கேட்ட மாத்திரத்தில் “அட” என்று வியக்க வைக்கும் டிபன் “அடை” – அந்தக் காலப் பாட்டிகளின் ஃபேவரிட் பலகாரமும் அடையும் வெல்லமும்தான்!
இட்லி, தோசை, பூரி போன்ற ஃபாஸ்ட் பெளலர்கள் போரடித்தால், மாற்றுக்கு வரும் ஸ்பின் பெளலர் அடை! ( என்னது, உப்புமாவா? அவர் ட்வெல்த் மேன் – அவசரத்துக்கு கூப்பிட்டுக்கொ ’ல்லலா ’ம்!).
காலையில் ஊறவைத்த அரிசி, து.பருப்பு, க.பருப்பு கலவையை மதியம் காபி கடையுடன் (மதிய காபி நேரத்துக்கு செல்லப் பெயர்!) மிக்சியில் (அல்லது கல் உரலில்) இரண்டு, மூன்று மிளகாய் வற்றலுடன் சிறிது கரகரவென்று, கூழாக இல்லாமல் அரைப்பது, மாலை சற்றே தடிமலான ‘மொறு’’மொறு’ அடைக்கு உத்திரவாதம்!
மஞ்சளுக்கும், ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட ‘பீச்’ கலரில் அடைமாவு – சிறு சிறு புள்ளிகளாக சிவப்பு மிள்காய்த் துகள்கள், எடுத்த கரண்டியில் தளும்பாமல், ஸ்திரமாய் நிற்பது – தோசைக் கல்லில் நடுசெண்டரில் இருந்து மெதுவாகப் பரவத் தோதானது! சிறிது தாராளமாக வார்க்கப்படும் எண்ணை, தடிமனான அடையின் மெரூன் கலரில் முறுகலான ஓரங்களுக்கு முக்கியம்! அவ்வாறே அடையின் நடுவில் கீறப்படும் ஓட்டையில் விடும் எண்ணையும்!
கருவேப்பிலை, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பல்லு பல்லாய் (சின்ன அழகிய அரிசிப்பல் போல!) தேங்காய்த் துண்டுகள், சிறு கத்தரித் துண்டுகள் சேர்ப்பதில் வேலை மெனக்கெடல் உண்டென்றாலும், அடையின் சுவைக்கு அவற்றின் பங்கு, அலாதியானது!
தோசையைப் போல் ஒல்லியாக வார்ப்பதுவும், ஓட்டல்கள் போல் ஒரு பக்கம் மட்டும் வேக வைப்பதுவும் அடைக்கு விரோதமானவை! மெரூன் கலரில் ‘க்ரிஸ்ப்’பான ஃப்ரில் ஓரங்களும், அங்கங்கே நம்மை முறைத்துப் பார்க்கும் தேங்காய்/ வெங்காயத் துண்டுகளும் நேசமான அடையின் அடையாளங்கள்!
லாரல் இணை ஹார்டியைப் போல் அடைக்கு இணை, அவியல்தான்! காய்கறிகளுடன் ஓடும அவியலைவிட, வைத்த இடத்தில் நிற்கும் ( ராமன் முதுகில் அம்பறாத்துணியில் சொறுகி வைத்த அம்புகளைப் போல், நீளமாய் வெட்டப்பட்ட உருளை, சேனை, பீன்ஸ், மாங்காய், கேரட் துண்டுகள் துருத்திக் கொண்டு நிற்பது அவசியம்!) அவியலே என் சாய்ஸ்!
நல்ல மோர்க்குழம்பு (நீரோட்டமான ‘கடி’ – வடநாட்டு மோ.கு. மாதிரி – இதற்கு உதவாது!), பல்லில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அடைக்கு ஏற்ற ஜோடி!
மிளகாய்ப் பொடி – நல்லெண்ணை // வெல்லம் – வெண்ணை // வீட்டில் வைத்த அரைத்துவிட்ட சின்ன வெங்காய சாம்பார் எல்லாம் என்னதான் ஜோடி சேர்ந்தாடினாலும், கொஞ்சம் ’ஆபத்துக்குப் பாவமில்லை’ ரகம்தான்!
கல்லிலிருந்து, நேராகத் தட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் அடைகளுக்கு, உடனே வாயில் அடைக்கலம் கொடுப்பதுதான் நாம் அடைக்குச் செய்யும் மரியாதை. ஆறினது, ஹாட் பேக்கில் வியர்த்ததெல்லாம், ‘ஆறின கஞ்சி…..’ கதைதான்!
முதல்நாள் அடை மாவில், வெட்டிய வெங்காயம் சேர்த்து, நல்ல தேங்காய் எண்ணையில் மறுநாள் வார்க்கப்படும் முறுமுறு அடைக்கு ஒரு தனி மவுசும், ருசியும் உண்டு.- தே.எண்ணையுடன் சேர்ந்த மி.பொடியுடன் அந்த அடை உள்ளே செல்லும் ஒவ்வொரு முறையும் காதில் நாரத கானம் கேட்கும் பாக்கியம் பெறக்கூடும்!
ஆந்திர அன்பர்களின் அடை, ‘பெசரெட்’ – கொஞ்சம் அரிசியும், நிறைய பயத்தம்பருப்பும் சேர்ந்தது – தோசை போல மெல்லியதாக வார்த்து, மேலே பச்சைமிளகாய் விழுது, வெங்காயம், கொத்துமல்லி மற்றும் பெயர் தெரியா பொடிகள் தூவி ஒரு பக்கம் வேகவைத்த வஸ்து – தேங்காய் அல்லது கொத்தமல்லி கார சட்னியுடன் கண்ணில் நீரை வரவழைக்கும் டூயட்! இந்த பெசரெட்டின் நடுவில் ஒரு கரண்டி உப்புமாவை வைத்து மடித்துக் கொடுத்தால், அது ’’பெசரெட் உப்புமா” – நன்றாக இருந்ததாக என் சின்னப் பெண்ணின் திருமணத்தில் சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் – பெண்ணின் தோப்பனார் – எனக்கு பாக்கியம் இல்லை – நான் போனபோது தோசைக்கல்லும், கரண்டியும் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்தன!
அடையும் வெல்லமும் அந்தநாளைய பாட்டிகளின் பலகாரம் – ஆரோக்கியமானது. பருப்பில் புரதமும், வெல்லத்தில் இரும்புச் சத்தும் சேர்ந்து, ரத்தம் ஊறுகிறது – பாட்டிகளை மிஞ்சும் டயடீஷியன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்!
தயிர் சாதத்துக்கு, அடையும், மிளகாய்ப் பொடியும் நல்ல சைட் டிஷ் – அறியாதவர்கள், முயற்சித்து முக்தி அடையலாம்!
கொஞ்சமும் அடை ஜாடையே இல்லாத காரடையான் நோன்பு வெல்ல அடைக்கும்,, உப்பு அடைக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது – தெரிந்தவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து, சொந்த செலவில் பக்கத்து ஓட்டலில் அடையுடன் வெண்ணை முழுங்கி பிறவிப் பயன் அடையலாம்!
No comments:
Post a Comment