" *ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது..என்பதை ..விளக்கும் எளிய கதை*
--------------------------------------------------------
மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது.
மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டில் 02/01/2023 மற்றும் 23/12/2023 என இரண்டுமுறை வருகின்றது.
அதன்படி 2023ஆம் ஆண்டின் முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் 21 நாட்கள் நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வித்தியாசமான அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10வது நாளான வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை புரிவார்கள்.
பெருமாள் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க, பக்தர்களும் அதே சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம்.
ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள்.
அந்த விளையாட்டில் பாம்பும், ஏணியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும். இது ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் 3.30க்கு எழுந்து குளித்து விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிய வரம் பெறுவோம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
-------------------------------------------------
*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்*
No comments:
Post a Comment