Wednesday, December 16, 2020

லஞ்ச முதலை பாண்டியனின்.. ராஜ்ஜியத்தில் உய்யலாலா.

 சுற்றுச்சூழல் இயக்கக கண்காணிப்பாளர் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில், 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான, தங்கம், வைர நகைகள் சிக்கியுள்ள நிலையில், இவர் லஞ்ச முதலையாக செயல்பட்டு வந்தது குறித்து, மலைக்க வைக்கும் புகார்கள், போலீசாரிடம் குவிந்து வருகின்றன.சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் செயல்படும், சுற்றுச்சூழல் துறை இயக்ககத்தில், கண்காணிப்பாளராக பாண்டியன், 58, என்பவர் பணிபுரிகிறார்.


சுற்றுச்சூழல் துறை, லஞ்ச முதலை பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

கடந்த, 2019ல் ஓய்வு பெற இருந்த இவருக்கு, மேலிட செல்வாக்கு காரணமாக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. கோட்டை வட்டாரத்தில், பாண்டியனுக்கு தனி செல்வாக்கு உண்டு; லஞ்சம் வசூலிப்பதில் கறார் பேர்வழி. சுற்றுச்சூழல் இயக்ககத்தின் கீழ் தான், காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகள் மற்றும் ஏரிகள் மாசுபடுவதை தடுத்தல், தேசிய ஏரிகள் பாதுகாப்பு திட்டம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொள்ளாத, அனைத்து வகையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளையும், இந்த இயக்ககம் தான் செயல்படுத்தி வருகிறது.

கடலோரப் பகுதிகளில் பண்ணை வீடுகள், சொகுசு விடுதிகள் கட்டுதல் மற்றும் தொழிற்சாலை, அடுக்குமாடிகட்டடங்கள் கட்டுதல் என, எந்த பணிகள் நடந்தாலும், சுற்றுச்சூழல் இயக்ககத்தின், தடையின்மை சான்று இல்லாமல் செய்ய முடியாது. பாண்டியனின் பார்வைக்கு செல்லாமல், எந்த விதமான தடையின்மை சான்றும் வாங்க முடியாது.அரசியல் மேல்மட்டம், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் கைப்பாவையாக செயல்பட்ட பாண்டியன், சென்னை மெரினா கடற்கரையில், ஜெயலலிதாவுக்கு கட்டப்படும் நினைவிட ஒப்பந்ததாரரிடமும், தன் வேலையை காட்டியதாக கூறப்படுகிறது. அத்துடன், சுற்றுச்சூழல் துறையில், பணி நியமனம் தொடர்பாக, தஞ்சாவூரைச் சேர்ந்த, ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருவரிடம், 15 லட்சம் ரூபாய் கேட்டு உள்ளார்.

அந்த முக்கிய புள்ளி, பாண்டியனின் லஞ்ச சாம்ராஜ்யம் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்தே, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கவனம், பாண்டியன் பக்கம் திரும்பி உள்ளது. இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 1.37 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம், வைர நகைகள், சொத்து ஆவணங்களை, பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு, 1,500 ஏக்கர் ஏரி நிலத்தை தாரை வார்த்தது, மேலிடத்துக்கு தெரியாமல், பல கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை பதுக்கியது என, பாண்டியன் குறித்து மலைக்க வைக்கும் புகார்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு குவிந்து வருகின்றன. இதன் உண்மை தன்மை குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுவரை...



லஞ்ச ஒழிப்பு போலீசார், அக்., 1ல் இருந்து, டிச., 14 வரை, சார் - பதிவாளர் அலுவலகங்கள் உட்பட, 127 இடங்களில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். 6.97 கோடி ரூபாய் பணம்; 7 கிலோ தங்கம்; 10 கிலோ வெள்ளி பொருட்கள்; 5.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம்; நிரந்த வைப்பு தொகை, 37 லட்சம் ரூபாய் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, நாகை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தனராஜ் உட்பட, 33 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...