Friday, January 6, 2023

தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.!*

 *ன்று (07/01/2023) திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.!*

🌝☘️🌝☘️🌝☘️🌝☘️🌝
திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதம் திருவாதிரை திருநாளில் இந்த விரதம் இருப்பது கொங்கு மண்டலத்தில் சிறப்பானதாகும். இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர்.
நம் ஊரில் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக சோமவார விரதம் இருப்பார்கள். ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பு விரதம் இருந்து கணவனுக்காக அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர் பெண்கள். அதே போல கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் மாசி மாதத்தின் இறுதி நாளில் காரடையான் நோன்பு இருந்து இறைவனை வழிபடுகின்றனர். அதுபோலவே மார்கழி மாதம் திருவாதிரை நாளில் முழுநிலவும் இணைந்திருக்க விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடிப்படையில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நாள் அற்புதமான நாள். கணவனின் தீர்க்க ஆயுள் வேண்டி பெண்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடும் நாள். திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்களை பிறந்த வீட்டுக்கு அழைத்து தம்பதி சமேதராக விருந்து படைத்து வாழ்த்தி திருவாதிரை களி கொடுத்து தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றனர். இந்த நாளில் கன்னிப்பெண்களும் திருமணம் ஆனவர்களும் விரதம் இருந்து இறைவனை வழிபடலாம். திருவாதிரை நாளில் அந்த ஆதிரையானை நினைத்து விரதம் இருந்து இரவில் முழு நிலவை கண்டு வணங்கி 18 வகை காய்கறிகளை சமைத்து விரதம் முடிப்பது இன்றைக்கும் தமிழகத்தில் சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது.
🌝☘️
*தீர்க்க சுமங்கலி வரம்*
🌝☘️
கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து வரும் முதல் மார்கழி திருவாதிரை தான் மாங்கல்ய நோன்பு. முதல் நோன்பு பெண் வீட்டில் தான் விஷேசமாக கடைபிடிப்பார்கள். நோன்பிற்கு மாப்பிள்ளை வீட்டார் அவரது பங்காளிகளும் அழைக்கப்படுவார்கள். நோன்பிருக்கும் பெண் திருவாதிரை அன்று அதிகாலை 5 மணிக்கு பட்டினி சோறு உண்டு ஆரம்பிப்பார். அவரோடு அவர் வீட்டு பெண்களும் நோன்பு இருப்பார்கள். பகல் முடிந்து இரவு வந்ததும் பூஜைகள் ஆரம்பமாகும்.
🌝☘️
*நிலவு தரிசனம்*
🌝☘️
மஞ்சளில் விநாயகர் செய்து அருகம்புல் சாற்றி விபூதி சந்தனம் குங்குமம் இட்டு விநாயகர் முன், ஒரு தட்டில் மாங்கல்ய சரடுகள் வைக்கப்படும். நோன்பு பெண்ணை பேழையில் நிற்க வைத்து பங்காளி பெண் நிறை நாழி சுற்றி பின் விநாயகருக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். பின் வாசலில் அப்பெண்ணை நிறுத்தி பங்காளிப்பெண் சொம்பில் நீரெடுத்து மூன்று முறை ஊற்ற அப்பெண் நிலாவை பார்த்து நீரை தெளித்து வழிபடுவார்.
🌝☘️
*18 வகை காய்கறிகள் படையல்*
🌝☘️
நோன்பை நிறைவு செய்ய விநாயகருக்கு 18 வகை காய்கறிகள் சமைத்து,திருவாதிரை களி,பச்சரிசி அடையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து வழிபட்டு அதன்பின் உட்கழுத்துசரடு எனும் மாங்கல்ய நூலணிகளை அணிந்து நோன்பு நிறைவு பெறும். பின்னர் விருந்து சாப்பிட்டு அனைவரும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
🌝☘️
*முப்பெரும் தேவியர் வழிபாடு*
🌝☘️
இந்த நாளில் தாலி சரடு மாற்றலாம். சூரிய உதயத்திற்கு முன்பாகவே தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம். காலையில் தாலி சரடு மாற்றும் போதும் கணவர் கையினால் தாலி சரடு கட்டிக்கொண்டு ஆசி வாங்கலாம். நோன்பு இருக்காதவர்கள் நமது வீட்டில் வடை, பாயாசம் செய்து வழிபடலாம். சாதம், சாம்பார், களி செய்யலாம். 18 வகை காய் சேர்த்து சாம்பார் அல்லது கூட்டு செய்யலாம். மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி நமது குல தெய்வத்திற்கு படையல் போட்டு வணங்கி அதை கணவருக்கு சாப்பிட படைக்கலாம்.
🌝☘️
*திருவாதிரை நோன்பு பலன்*
🌝☘️
இந்த நாளில் கணவர் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும். கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கலாம். இந்த நோன்பு யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சிவ பார்வதியின் அருள் கிடைக்கும். தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த நோன்பிருந்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.
May be an image of 3 people and text that says 'நாளை திருவாதிரை நாளில் vsm மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...