வருடம் கடந்தாலும் எஸ்பி.பி யின் நினைவினை கடக்க முடியவில்லை. கடக்க நினைத்தாலும் இந்த ரேடியோவும் டிவியும் கூடுதலாக யூ டியூபும் இருக்குமளவு அவரை கடக்க முடியாது போல..
அவரின் ஆக சிறந்த பாடல்கள் #இளையராஜா இசையில் வந்தது, அதில் எல்லா கவிஞர்களின் பாடலும் இருந்தது
இதில் கங்கை அமரனின் பாடலும் இருந்தது
அந்த கூட்டணி வித்தியாசமாக இருந்திருக்கின்றது. பாரதிராஜா, எஸ்.பி.பி, இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரை கவனியுங்கள் புரியும்
பாரதிராஜா முதலில் திரை துறைக்கு சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு சுகாதாரபணி செய்திருக்கின்றார், பின் எப்படியோ சினிமாவுக்கு வந்து தன்னை அடையாளபடுத்தி கொண்டார்
அவரின் படமெல்லாம் தனி ரகம். தமிழக கிராம வாழ்வுக்கு அப்படங்கள் எக்காலமும் சாட்சி
இளையராஜா முறைப்படி இளமையில் சங்கீதம் பயின்றவர் அல்ல, ராக தாளங்கள் அறிந்தவர் அல்ல. ஆனால் இசையில் மிகபெரிய தேர்ச்சி இயல்பாக இருந்திருக்கின்றது. எல்லா நாட்டு இசை கருவிகளும் அவர் தொட்டவுடன் தானாக பாடியிருக்கின்றன
ராகமும் தாளமும் அவருக்கு கைகட்டி நின்றன. பெரும் சங்கீத வித்வான்கள் கொடுக்க வேண்டிய இசையினை மிக இயல்பாக யோசிக்காமலே வந்தன
கங்கை அமரன் எனும் அமர்சிங் எந்த புலவனிடமும் கைகட்டி பாடம் படிக்கவில்லை, இலக்கிய மேடைகளில் முழங்கவில்லை, பத்திரிகை நடத்தவில்லை, கவிஞன் என தனக்கு தானே பட்டமிட்டு கவிதை எழுதி பலரை கொல்லவில்லை
ஆனால் தமிழ்திரையுலகின் அற்புதமான பாடல்களில் அவர் எழுதிய பாடலும் உண்டு. சில நேரங்களில் கண்ணதாசன் வாலி பாடல்களை போல அவை அதி அற்புதமாக அமைந்ததும் உண்டு
அப்படியே எஸ்.பி.பி. நிச்சயம் அவரின் தொடக்கமும் படிப்பும் இசை சார்ந்தது அல்ல. கல்லூரிகாலம் வரை அவர் ஒரு பாடகராகபோவது அவருக்கே தெரியாது, ஆனால் வாய்ப்பும் காலமும் அவரை இழுத்து சென்று சிம்மாசனத்தில் வைத்தன
எந்த பாடலும் எந்த சுதியும் லயமும் பாவமும் அவருக்கு சிக்கலே இல்லை, எவ்வகை கடின பாடல்கள் என்றாலும் அதிசுத்தமாக அவரால் பாடமுடிந்தது
ஏதோ ஒரு முன் ஜென்ம புண்ணியமும் தெய்வத்தின் அருளும் அவர்களிடம் இருந்தது, காலமே சேர்த்தது நாட்கள் நிறைவடைந்ததும் காலமே பிரித்தது
இவர்கள் எல்லோரையும் கவனித்தால் ஒன்று புரியும், இவர்களின் குலமும், படிப்பும், ஆரம்ப தொழிலும் இன்னும் பலவும் வேறு
ஆனால் திறமை என்பது தனித்து நின்றிருக்கின்றது. தங்களை உணர்ந்தார்கள் தங்கள் திறமையினை உணர்ந்தார்கள் அதை வணங்கினார்கள் வென்றார்கள்
தங்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக கருதவில்லை, இறைவன் போட்ட பாதையில் இருந்து இன்னொரு பாதையினை உலகுக்காய் அவர்கள் உருவாக்கி நடக்க விரும்பவுமில்லை
அழைப்பு வந்த பாதையில் சென்றார்கள் வென்றார்கள்
படிப்பால் எல்லாம் வந்தும் விடாது, இயல்பான திறமையால் எதுவும் வராமலும் போகாது என்பதற்கு எக்காலமும் இவர்கள் உதாரணங்கள்.
No comments:
Post a Comment