பெரம்பலுார் அருகே வி.சி. கட்சி நிர்வாகிகள் காரில் மறைத்து எடுத்து சென்ற 2 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்து செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
பெரம்பலுார் அருகே பேரளி சுங்கச்சாவடி பகுதியில் ஆலத்துார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11:00 மணியளவில் அரியலுார் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரின் உள்ளே ஒன்றும் இல்லை. காரில் வந்தவர்களுக்கும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காரை பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு ஓட்டி வந்தனர்.
அங்கு டி.ஆர்.ஓ. அழகிரிசாமி குன்னம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரில் சோதனை நடந்தது. காரின் கதவுகளுக்கு உள் பகுதியிலும் சீட்களின் அடியிலும் கட்டுக்கட்டாக 1 கோடியே 99 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலரான திருச்சி பிரபாகரன் 45, பெரம்பலுார் முன்னாள் மாவட்ட செயலர் தங்கதுரை 50, சென்னை மாரஸ் 30, திண்டுக்கல் தங்கம் 42 ஆகியோரை போலீசார் பிடித்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பிடிபட்ட நால்வரும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நால்வரிடமும் தனித்தனியாக விசாரணை நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தனி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதும் பணம் பிடிபட்ட இடம் சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட குன்னம் சட்டசபை தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திருமாவளவன் தரப்பில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க இந்த பணம் எடுத்து செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment