நான் இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்.
மகனோ மகளோ மடியில் வைத்துக்கொள்ள விரும்பலாம்பெற்ற பிள்ளைகளை இன்பெக்சன் என பேழை கொண்டு பிரிக்காதீர்.
மருமகன், மருமகள் மானசிகமாய் சில சொற்களை கூற கைபிடிக்க நினைக்கலாம்.
அண்ணன், தங்கை
அங்கம் தொட்டு
அழ ஆசை கொள்ளலாம்.
பேரக் குழந்தை
தட்டி எழுப்ப
முயலலாம்.
தோழன் ஒருவன்
கடைசியாக கரம் தொட முயற்சிக்கலாம்.
பழகிய
தோழிகள் ஆடை சரி செய்வதாய் அங்கம் தொட விரும்பலாம்.
அன்பை காட்டத் தெரியாதோர் கால் தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்ள செய்யலாம்.
காதலித்தவர் அப்போதாவது மாலையிட்டு யாரும் அறியாமல் தொட விரும்பலாம்.
கதறி ஓடி வரும் உறவுகள் அன்று.
இன்று கனத்த மனதோடு கையில் மாலையோடு வரும் பொழுது கட்டி அழாமல் கண்ணாடிப் பேழை தடுக்கிறதே.
உயிரற்று போனால் என்ன?
கடைசியாய் சில வருடல்கள் உயிரல்லோருக்கு தேவை.
தீ தொடும் முன் சில கண்ணீர் துளி அந்த உடலை தொடட்டும்.
சாம்பலாகு முன் சக மனிதனின் தொடுதலோடு சவம்மடங்கட்டும்.
இறந்தபின் கண்ணாடி
பேழைக்குள் அடைக்காதீர்.
எல்லாம் அந்த ஒரே ஒரு
நாள் மட்டுமே
கண்ணீருடன்.
இதில் உள்ளவை
அத்தனையும்
நிதர்சமான
உண்மை.
எனக்கான சந்தேகம்:-
தற்போதைய காலகட்டத்தில் காலை இறந்து மாலை எடுத்து விடலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்கும் கண்ணாடி பெட்டி வைப்பதன் காரணம் என்ன?
என் அப்பாவை கண்ணாடி பெட்டியில் இருந்து எடுக்க சொல்லி அவர்கள் உடலை தொட்டுப் பார்த்து சிறிது நேரம் கையைப் பிடித்துக் கொண்டு அழுத வண்ணம் அமர்ந்திருந்தேன் நான்.
என் ஆருயிர் தோழன் இறப்பின் போது அவர் கைவிரல் மடக்கி இருந்தது. கண்ணாடி பெட்டியை எடுத்த தருணத்தில் அந்த விரலை பிடித்து நேராக்க முயற்சி செய்தேன்.
மேலே இருக்கும் அத்தனை செய்தியும் உண்மை என்பதை இப்போது உணர்கிறேன்.
என் இறப்பின் போது என் கண் தானம் செய்யுங்கள். அப்படி தானம் செய்வதற்கு தடையாக ஏதும் சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளது போல் என்னை கண்ணாடி பெட்டியில் வைக்க வேண்டாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.
ஆகையால் தான் கண்ணாடி பெட்டியில் வைக்கும் பழக்கத்தை உடைக்க முயற்சி செய்கிறேன்.
No comments:
Post a Comment