Thursday, August 26, 2021

மிசாவையும், எமர்ஜென்சியையும் திமுக எதிர்த்ததாக தொடர்ச்சியான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.

 மிசா சட்டத்தையும், எமர்ஜென்சியையும் கடுமையாக எதிர்த்தார் கலைஞர். எம்.ஜி.ஆர் எமர்ஜென்சியை ஆதரித்தார். அதனால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

- இது காலம் காலமாக திமுகவினர் சொல்லிவரும் கம்பி கட்டும் கதை. சமீபத்தில் வெளிவந்த சர்பேட்டா பரம்பரை படத்தில் திமுகவினரை மிஞ்சும் வகையில் உண்மை வரலாறைத் திரித்து திமுகவுக்கு ஆதரவாக பொய்யான காட்சிகளை சொருகி ஜால்ரா தட்டியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்!
உண்மை என்ன?
1971 - மிசா சட்டம் கொண்டு வரப்பட்டது.
அப்போது திமுகவின் முரசொலி மாறன், சிட்டி பாபு, இரா.செழியன் உள்ளிட்ட 23 எம்.பிகள் பாராளுமன்றத்தில் இருந்தனர். அப்போது திமுகவும், இந்திரா காங்கிரசும் கூட்டணியில்தான் இருந்தன. திமுக மிசா சட்டத்தை எதிர்க்கவில்லை.
1972 - திமுக காங்கிரஸ் கூட்டணி முறிகிறது.
1972 அக் 17 - அதிமுகவை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர்
1972 - நவம்பர் : கருணாநிதி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மீது துறைவாரியாக ஊழல் புகார்களை தயாரித்து அதை எடுத்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக சென்றார் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரமும். இதே ஊழல் புகார் மனுவை டெல்லிக்கு சென்று ஜனாதிபதியிடமும் கொடுக்கிறார்கள்.
1975 ஜூன் 25 - அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கருணாநிதியும் அதுவரை ஆட்சிக்கே வராத எம்.ஜி.ஆரும் அவசர நிலையை ஆதரித்தார்கள். (திமுகவிடமிருந்து விலகி எம்.ஜி.ஆரோடு கூட்டணி வைத்திருந்தார் இந்திரா காந்தி)
அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் ஒரு தேசிய உயர்மட்டக் கூட்டம் நடந்தது 1976 ஜனவரி 10, 11 தேதிகளில். அந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தொழிலாளர் நல அமைச்சர்களும், தொழிற்சங்கங்களின் சார்பாக ஐஎன்டியூசி, ஏஐடியூசி ஆகியவற்றின் பிரதிநிதிகளும், முதலாளிகளின் தரப்பில் 3 பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அன்றைய திமுக அரசின் தொழிலாளர் நலத்துறைத்துறை அமைச்சராக இருந்த ராஜாராம் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 1976 ஜனவரி 13. ( எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு 6வது மாதம் நடந்துகொண்டிருக்கிறது)
அமைச்சர் ராஜாராம் பேசியிருப்பதை வைத்துப் பார்த்தால்( படம்-1) திமுக ஆட்சி இந்திராகாந்தியால் கலைக்கப்படுவதற்கு முன்பு இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட 20 அம்ச திட்டம் மற்றும் அவரசநிலை பிரகடனத்தை எதிர்க்கும் மனநிலையில் இல்லை.
எம்.ஜி.ஆர் ஏன் எமர்ஜென்சியை ஆதரித்தார்?
புதிதாக ஆரம்பிக்கப்பட்டு முதல் சட்டசபை பொதுத்தேர்தலைக்கூட சந்திக்காத அதிமுக கட்சியின் நிர்வாகிகளை கருணாநிதி மிசா சட்டத்தால் வேட்டையாடுகிறார். இதே நேரத்தில் இந்திராவோடும் மோதினால் பாதிக்கப்படப்போவது தன் கட்சியினர்தான் என்பதால் எமர்ஜென்சியை ஆதரித்தார்.
1975 ஜூன் மாதம் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட பிறகு மிசா சட்டத்தை பயன்படுத்தி அதிமுகவின் ஜேப்பியார், சிம்சன் தொழிற்சங்க தலைவர் குலேசன், இடதுசாரிகள் என தனது அரசியல் எதிரிகளை மிசாவில் கைது செய்து இந்திராவிடம் மிசா கணக்கை காட்டினார் கருணாநிதி.
மிசா சட்டத்தை தமிழகத்தில் முதன்முதலில் பயன்படுத்திய கட்சி திமுக. புதிதாக தொடங்கப்பட்ட கட்சியான அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக மிசாவை பயன்படுத்தினார் கருணாநிதி.
கருணாநிதி ஏன் எமர்ஜென்சியை ஆதரித்தார்? எப்போதிலிருந்து எமர்ஜென்சியை எதிர்க்க தொடங்கினார்?
அவசர நிலையின் போது காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் மாநில அரசின் ஆட்சிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. 1976ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் திமுக ஆட்சி முடிந்து தமிழக பொதுத்தேர்தல் வரவிருந்தது. அதனால் கருணாநிதி இந்திராவிடம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் போல் (கேரளா) எங்களின் ஆட்சியையும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யுங்கள் என்று கேட்டார். இந்திராவின் தூதர் ஓம் மேதாதான் அப்போது திமுகவோடு தொடர்பில் இருந்தார். அவர் மூலம் திமுக ஓராண்டு ஆட்சி நீட்டிப்பு கேட்டது.
இந்திரா அதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகே கருணாநிதி எமர்ஜென்சியை எதிர்க்க தொடங்குகிறார்.
எமர்ஜென்சி கொண்டுவரப்பட்ட ஜூன் 1975 முதல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிப்ரவரி 1, 1976வரை கருணாநிதி எந்த இடத்திலும் எமர்ஜென்சியை பெரிதாக எதிர்த்ததில்லை. மிசாவையும் எதிர்த்ததில்லை.
மிசாவை தமிழகத்தில் தன் அரசியல் எதிரிகளை ஒடுக்க பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி.
மிசா சட்டம் கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகே அதை எதிர்க்க தொடங்குகிறார். (மிசாவில் திமுகவினர் கைதான பிறகு!)
பிப் 1, 1976 : திமுக ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கலைக்கப்படுகிறது. ( ஷா அப்போது தமிழக ஆளுநர்)
பிப்ரவரி 3 , 1976 : நீதிபதி சர்க்காரியா தலைமையில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷனை அமைக்கிறது இந்திரா தலைமையிலான மத்திய அரசு.
எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு 7 மாதங்களுக்கு பிறகே அதை வெளிப்படையாக எதிர்க்க தொடங்குகிறது திமுக.
அதற்கு முன்புவரை இந்திராவுக்கு பயந்து காவிரி ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் விட்டது, கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு கொடுத்தபோது பாராளுமன்றத்தில் 23 எம்.பிகளை வைத்துக்கொண்டும் பெரிதாக எதிர்க்காமல் அழுகுணி ஆட்டம் ஆடுவது என இந்திரா காந்தியின் மனது நோகாமல் நடந்துகொண்டார்.
இந்திரா கொண்டுவந்த 20 அம்ச திட்டத்தை காங்கிரஸ் மாநிலங்கள் ஆதரிக்கும் முன்பே திமுக வலிய சென்று ஆதரித்தது.
கருணாநிதி 1976ல் சட்டசபை தேர்தலை சந்திக்க தயங்கினார். அதனால்தான் ஓராண்டு ஆட்சியை நீட்டிக்க சொல்லி இந்திராவிடம் கேட்டார். அவர் தயங்க காரணம் இருந்தது.
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்ட பிறகு வந்த திண்டுக்கல் (1973) இடைத்தேர்தலில் அதிமுகவிடம் படுதோல்வியடைந்தது ஆளுங்கட்சியான திமுக. (அதிமுகவின் மாயத்தேவர் அபார வெற்றி பெற்றார்) காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திற்கும் போனது.
அடுத்து 1974ல் வந்த கோவை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுகிறது (அரங்கநாயகம்) அதோடு சேர்த்து நடந்த கோவை நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வதி கிருஷ்ணன் வெற்றி பெறுகிறார். ஆளுங்கட்சியான திமுக வெறும் 2 ஆண்டுகளைக்கூட கடந்திடாத அதிமுகவிடம் மண்ணை கவ்வுகிறது.
1974ல் பக்கத்து மாநிலமான புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வென்று முதல் அதிமுக அரசாங்கம் அங்கு அமைகிறது.
அதிமுக தோன்றியபிறகு திமுக தொடர்ச்சியாக தோற்றுக்கொண்டே வந்ததால் 1976 மார்ச்சில் வரவிருந்த சட்டசபை தேர்தலை தவிர்க்க ஓராண்டு ஆட்சி நீட்டிப்பு கேட்டார் கருணாநிதி. அது இந்திராவால் மறுக்கப்பட்ட பிறகே எமர்ஜென்சி எதிர்ப்பு, மிசா எதிர்ப்பு எல்லாம்.
திமுக ஆட்சியிலிருக்கும்போது நெருக்கடி நிலையை எதிர்க்காமல் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு எதிர்க்க என்ன காரணம்?
அரசியல்.
அதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தபிறகு அந்த கூட்டணியை எதிர்க்க திமுக கையில் எடுத்த ஆயுதம்தான் எமர்ஜென்சி எதிர்ப்பும், மிசாவும். தனது அரசியல் எதிரிகளை ஒடுக்க கருணாநிதி பயன்படுத்திக்கொண்ட மிசா சட்டம் அவர் கட்சிக்கு எதிராகவே திரும்பும்போது அதை அவர் எதிர்த்துதான் ஆக வேண்டும். அதைத்தான் செய்தார்.
அதற்கு பதிலடியாக தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இந்திரா காந்தியின் மண்டை திமுக குண்டர்களால் உடைக்கப்பட்டது.
1980 : வெறும் மூன்றே ஆண்டுகளுக்குள் இதையெல்லாம் மறந்து 'நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியை தருக!' என புகழ்ந்து 1980 நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்திராவுடன் கூட்டணி சேர்ந்தார் கருணாநிதி. திமுக- இந்திரா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் இந்திரா ஆட்சி மத்தியில் அமைந்த ஒருசில மாதங்களிலேயே தமிழகத்திலிருந்த எம்.ஜி.ஆர் ஆட்சி (1980) கலைக்கப்பட்டது.
1980 : தன் கூட்டணி கட்சித் தலைவரான கருணாநிதி மீது, தான் தொடர்ந்த ஊழல் வழக்குகளை வாபஸ் வாங்கினார் இந்திராகாந்தி.
பாராளுமன்ற தேர்தலில் வென்ற திமுகவும் இந்திராவும் அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆரிடம் படுதோல்வியடைந்தனர். இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர்.
அதன் பிறகு இந்திரா காந்திக்கு புத்தி வந்தது. திமுக செல்லாக்காசு என தெரிந்துகொண்டபின் அவர்களை விரட்டி விட்டு மீண்டும் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார்.
மிசாவையும், எமர்ஜென்சியையும் திமுக எதிர்த்ததாக தொடர்ச்சியான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன.
1970 - 1980 வரையிலான அந்த கால அரசியல் சூழல் பார்வையோடு இதை நோக்கினால்தான் உண்மை புரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...