சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” - மஹா பெரியவா.
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிரார்த்தம்.
தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ?
தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.
நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது?
வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும்.
அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான்.
அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும்.
இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ' யக்ஞோபவீதம் ' என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ' ப்ராசீனாவீதம் ' என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ' நிவீதம் ' என்றும் பெயர்.
பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார்.
அந்த அலசலில், " நிவீதம் மநுஷ்யாணாம் " - மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார்.
ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.
---மஹா பெரியவா வாக்கு.
சந்தியாவந்தனம் :
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம்.
சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம்.
கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;
ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா?
‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான்.
இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.
‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’
என்று சிலர் கேட்கலாம்.
வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில்
“பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான்.
ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது.
“வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும்,
யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும்,
தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது.
கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும்.
இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.
அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம்.
No comments:
Post a Comment