கி படம் எடுத்த போது அக்கோளின் தோற்றமானது நிலவின் தோற்றத்தை அப்படியே ஒத்திருப்பதும், நிலவை விட பன்மடங்கு சிரியதாயிருப்பதும் இவ்வுலகிற்குத் தெரியவந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வில்லிபுத்தூர் ஆழ்வாரால் இயற்றப்பட்ட வில்லிபாரதம் புதன் கோளை நிலவின் மகன் என்று அழைக்கிறது.
“புந்தி யாலுயர் புதனென்னும் புதல்வனை” (1:1:6.3)
“தார காபதி புதல்வன்” (1:1:8.2)
“மதிமகன் மந்தமென் பூவையும்” (1:1:9.1)
மேற்கூறிய வரிகள் இக்கூற்றை மெய்ப்பிக்கும்.
நெற்றிக்கண், மூன்றாவது கண் என்று கூறப்படுபவை எல்லாம் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அறிவையே குறிக்கும் என்பதே உண்மை. “கடல் கொண்ட தென்னாடு” என்ற தனது நூலில் கா. அப்பாதுரையார் இக்கூற்றை நிறுவியிருப்பார்.
(மூலங்கள் என்றுமே அழிவதில்லை)..........
No comments:
Post a Comment