புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்த கோவிலில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாக அமைந்து இருப்பதால் வெளிமாநில பக்தர்கள் அதிகமாக இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் அவர்கள் நீராடுவது வழக்கம்.
மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களிலும், மாத அமாவாசை நாட்களிலும் பலரும் மூதாதையருக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன் பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு ராமநாத சுவாமியை தரிசனம் செய்து செல்வார்கள்.
ராமேசுவரம் வரும் பக்தர்களுக்கு கோவிலின் வரலாற்றை எடுத்துரைத்துப்பது, 22 புனித தீர்த்தங்களில் நீராடுபவர்கள் மீது தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணி போன்றவற்றில் திருக்கோவிலின் அங்கீகாரத்தோடு யாத்திரை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தபணியில் ஏறத்தாழ 420-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பக்தர்கள் ராமேசுவரம் வராததால் சுற்றுலா வழிகாட்டிகள், யாத்திரை பணியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
மேலும் கோவிலை சுற்றியுள்ள சங்கு கடைகள், பாசி கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஆட்டோ, வாகனங்கள், தேனீர் கடைகள் என சாலையோர கடைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் தொழில் இன்றி பாதிக்கப் பட்டுள்ளன.
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையிலும், ராமேசுவரம் கோவிலில் இன்றும் புனித தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் உள்ளது.
வறுமையில் வாடி வரும்கோவில் பணியாளர்கள் தீர்த்தக் கிணறுகளை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வருகிற 30-ந் தேதி தீர்த்த கிணறுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment